ADDED : ஆக 08, 2025 07:50 AM

முல்லாவும், அவரின் உதவியாளரும் வியாபார விஷயமாக நகரத்திற்குச் சென்றனர். சந்தேக புத்தி கொண்ட உதவியாளர் அங்கு சென்றதும், ''சந்து, தெருக்கள் எல்லாம் மக்கள் அலை மோதுகிறார்களே... போக வேண்டிய இடத்தை மக்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள்'' என ஆச்சரியப்பட்டார். இரவில் இருவரும் ஒரு சத்திரத்தில் தங்கினர்.
அப்போது உதவியாளர், ''காலையில் கண் விழிக்கும் போது என்னையே நான் மறந்தால் என்ன செய்வது?'' எனக் கேட்டார்.
முல்லா சிரித்தபடி, ''கவலை வேண்டாம். இந்த சிவப்புத் துணியை காலில் கட்டிக் கொள்ளுங்கள். எழுந்ததும் காலினை பார்த்தால் நீங்களே உங்களை அடையாளம் காணலாம்'' என்றார்.
''நல்ல யோசனை'' எனச் சொல்லி அதைச் செய்தார். அவர் துாங்கியதும் சிவப்புத் துணியை அவிழ்த்துத் தன் காலில் கட்டினார் முல்லா.
காலையில் எழுந்ததும் ''காலில் துணி இல்லாததால், 'நான் காணாமல் போனேனே' என கூச்சலிட்டார் உதவியாளர். அருகில் இருந்த முல்லாவை நோக்கி, ''இதோ பாருங்கள் என் சிவப்புத்துணி உங்கள் காலில் இருக்கிறது. நீங்கள்தான் நான்'' என்றார்.
அவரது கூச்சலைக் கேட்ட அனைவரும் ஏளனமாகச் சிரித்தனர். புத்திமதி சொல்லி அமைதிப்படுத்தினார் முல்லா.