sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

விநாயகரின் தலைநகர்

/

விநாயகரின் தலைநகர்

விநாயகரின் தலைநகர்

விநாயகரின் தலைநகர்


ADDED : ஆக 20, 2025 01:31 PM

Google News

ADDED : ஆக 20, 2025 01:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விநாயகரின் தலைநகராக திகழும் தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழியில் பாற்கடலில் எழுந்த நுரையால் ஆன விநாயகர் அருள்புரிகிறார். அமிர்தம் பெற விரும்பிய தேவர்கள், அசுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வாசுகி பாம்பு விஷம் கக்கியது. அதன் உஷ்ணம் தாங்க முடியாமல் தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

'முதற்கடவுளான விநாயகரை வழிபட்டால் உங்கள் பிரச்னை தீரும்' என சிவன் வழிகாட்டினார். உடனே தேவர்கள் பாற்கடலில் எழுந்த நுரையில் விநாயகர் செய்து வழிபட்டனர். அதன்பின் பாற்கடலைக் கடைய அமிர்தம் கிடைத்தது. தேவர்கள் உருவாக்கிய இந்த விநாயகர் இங்கிருப்பதால் விநாயகரின் தலைநகரமாக இத்தலம் போற்றப்படுகிறது. வெள்ளை நிறம் கொண்டவர் என்பதால் 'சுவேத விநாயகர்' எனப்படுகிறார். வெள்ளை உள்ளம் கொண்ட இவரை எங்கிருந்து வழிபட்டாலும் பலன் கிடைக்கும்.

கவுதம முனிவரால் சாபத்திற்கு ஆளான இந்திரன் பூலோக சிவத்தலங்களை தரிசிக்க புறப்பட்டான். அப்போது தேவலோகத்தில் தான் வழிபட்ட சுவேத விநாயகரை ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டான். இத்தலத்தை இந்திரன் அடைந்த போது சுவேதவிநாயகர் இங்கு நிரந்தரமாக தங்க விரும்பினார். அதற்கு உதவி செய்ய சிறுவன் வடிவத்தில் சிவன் இங்கு வந்தார்.

சிறுவனைக் கண்ட இந்திரன் பெட்டியைக் கொடுத்து, ''நான் கோயில் வழிபாட்டை முடித்து வரும் வரை இந்த பெட்டியை வைத்திரு'' எனச் சொல்லி வழிபாட்டுக்குச் சென்றான். சிறுவனாக வந்த சிவன் அந்தப் பெட்டியை பலி பீடத்தின் அடியில் வைத்து விட்டு மறைந்தார். இந்திரன் எவ்வளவோ முயற்சித்தும் பெட்டியை எடுக்க முடியவில்லை. அப்போது '' விநாயகர்சதுர்த்தியன்று வெள்ளை விநாயகரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் பூஜித்த பலனை அடைவாய்'' என அசரீரி ஒலித்தது. இந்திரனும் அப்படியே செய்து விநாயகரின் அருள் பெற்றான்.

பாற்கடல் நுரையால் ஆனதால் விநாயகர் மீது பச்சைக் கற்பூரப் பொடியை கைபடாமல் துாவி வழிபடுகின்றனர். வஸ்திரம், சந்தனம், பூக்கள் சாத்தும் வழக்கம் இல்லை. இங்குள்ள கருங்கல் ஜன்னல் வழியாக விநாயகரை தரிசிக்கலாம். மகாவிஷ்ணுவின் கண்களில் இருந்து தோன்றிய கமலாம்பாள், பிரம்மாவின் வாக்கில் இருந்து தோன்றிய வாணியை சுவேத விநாயகர் திருமணம் புரிந்ததால் வழிபடுவோருக்கு திருமண யோகம் தருபவராக விளங்குகிறார். தும்பிக்கையை வலமாக சுழித்த வலஞ்சுழி விநாயகர், பெரியநாயகியம்மன், கபர்தீஸ்வரர் என்னும் சடைமுடிநாதர் தனித்தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர்.

விநாயகர் அருளால் அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து வெளிப்பட்ட காவிரி நதி, தமிழகம் நோக்கி வருவதை அறிந்த மன்னன் ஹரித்துவஜன் பரிவாரங்களுடன் காணச் சென்ற போது இத்தலத்திற்கு வடகிழக்கில் காவிரி ஒரு துவாரத்தின் வழியாக பூமிக்குள் சென்று மறைந்தது. அப்போது வானில் '' சடாமுடி தரித்த முனிவரோ அல்லது மகுடம் சூடிய மன்னரோ இத்துவாரத்தினுள் புகுந்து உயிர் துறந்தால் காவிரி மீண்டும் மேலே வருவாள்'' என அசரீரி ஒலித்தது. மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஹேரண்ட மகரிஷி என்பவர் உயிர் துறந்தார். கும்பகோணம் அருகிலுள்ள மேலக்காவேரி என்ற இடத்தில் காவிரி வெளிப்பட்டு மீண்டும் ஓடத் தொடங்கினாள்.

எப்படி செல்வது: தஞ்சாவூர் செல்லும் வழியில் 4 கி.மீ.,

விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, மகாசிவராத்திரி.

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0435 -- 245 4421, 245 4026

அருகிலுள்ள கோயில்: சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோயில் 1 கி.மீ., (கல்வி வளர்ச்சிக்கு...)

நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0435 - 245 4421






      Dinamalar
      Follow us