
மகாவிஷ்ணுவின் பூர்ண அவதாரம் கிருஷ்ணரே என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். ஆந்திர மாநிலம் சித்துார் கார்வேட்டி நகரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் ருக்மணி, சத்யபாமாவுடன் வேணுகோபால சுவாமி என்னும் பெயரில் அருள்பாலிக்கிறார்.
முற்காலத்தில் இப்பகுதி முழுவதும் காடாக இருந்தது. அதை சீர்படுத்தி நகரமாக்கியதால் 'காடு வெட்டி நகரம்' எனப்பட்டது. இது தற்போது கார்வேட்டி நகரம் என்றாகி விட்டது. பல்லவ மன்னரான நந்திவர்மன் இந்நகரை வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானமாக அளித்துள்ளார்.
கோயிலின் வாசலில் நின்றாலே நல்ல அதிர்வலைகள் நம்மை பரவசப்படுத்துகிறது. உள்ளே நுழைந்தால் ஒவ்வொரு பிரகாரமும் துாய்மை, தெய்வ அம்சம், கலைநயத்துடன் மின்னுகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் தரிசனம் தருகிறார்.
ஆயிரம் நிலவுகள் ஒன்று சேர்ந்தது போல கிருஷ்ணரின் முகம் பிரகாசிக்கிறது. அவரது பார்வை பட்டதும் நம் மனம் குளிர்கிறது. அவரின் பிஞ்சுப்பாதம், 'என்னைப் பற்றிக் கொள். பூரண சரணாகதியைக் கற்றுக் கொள்' என சொல்லாமல் சொல்கிறது. வாழ்வில் நடக்கும் அத்தனை செயல்களுக்கும் சூத்திரதாரியாக இருக்கும் இவரை சரணடைந்தால் பேரின்பம், நிம்மதி, நிதானம் எல்லாம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும். அவல் நைவேத்யம் செய்தால் போதும்; துன்பங்களை எல்லாம் தீர்த்து வைக்கிறார்.
கிருஷ்ணரின் மனைவியரான ருக்மணி, சத்யபாமாவைக் கண்டதும் நம் கவலை காணாமல் போகிறது.
இக்கோயில் வேங்கடராஜா வம்ச மன்னர் வேங்கடப்பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. தற்போது திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ளது. தெலுங்கு கவிஞரான சாரங்கபாணி மூலவர் வேணுகோபாலர் மீது கீர்த்தனைகள் பாடியுள்ளார்.
குழலுாதுபவன், நாட்டியக்காரன், தேரோட்டி, மாடு பிடிவீரன், மல்யுத்த சூரன், துாதன், வெண்ணெய் திருடி, கீதாசிரியன், குரு, காதலன் என பல வடிவங்களில் தோன்றி தர்மத்தை நிலைநாட்டியவர் கிருஷ்ணர்.
குருஷேத்திரத்தில் அர்ஜூனனுக்கு அவர் சொன்ன போதனையே பகவத் கீதையானது. அதன் மீது பக்தி கொண்ட அனைவரும் இங்கு வந்து வேணுகோபால சுவாமியை தரிசிப்பது அவசியம்.
எப்படி செல்வது: திருத்தணியில் இருந்து புத்துார் 33 கி.மீ., அங்கிருந்து 13 கி.மீ.,
விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, ஓணம், தீபாவளி, வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி.
நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி
அருகிலுள்ள கோயில்: சீனிவாசமங்காபுரம் கல்யாண வேங்கடேச பெருமாள் கோயில் 46 கி.மீ., (திருமணம் நடக்க...)
நேரம்: அதிகாலை 5:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 0877 - 210 0105