/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஆளுமைகளுடன் ஒரு சந்திப்பு
/
அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஆளுமைகளுடன் ஒரு சந்திப்பு
அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஆளுமைகளுடன் ஒரு சந்திப்பு
அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஆளுமைகளுடன் ஒரு சந்திப்பு
ஜூலை 25, 2025

தமிழ் ஆளுமைகளுடன் ஒரு சந்திப்பு என்ற நிகழ்ச்சியை அட்லாண்டா மாநகர தமிழ் சங்கம் சிறப்பாக நடத்தியது.
கலைத்துறையிலும் சமூக செயல்பாட்டிலும் சிறந்து விளங்குகின்ற ஆளுமைகளான, இயக்குனர் சீனு ராமசாமி, பாடல் ஆசிரியர் சினேகன், சமூக நீதி செயல்பாட்டாளர் சுப வீரபாண்டியன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அட்லாண்டா மாநகர தமிழ் மக்களுடன் உரையாற்றி சிறப்பித்தனர். மாலை 6:30க்கு இந்த நிகழ்ச்சி தமிழ்த் தாய் வாழ்த்து உடன் தொடங்கி, சங்கத் தலைவர் சண்முகம் சின்னத்தம்பியின் வரவேற்புரை மற்றும் இயக்குனர் குழு தலைவர் கோகுல் ராஜேந்திரனின் முன்னுரையுடனும் துவங்கியது.
முதலில் இயக்குனர் சீனு ராமசாமி நிலம் காட்சி கவிதை என்னும் தலைப்பில் தான் கண்ட எளிய மக்களின் வாழ்வியலை திரைப்படமாக்கியதையும் அதில் தமிழின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தமிழர்களின் வாழ்வியலை உற்று நோக்குதலின் சிறப்பையும் விவரித்தார். அவர் கூறிய தகவல்கள் நம் மக்களை நெகிழ வைத்தாலும், இடையிடையே அவர் சொன்ன நகைச்சுவை செய்திகள், மக்களை சிரிக்கவும் வைத்தது. தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய சீனு ராமசாமி, இயக்குனர் மட்டுமல்ல, ஒரு கவிஞர் மட்டுமல்ல, ஒரு நல்ல நகைச்சுவை கலந்து பேசக்கூடிய சிறந்த பேச்சாளர் என்பதை தெளிவுப்படுத்தி விட்டார்.
அடுத்து பேசிய கவிஞர் சினேகனைச் சங்கத் துணைத்தலைவர் கவிஞர் மருதயாழினி பிரதீபா “ஆறாம்திணையில் புலம்பெயர்வாழ்வு” என்ற கவிதையோடு வரவேற்றார். சினேகன் தமிழ் திரைப்பாடல்களின் இலக்கியத்தின் பங்கு பற்றி உரையாற்றினார். தாலாட்டு முதல் ஒப்பாரி வரை தமிழர்களின் வாழ்வியலில் பாடல்கள் எவ்வாறு இரண்டறக் கலந்துள்ளன என்று அவர் பேசியது அனைவரையும் ஈர்த்தது. பேசியது மட்டுமல்லாமல் அவர் பாடிய நாட்டுப்புறப் பாடல்கள் நம்மை இருக்கையில் கட்டி போட்டு, அப்பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று வந்திருந்த அனைவருக்கும் தோன்றியது. அது அவர்களின் முக மற்றும் அக மகிழ்ச்சியின் வெளிப்பாடான வெடிச்சிரிப்பு மற்றும் கைதட்டல்கள் மூலம் தெரிந்தது.
இறுதியாகப் பேசிய சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் வானில் கிளைகள் மண்ணில் வேர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். கடல் கடந்து வந்த இந்தத் தமிழ் சமூகம், தமிழையும் தமிழர் வாழ்வியலையும் அந்நிய மண்ணில் எவ்வாறு பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்று பெருமைப்பட கூறினார். தமிழர்கள் எவ்வாறு பகையை தவிர்த்து அன்பை வளர்த்து தன் வாழ்வில் உயர வேண்டும் என்று அவர் ஆற்றிய உரையில் கருத்தின் ஆழமும், எண்ணத்தின் உயர்வும், அவர் தம் தமிழ் பேச்சாற்றலின் அகலமும் தெரிந்தது. சக மனிதர்களிடம் வேற்றுமை இன்றி அன்பு பாராட்டுதலையும் பொதுவாழ்வில் அறத்துடன் வாழ்வதையும் அவர் எடுத்துக் கூற கூற மக்கள் நெகிழ்ந்து போனார்கள். இருப்பினும் அவர் அத்தகவல்களை நகைச்சுவையாக எடுத்துக் கூற, மக்கள் மகிழ்ந்தும் போனார்கள்.
மூவரும் பேசி முடித்தவுடன் அரங்கமே எழுந்து நின்று கைதட்டி ஆரவாரப்படுத்தியது, வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை மட்டுமல்ல, ஒரு நல்ல நிகழ்ச்சியை நடத்திய சங்க நிர்வாகிகளுக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது. அக்கைத்தட்டல் அடங்கவே சில மணித்துளிகள் ஆகின.
கதாசிரியர் தன் அனுபவங்களை மக்கள் முன் காட்சிப்படுத்தினார்! பாடலாசிரியர் மக்கள் வாழ்வியலை பாட்டிசைத்தார்! பேராசிரியர் அன்பையும் அறத்தையும் மக்களுக்கு பாடமே எடுத்துவிட்டார்! இயல் தமிழுக்கு சுபவீ, இசைத் தமிழுக்கு சினேகன், நாடகத் தமிழுக்கு சீனு ராமசாமி என வந்திருந்த மூவரும், இந்த நிகழ்ச்சியை ஒரு சிறு “முத்தமிழ் விழா”வாகவே நடத்திவிட்டனர். அவர்களுக்கு என்றென்றும் எங்கள் நன்றி.
மக்கள் மன்றத்தில் உரையாடிய சிறப்பு விருந்தினர்களை நம் சங்கத்தின் இயக்குனர் குழுவைச் சார்ந்தவர்களும், செயற்குழுவை சார்ந்தவர்களும், செயற்பாட்டுக்குழுவினரும், பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பொன்னாடை, கேடயம் பூங்கொத்தோடு இம்முறை நூல்களையும் பரிசாக வழங்கினர்.
செயற்பாட்டு குழு உறுப்பினர்கள் பீட்டர் மற்றும் கணேசன் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி சிறப்பித்தனர். சங்கத்தின் செயலாளர் மது அன்பு நன்றியுரை வழங்கினார். பின்னர் அட்லாண்டா மாநகரத் தமிழ் மக்கள் அனைவரும் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஏறத்தாழ 100 பேருக்கு மேல் வந்திருந்த இந்த நிகழ்ச்சி DOSTI - INDIAN TAP & GRILL உணவகத்தில் நடந்தேறியது. இதன் உரிமையாளர்கள் நம் சங்கத்திற்காக பொருள் எதுவும் பெறாமல் இந்த இடத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி நடக்க அவர்களின் பங்கு மிகமுதன்மையானது. அவர்களுக்கு நம் சங்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த நிகழ்ச்சி நடப்பதற்காக நமக்கு நன்கொடை வழங்கிய ரஜினி ரெஸ்டாரண்ட், சேதுபதி நாச்சியப்பன், தேன்மொழி பிரபாகரன், மதிவாணன் போத்தியப்பன், ராஜ் முத்தரசன், கோபி கிருஷ்ணா, தனுஷ்கோடி ரெங்கநாதன் மற்றும் விருந்தினர் உபசரிப்பிற்கு உதவிய ஜெய் சீனிவாசன் உள்ளிட்ட மற்ற பிற சங்க உறுப்பினர்களுக்கும் இந்தத் தமிழ் சங்கம் என்றென்றும் தன் நன்றியை உரித்தாக்குகிறது.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உழைத்த அனைத்து சங்க செயற்பாட்டாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும், புகைப்படம் எடுக்க உதவிய, ராஜராஜன் ராதாகிருஷ்ணன், பிரேம்குமார், சுரேஷ் தாயுமானவன், அரிமன் அன்பு, மேலும் நிகழ்வு நாளன்று அரங்கத்தில் உதவிக்கரம் நீட்டிய சௌமியா ராஜராஜன், சிவக்குமார் சிவசண்முகம் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை அட்லாண்டாவாழ் தமிழர்களுக்கும் நமது தமிழ்ச் சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
- நமது செய்தியாளர் மருதயாழினி பிரதீபா
Advertisement