/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் இந்திய சமூகநல மன்றம் நடத்திய தொழிலாளர் தின விழா
/
கத்தாரில் இந்திய சமூகநல மன்றம் நடத்திய தொழிலாளர் தின விழா
கத்தாரில் இந்திய சமூகநல மன்றம் நடத்திய தொழிலாளர் தின விழா
கத்தாரில் இந்திய சமூகநல மன்றம் நடத்திய தொழிலாளர் தின விழா
மே 18, 2025

இந்தியத் தூதரகத்தின் கீழ் இயங்கும் இந்திய சமூகநல மன்றம் (ஐ.சி.பி.எஃப்), கத்தாரின் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஆசிய டவுண் வெளி அரங்கில் 'தொழிலாளர் தின விழாவை' வெகு சிறப்பாக கொண்டாடியது. இந்த விழா கத்தார் வாழ் தொழிலாளர் சமூகத்தைச் சார்ந்த சாதனைத் தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதனால் நிகழ்வின் ஒவ்வொரு அசைவும் அடிநாதமும் உழைப்பாளர் சமூகத்தை முன்னிறுத்தியே நகர்ந்தது. 'ரங் தரங் 2025' அதாவது 'வண்ண அலைகள் 2025' என்ற பெயரில் நடந்த இந்த நிகழ்வு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக கத்தாரில் தொடர்ந்து பணியாற்றி வரும் கடைநிலை தொழிலாளர்களின் அளப்பரிய சேவைக்காக சுமார் 20 உழைப்பாளர்களை இந்த வருடம் அங்கீகரித்து கௌரவித்தது, ஐ.சி.பி.எஃப் எனும் இந்திய சமூகநல மன்றம்.
மாலை நேரத்து மஞ்சள் வெயில் சற்று குறைந்த நேரத்தில் 'வண்ண அலைகள் ' நிகழ்வின் ஆரம்ப ஆரவாரம் திசையெங்கும் எதிரொலித்தது. மேடையில் இன்னிசைக் கச்சேரி, மனதைக் கொள்ளை அடிக்கும் வசீகர நடனங்கள், இணைவு இசை என்று வகைவகையான கலைகள் வண்ண அலைகளாக பொங்குவதும் அமைதி கொள்வதுமாக களைகட்ட, 'ரங் தரங்' என்ற பெயருக்கேற்ற நிகழ்வென, அரங்கம் உறுதி செய்தது.
ஐசிபிஎஃபின் பொதுச் செயலாளர் தீபக் ஷெட்டி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து தலைவர் ஷாநவாஸ் பாவா கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக கத்தாருக்கான இந்தியத் தூதர் விபுல் வந்திருந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அவர் தனது தலைமை உரையில், தொழிலாளர் சமூகத்தின் நேர்மையான கடினமான உழைப்பைப் பாராட்டினார். மேலும், மருத்துவம் மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கான விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு முகாம்களை நடத்துவதில் ஐ.சி.பி.எஃப்-ன் பெரும் பங்களிப்பை எடுத்துக்கூறிப் பாராட்டியதோடு, கத்தார் அரசாங்கம் உழைப்பாளர்கள் நலன் குறித்து எடுக்கும் பயனுள்ள திட்டங்களையும் புகழ்ந்து பேசினார்.
மேலும் ஐ.சி.பி.எஃப் தனது வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல கோரிக்கை வைத்து, மனதார வாழ்த்தினார். இந்த நிகழ்வில் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளரும், ஐ.சி.பி.எஃப்-ன் ஒருங்கிணைப்பு அதிகாரியுமான ஈஷ் சிங்கால் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக நேபாளத்தின் தூதர் ரமேஷ் சந்திர பவுடல், கத்தார் சமூகக் காவல் துறையின் இயக்குநர் டாக்டர் இப்ராஹிம் முகமது ரஷித் அல் செமய், தொழிலாளர் அமைச்சகத்தைச் சேர்ந்த சலீம் தார்விஷ் அல் முஹன்னதி, போதைப்பொருள் அமலாக்கத் துறையின் பொது இயக்குநரரும் முதல் நிலை லெப்டினன்ட் அப்துல் சாலிஹ் அல் ஷம்மாரி ஆகியோர் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள் ஆதரவு மற்றும் காப்பீட்டு நிதியின் ஆலோசகரான அப்துல்லா அஹ்மத் அல் முஹன்னதி, கத்தாரின் வளர்ச்சிக்கு இந்திய சமூகத்தின் மதிப்புமிக்க பங்களிப்புகளை வெகுவாகவே பாராட்டினார். சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தைச் சார்ந்த மேக்ஸ் டுனன், ரங் தரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்த விழாவில் கத்தார் சுகாதாரத் துறை நல அமைச்சகத்தின் டாக்டர் முஹம்மத் அல் ஹஜ்ஜாஜ், மனித உரிமை பிரிவின் கேப்டன் நாசர் முபாரக் அல் தோசாரி, தொழிலாளர்களின் ஆதரவு மற்றும் காப்பீட்டு நிதி அமைப்பின் அப்துல்லா முஹம்மத் ஹசன், தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் நல்லுறவு பிரிவின் காலித் அப்துல் ரஹ்மான் ஃபக்ரூ, சமூக காவல் துறையின் கேப்டன் அப்துல் அஜீஸ் முகன்னதி ஆகியோரும் பங்கேற்றனர். இவர்கள் அனைவரையும் இந்த வண்ண விழாவில் ஐ.சி.பி.எஃப் பெருமையோடு கௌரவித்து மகிழ்ந்தது.
இவ்விழாவின் சிறப்பம்சமாக, 30 ஆண்டு காலமாக கத்தாரில் சேவை செய்து, சாதனையாளர் விருது பெற்ற புத்தூர் தயாளு ராகவன் சசிதரன், சுப்பையா முருகன், கக்கோத்தியில் யூசுப், கிழக்காயில் மஹ்மூத், சதேரி சைனுதீன், எமாம்சா முகமது ஜுபேர் ஜிப்ரியேல், தாரு பீடிகயில் காதர் அஷ்ரப், சுந்தரன் கேசவன், குய்யாயில் அகமது, அப்துல் ரஹ்மான் அஜ்மல் கான், நான்சி மார்கரெட் துந்தியில் கேப்ரியல், மாதமுழி பண்டாரகலத்தில் ஹமீது, ஹசன் அப்துல் ரஹ்மான், கயல் மாடத்தில் அலி, சான்ச்சோ கஸ்டிடியோ பெர்னாண்டஸ், நல்லி சுஜாதா, அப்துல் கரீம் எடச்சேரி மொய்து, பூட்டா சிங், பூபந்தர் பிரசாத் தாகூர், நரவேணி பூமையா ஆகியோருக்கு பாராட்டு விழாவை நடத்தி அவர்களை ஊர் அறிய பெருமைப்படுத்தியதுதான்.
வண்ண அலைகளில் விண்மீன்களாக ஒளிர்ந்த மற்ற குறிப்பிடத்தகுந்த தலைவர்கள் ஐ.சி.சி.யின் தலைவர் ஏ.பி.மணிகண்டன், ஐ.எஸ்.சி.யின் தலைவர் இ.பி. அப்துர் ரஹுமான், ஐ.பி.பி.சி.யின் துணைத் தலைவர் அப்துல் சாதர், ஐ.சி.பி.எஃப்-ன் நிகழ்ச்சிக் குழு தலைவர் கே.வி. போபன், மற்றும் ஐ.சி.பி.எஃப் ஆலோசனைக் குழு தலைவர் கே.எஸ். பிரசாத். ஐ.சி.பி.எஃப்-ன் முன்னாள் தலைவர்களான நீலான்ஷு தேய், பி.என். பாபுராஜன், மற்றும் ஜியாத் உஸ்மான் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டு பெருமை செய்தனர்.
மேலும், ஐ.சி.பி.எஃப்-ன் துணைத் தலைவர் ரஷீத் அஹமது, செயலாளர் ஜாஃபர் தையில், நிதித் தலைவர் நிர்மலா குரு, நிர்வாக குழு உறுப்பினர்கள் காஜா நிஜாமுதீன், ஷங்கர் கௌட், மினி சிபி, அமர்வீர் சிங், மணிபாரதி, மற்றும் அமைப்பின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஜரீனா அகாத், நீலாம்பரி சுஷாந்த், ஜாவேத் அஹமது, சதீஷ் விலவில் ஆகியோரும் கலந்து கொண்டு இந்த 'ரங் தரங்' விழாவின் வெற்றிக்கு பெரும் பங்களித்தனர்.
கடைநிலை உழைப்பாளிகளின் அரும்பணியை அடையாளம் கண்டு, அவர்களைப் பெருமைப் படுத்திய விதமும், அதற்காக வண்ணமயமான விழா எடுத்து வெற்றிகரமாக நடத்தி முடித்த பாங்கும், இந்திய சமூகநல மன்றத்துக்கு நற்பெயரையும் நெகிழ்வான பாராட்டுக்களையும் நாலாபக்கமும் பெற்றுத் தந்தது.
- நமது செய்தியாளர் எஸ்.சிவசங்கர்
Advertisement