/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
ஐரோப்பாவில் புரட்டாசி தசல் பூஜை !
/
ஐரோப்பாவில் புரட்டாசி தசல் பூஜை !

ஐரோப்பாவில் ஜெர்மனி நாட்டில் ஹாம் நகரின் காமாட்சி அம்பாள் ஆலயத்தில், புரட்டாசி மாத தளிகை பூஜை அக்டோபர் 5ம் தேதி மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுமார் 20 குடும்பங்கள் முன்னிருந்து நடத்திய இந்த பூஜையில் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, 'கோவிந்தா கோவிந்தா' என்ற திருநாமம் முழங்கி, ஸ்ரீனிவாச பெருமாளை சேவித்து உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தளிகை பூஜை செய்வது பல குடும்பங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் வாழும் சௌராஷ்ட்ரா சமூகத்தை சேர்ந்த மக்கள் தளிகை பூஜையினை 'தசல்' என்றழைத்து மிக சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த தசல் பூஜையில், பிக்ஷை பாத்திரங்களை பெருமாள் முன் பூஜை செய்து, அவைகளை வீடுவீடாக ஏந்தி சென்று, அரிசியினை பிக்ஷையாக பெற்று வருவர். அவ்வாறு பெற்றுவரும் அரிசியினை அறுசுவை உணவாக சமைத்து அனைவருக்கும் பந்தியிட்டு பரிமாறுவது சிறப்பு அம்சமாகும். இவ்வாறு பிக்ஷை பெறுவதன் மூலம் 'தான்' என்ற கர்வம் அகன்று, அனைவருக்கும் பகிர்ந்து பரிமாறுவதன் மூலம் அனைவரும் சமம் என்று சமத்துவத்தை உணர்த்துவதாக கருதுகிறார்கள்.
சௌராஷ்ட்ரா மக்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன் பிற மாநிலங்களில் குடிபெயர்ந்து, மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து வருகிறார்கள். கைத்தறித் தொழிலை பூர்வ தொழிலாக கொண்டிருந்தாலும், தங்கள் திறமைகளை உலகதொழில்நுட்ப வளர்ச்சியுடன் மெருகேற்றி தற்போது பல நாடுகளில் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஐரோப்பாவில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் இச்சமூக மக்கள் தங்கள் பண்பாடு மாறாமல் தசல் பூஜையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தசல் பூஜையில் மேற்கூறிய பிக்ஷை பெறுதல், பெருமாள் மற்றும் தாயார்களுக்கு அபிஷேகம், உள்வீதியுலா, பாராயணம் (விஷ்ணு சஹஸ்ர நாமம், கோவிந்த நாமாவளி, ஹரி பஜனை) என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக, தசலில் பங்குபெற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு, பாரம்பரிய முறைப்படி வாழை இலையில் பரிமாறப்பட்டது. ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், லக்ஸம்பேர்க், என பல நாடுகளில் இருந்து பல்வேறு மக்கள் பக்திப் பரவசத்துடனும், மன நிறைவுடனும் கலந்து கொண்டனர்.
தசல் பூஜை மற்றும் உணவு ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்து கொடுத்த ஹாம் நகரின் காமாக்ஷி அம்பாள் கோவில் நிர்வாகத்திற்கு நன்றி கூறி அனைவரும் விடை பெற்றனர். இவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து ஐரோப்பாவில் ஹாம் கோவிலில் தசல் பூஜை செய்வது இது ஏழாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள்: கோபிநாத் பாதே ஸ்ரீநிவாசன்
- தினமலர் வாசகர் நாகராஜன் தொப்பே
Advertisement