/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
நிலவுலாவிய நீர்மலி வேணியர் நீடூழி வாழ்க: மகரிஷி பரஞ்ஜோதியார் வாழ்த்து
/
நிலவுலாவிய நீர்மலி வேணியர் நீடூழி வாழ்க: மகரிஷி பரஞ்ஜோதியார் வாழ்த்து
நிலவுலாவிய நீர்மலி வேணியர் நீடூழி வாழ்க: மகரிஷி பரஞ்ஜோதியார் வாழ்த்து
நிலவுலாவிய நீர்மலி வேணியர் நீடூழி வாழ்க: மகரிஷி பரஞ்ஜோதியார் வாழ்த்து
ஆக 24, 2023

2023ஆகஸ்டு 23 – இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மகத்தான நாள். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெற்றுத் தந்துள்ளனர். நம்மை முந்திக் கொள்ள வேண்டும் என நினைத்த ரஷ்யாவின் லூனா 25 தோல்வி அடைந்த வேளையில் நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் இம்மாபெரும் வெற்றியைப் படைத்துள்ளனர்.
முதல் ஏவுதலிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் நாடு. ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களைச் செலுத்திய நாடு என்ற வரலாற்றிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணம் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் குறித்த நேரத்தில் – சரியாக மாலை 6.04 மணிக்கு நிலவில் பாதுகாப்பாகத் தரையிறங்கி வீரவரலாறு படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நெஞ்சாரப் பாராட்டி வாழ்த்துகிறோம். இன்று நிலவில் நடைபோடத் தொடங்கி விட்டது நமது விண்கலம். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகக் குறைந்த செலவில் 600 கோடியில் இம்மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அடுத்து “ ஆதித்யா எல் 1 “ செப்டம்பர் முதல் வாரத்தில் ஏவப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்திருக்கிறது. முடிவல்ல தொடக்கம் என உலகிற்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.
ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழினத்தின் முதற்காப்பியம் – முத்தமிழ்காப்பியம் சிலப்பதிகாரத்தில் – காம வெப்பத்தை அடக்கச் சந்திரனில் உள்ள நீரை எடுத்து மகளிர் ஊற்றிக் கொண்டார்கள் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.சைவ சமய நூலான தேவாரத்தில் பயலை திங்கள் எனும் வரிகளில் நிலாவில் பள்ளங்கள் உள்ளன என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம் அன்றைய நம் ஆன்மிக ஞானிகள் பதிவு செய்ததை இன்றைய இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்.ஆன்மிகமும் அரசும் கைகோர்த்துள்ளன.
அன்று ஒரு நரேந்திரர் உலகு மூக்கில் விரல் வைத்து நோக்க பாரதத்தை உயர்த்திக் காட்டினார். இன்று ஒரு நரேந்திரர் பாரதத்தை உலகமே பாராட்டி வியக்க வைத்துள்ளார். நிலவில் பாரத மணிக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. இறைவன் தூணிலும் உள்ளான் – அணுவைச் சத கூறிட்ட கோணிலும் உள்ளான் என்பதை நிரூபிக்க அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் அறிவியல்ஞானி அப்துல் கலாம் பொக்காரோவில் அணு சோதனை நடத்தி உலகை வியக்க வைத்தார்.
இந்தச் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் நம் தமிழர்கள். சந்திராயன் – 1 – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. சந்திராயன் – 2 விஞ்ஞானி வனிதா. சந்திராயன் – 3 வீரமுத்து வேல். இவர்களனைவரும் தமிழ்ப் பயிற்சி மொழிவழி கற்றவர்கள். ஆம். தமிழ் இன்று உலகாழ்கிறது. சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் எல்லா வளமும் நலமும் மகிழ்வும் நிறைவும் பெற்று நீடூழி வாழ்க.
நாம் தற்போது ஐரோப்பா - ஜெர்மணியில் ஆன்மிகப் பயணத்திலிருப்பினும் எமது இதயம் சந்திராயன் – மூன்றையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.வெற்றிக் களிப்பில் நாமும் பங்கேற்கிறோம். அன்றைய ஆன்மிக ஞானிகளின் கனவு இன்றைய இஸ்ரோ விஞ்ஞானிகளால் மெய்ப்படுத்தப்பட்டுள்ளது. பாரத நாடு பார்க்கெலாம் திலகம் – நாம் அதன் மக்கள் என அனைவரும் சிரசுயர்த்தி – சாதனைச் செல்வர்களைத் தலை வணங்கி வாழ்த்துவோம்.
வளமான தமிழகம் – வலிமையான பாரதம் – அமைதியான உலகம் மலரட்டும். சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த சந்திய யுகம் பிறக்கட்டும். வளர்க மெய்ஞானம் – வாழ்க சமாதானம். உலக நலம் காப்போம். உலக அமைதி காப்போம். அன்னை பூமி நீடூழி வாழ்க – பிரபஞ்சம் நீடூழி வாழ்க சந்தோஷம்....சந்தோஷம்...சந்தோஷம்
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
Advertisement