/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
'ஜெர்மெனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் தமிழர் கலை விழா'
/
'ஜெர்மெனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் தமிழர் கலை விழா'
'ஜெர்மெனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் தமிழர் கலை விழா'
'ஜெர்மெனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் தமிழர் கலை விழா'
மே 01, 2025

13 வகையான பாரம்பரிய கலைகள், 250 நடனக் கலைஞர்கள், 30 பயிற்றுவிப்பாளர்கள் என மிகப் பிரம்மாண்டமாக நடந்தேறியது பிராங்க்ஃபர்ட் தமிழ் சங்கம் நடத்திய கலைத் திருவிழா 2025. பல்லாயிரம் கோடி மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது இந்தத் திருவிழா. அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் நிவர்த்தி செய்திருந்தது 27 ம் தேதி நடந்து முடிந்த கலைத் திருவிழா.
தமிழ் சங்க உறுப்பினர்கள், அவர்களின் உறவினர்கள், நம் தொப்புள் கொடி உறவான இலங்கைத் தமிழர்கள் என தமிழ் மக்கள் அரங்கம் முழுவதும் வியாபித்திருக்க இன்னொரு பக்கம் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்ட ஜெர்மானியர்கள் மற்றும் ஏர் இந்தியா குழுமத்தினர் என பலதரப்பட்ட மக்கள் ஆர்வத்தோடு வந்திருந்தனர். அதிலும் ஒரு ஜெர்மானிய பெண் சேலை உடுத்தி வந்து அனைவரையும் ஆச்சரியத்தினால் ஆழ்த்தினார். நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய கண்ணன், அந்தப் பெண்ணை மேடைக்கு அழைத்து நவரசத்தை நடித்துக் காட்டி, திரும்ப செய்யும் படி சொன்னார். 'வெட்கம்' ரசத்தை அந்தப் பெண் முகத்தில் காட்டிய போது, அடடா....! சேலை கட்டினாலே எந்தப் பெண்ணுக்கும் அழகும் வெட்கமும் வந்துவிடும் போல! அத்தனை அழகு.
கனகச்சித ஏற்பாடுகள்
தமிழ் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை எத்தனை பாராட்டினாலும் தகும். இரவு பகல் பாராமல் விழா முன்னேற்பாடுகளை கனக்கச்சிதமாக செய்திருந்தார்கள். நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்கு செல்லும் வழிமுறைகளை சொன்னது முதல் இருக்கை ஏற்பாடு, உணவு, கார் பார்க்கிங் மற்றும் குழந்தைகளின் வண்டிகளுக்கான இட ஒதுக்கீடு என ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களின் உழைப்பை கண்கூடாக பார்க்க முடிந்தது.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. கனக ராணி ஐயப்பன் வரவேற்புரை வழங்க கண்ணன், ஐஸ்வர்யா ஸ்ரீதர், தாரிணி மற்றும் சொர்ணமாலதி என நான்கு பேர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். ஒவ்வொரு கலை நிகழ்ச்சியும் ஆரம்பமாவதற்கு முன் அந்த நாட்டுப்புறக் கலையின் விபரம் மற்றும் அது உருவான காரணம் இரண்டையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கி கூறிய பின்னரே அந்த கலைகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன. அதனால் வந்திருந்த பிற மொழிக்காரர்களும் நிகழ்ச்சியை புரிந்து ரசிக்க முடிந்தது.
ஒன்ஸ்மோர் கேட்க வைத்த நடனம்
தொடக்க நிகழ்ச்சியாக பரதநாட்டியம் மூலம் கண்ணனை சிறு குழந்தைகள் அழைக்க, அடுத்தபடியாக மீனவர் ஆட்டம் களை கட்டத் தொடங்கியது. பொம்மலாட்டமும் பின்னலாட்டமும் விசில் மற்றும் கரகோஷங்களை அள்ளியதோடு மட்டுமல்லாமல் 'கொக்கு பறபற....' பாடலுக்கு ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு, மீண்டும் அந்த குழந்தைகள் நடனமாடி வந்திருந்தவர்களை மகிழ்வித்தனர்.
பின்னலாட்டம் ஆடிய இளம் பெண்கள் நகைக்கடை விளம்பரத்துக்கு ஒய்யார நடை நடந்து நடித்துக் காட்டியது கண்களுக்கு விருந்து. மென்மையான பாடல் பின்னணியில் ஒலிக்க, சிறு குழந்தைகள் யோகா செய்து அனைவரின் பாராட்டுகளையும் அள்ளியது. யோகா மாஸ்டர் பிரஷ்ணவ் ஜீவானந்தத்தின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
வயிறு குலுங்க சிரிக்க வைத்து....
நிகழ்ச்சிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப கண்ணனும் ஐஸ்வர்யா ஸ்ரீதரும் இணைந்து நிகழ்த்திய மகர ராசி காமெடி உண்மையிலேயே வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. 'கண்ணாடி உறவுகள்' நாடகத்தில் நடிகராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக மற்றும் நடனம் என அனைத்து நிகழ்வுகளையும் பங்கு கொண்டு 'பன்முகவித்தகர்' என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார் கண்ணன், வாழ்த்துக்கள்.
காஸ்டியூம் மற்றும் மேக்கப் பற்றி சொல்லியாக வேண்டும். 250 நடனக்கலைஞர்களுக்கான உடைகளை இந்தியாவிலிருந்து தருவித்ததோடு காவடியாட்டம், மயிலாட்டம் போன்ற கலைகளுக்கு அரங்கப் பொருட்களை துல்லியமாக செய்து கனகச்சிதமாக ஒவ்வொரு கலைக்கும் பேக்-டிராப் உருவாக்கி இருந்தார்கள். அந்த மெனக்கெடலில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
துணைத் தலைவர் பழனி வெற்றிவேலன், மேடையில் பேசும் போது, 'எப்போதும் உழைப்பு, உழைப்பு என்று வெளிநாட்டில் வந்து கஷ்டப்படும் நம்மவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு ரிலாக்ஸேஷன் அமைத்துக் கொடுக்கும் இந்த வேளையில் அதற்கு கூடுதல் மெருகூட்டும் வகையில் ஏர் இந்தியா, ஒரு இலவச பிளைட் டிக்கெட்டை ஏற்பாடு செய்து கொடுத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம், அவர்களுக்கு தமிழ் சங்கத்தின் சார்பாக நன்றிகள்' என்று நெகிழ்ந்தார்.
குட்டி 'ஸ்பை' சஞ்சனா
குட்டி 'ஸ்பை' சஞ்சனா, அனைவரின் உள்ளங்களிலும் இருக்கை போட்டு ஸ்ட்ராங்காக அமர்ந்து விட்டார். நிகழ்ச்சிக்கு இடையே அவரிடம் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் சிக்ஸர் விளாசினார். 'அரங்கத்திற்குள் ஆண்கள்தான் அதிகமாக பேசுகிறார்கள்' என குறும்பாக அவர் சொல்ல, 'அதிலும் குறிப்பாக பாலாஜி' என்றதும் அரங்கமே கைத்தட்டல் விசிலில் ரெக்கை கட்டி பறந்தது.
நிர்வாகிகள் மற்றும் கோரியோகிராபர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து நினைவு பரிசு வழங்கினார் பிராங்க்ஃபர்ட் தமிழ் சங்கத் தலைவர் பாலாஜி. பங்கு கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஷீல்டு வழங்கப்பட்டது.
மதிய உணவை அசைவம், சைவம் என இரண்டாகப் பிரித்து அனைவருக்கும் உடனடியாக உணவு கிடைக்கும் வகையில் ஸ்போர்ட்ஸ் செக்ரெட்டரி நிர்மல் அழகாக மேற்பார்வை பார்த்துக்கொண்டார். ஸ்னாக்ஸ் ஸ்டாலில் நிகழ்ச்சி நடந்த 10 மணி நேரமும் கூட்டம் களை கட்டியது.
ஆக்ரோஷ கருப்பண்ணசாமி
மாட்டுக்கொம்பு ஆட்டமும், மானாட்டமும் மேடையில் நடந்து கொண்டிருக்க திடீரென பின்னாலிருந்து சலங்கை சத்தம். திரும்பினால், கருப்பண்ணசாமி ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்தார். அரங்கில் இருந்த அனைத்து விளக்குகளும் அணைய, லைட் பீம் வெளிச்சத்தில் மேடைக்கு ஓடிய கருப்பண்ணசாமி அங்கு ஆடியது வெறித்தனமான ஆட்டம். நாககுமாருக்கு அந்த கெட்டப் மிகவும் அழகாக பொருந்தி இருந்தது. அதுபோல விளக்குகள் பொருத்தப்பட்ட சிலம்பு கம்புடன் சிலம்பாட்டம் ஆடிய ஆதித்தனும் கலக்கி விட்டார்.
'இசை சினேகிதிகள்' என ஒரு குடும்பமே மினி ஆரார்கஸ்டரா செய்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஆண்களும் பழைய பாடல் முதல் புது பாடல் வரை பாடி ஆடியன்ஸை தேனின்ப வெள்ளத்தில் நீந்தி திளைக்கச் செய்தனர்.
ஒவ்வொரு கலை நிகழ்ச்சியின் போதும் நடனமாடும் குழந்தைகளை வீடியோ எடுப்பதற்கு வசதியாக அவர்களின் பெற்றோர்கள் உட்கார, முன் வரிசையில் சில இருக்கைகளை ஒதுக்கி வைத்திருந்தது சிறந்த முன்னெடுப்பான விஷயம்.
கண்கொள்ளா காட்சி
ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம் கம்பத்து ஆட்டம், களியல் ஆட்டம், பறையாட்டம் என 13 வகை கலைகளும் ஒட்டுமொத்தமாக ஒரே மேடையில் அரங்கேற்றியது கண் கொள்ளா காட்சி. இதை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். கடைசியாக 'ஒயில் பாய்ஸ்' ஆடிய படுகா மற்றும் கதம்ப நடனம் கண்களுக்கு உச்சபட்ச விருந்து.
இறுதியாக பேசிய தமிழ் சங்கத் தலைவர் பாலாஜி ஹரிதாஸ், '5.ஜூலை.2015-ல் ஒரு சில நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பிராங்க்ஃபர்ட் தமிழ் சங்கம், இன்று 450 குடும்பங்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது' என்று சந்தோஷமாய் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும் போது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சங்கத்தின் வளர்ச்சி, அதற்கு உதவியவர்கள், தற்போது தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் புதிய முயற்சிகள் என்ன பல விஷயங்களையும் தெளிவாக விளக்கி கூறினார். இறுதியாக வெற்றிச்செல்வன் ராமு நன்றியுரை சொல்ல, விழா இனிதே நிறைவடைந்தது.
- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்
Advertisement