
புளோரிடா மாநிலத்தில் எங்கள் குடும்ப விஜய் --அபர்ணா, தினேஷ் - வினு சகிதம் ஊர் சுற்ற போயிருந்தோம். அங்கு மியாமியில் வேறு ' பலா' விஷேசங்களுடன் நம்ம டிரம்ப் சாரின் வீடும் உள்ளது என கேள்வி பட.. விடுவோமா?
உடனே அங்கு விஜயம்! கடல் காற்றில் சுற்றிலும் கேமிரா கண்களுடன் அண்ணாரின் குட்டித் தீவு! செக்யூரிட்டிகளின் துப்பாக்கிக்கு மரியாதை கொடுத்து அதன் காம்பவுண்டு ஓரம் இங்கும் அங்கும் இங்குமாக அப்படியே உலாத்தி படங்கள்!
அவுரு ஊட்டுல அப்படி இன்னா தான் விஷேசம்?
Mar-a-Lago என்பது ஃபுளோரிடா கடற்கரையில் உள்ள ஒரு ரிசார்ட் மற்றும் தேசிய வரலாற்றுச் சின்னம். அங்கே 17 ஏக்கர் நிலத்தில் 62500 ச. அடியில் 126 அறைகள்! இது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்க்கு 1985 முதல் சொந்தம்!
1924 மற்றும் 1927 க்கு இடைப்பட்ட காலத்தில், தொழிலதிபர் மற்றும் சமூகவாதி மார்ஜோரி மெர்ரிவெதர் போஸ்ட் -க்காக மார்-எ-லாகோ உருவாக்கப்பட்டது.
1973 ல் இறக்கும் போது, போஸ்ட் அந்த சொத்தை தேசிய பூங்கா சேவைக்கு உயில் எழுதி வைத்தார்.
அது அரசு விருந்தினர் வருகைகளுக்காக அல்லது குளிர்கால வெள்ளை மாளிகையாகப் பயன்படுத்தப்படலாம் என இருந்தது.
இருப்பினும், சொத்தைப் பராமரிப்பதற்கான செலவுகள் அதிகமாகி நிர்வாகம் கடினமாகவே 23 டிசம்பர் 1980 அன்று சட்டப்படி சொத்து போஸ்ட் ஃபவுண்டேஷனுக்குத் திரும்பியது.
1985 ல், ஒரு தொழிலதிபர் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளராக இருந்த டொனால்ட் டிரம்ப்
Mar-a-Lago ஐ கையகப்படுத்தி அதை ஒரு வசிப்பிடமாக பயன்படுத்தினார்.
1994 ஆம் ஆண்டில், விருந்தினர் அறைகள், ஸ்பா மற்றும் பிற ஹோட்டல்-பாணி வசதிகள் கொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமேயான கிளப்பாக மார்-ஏ-லாகோ வை மாற்றினார்.
அதிபராக இருந்தபோது, ட்ரம்ப் அடிக்கடி மார்-ஏ-லாகோவிற்குச் சென்று ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட சர்வதேச தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தினார்.
2019 முதல், டிரம்ப்பின் பிரதான இல்லமான அதன் காம்பவுண்டுக்கு வெளியே படமெடுக்க பிரச்னை இல்லை.
அதற்கு மேல் ஆசைப்பட வேண்டாம் என செக்யூரிடிகள் விரல்கள் அசைக்க--
போதும் என்ற மனத்துடன் மிகுந்த துணிவுடன் நாங்கள் விடு ஜூட்!
- என். சி. மோகன்தாஸ் with அபர்ணா விஜய் & வினு தினேஷ்; பட கலவை: வெ. தயாளன்