sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

சத்தமில்லா மென்பொருள் சாதனையாளர்

/

சத்தமில்லா மென்பொருள் சாதனையாளர்

சத்தமில்லா மென்பொருள் சாதனையாளர்

சத்தமில்லா மென்பொருள் சாதனையாளர்


டிச 27, 2024

டிச 27, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக அளவில் புகழில் உள்ள சுந்தர் பிச்சையை நமக்கெல்லாம் தெரியும். அவரது சாதனை - திறமையெல்லாம் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருவதில் நிச்சயம் பெருமிதம் கொள்கிறோம். அதுமாதிரி, வேறு வகையில், சொந்தமாய் தொழில் ஆரம்பித்து, வெளிச்சம் படாமல் கோலோச்சும் தொழில் முனைவர்களும்உண்டு.

அந்த சிலரில் ஒருவர் அமெரிக்கா 'MinIO' ( மின் ஐ ஓ) மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனரும் CEO வுமான, தமிழரான ஆனந்தபாபு பெரியசாமி. இவரது நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 8,000 கோடி ரூபாய்க்கும் மேல்! பிரபல Intel Capital, Dell Technology Ventures Soft Bank போன்ற நிறுவனங்கள் விரும்பி வந்து இதில் முதலீடு செய்துள்ளன என்பது சிறப்பு தகவல்.


ஆனந்த்பாபுவின் வளர்ச்சியும் வாழ்வும் சுவையானவை. ஆச்சரியப்பட வைப்பவை. அவரை இந்த அளவிற்கு ஊக்கம் கொடுத்து தனி ஒருத்தராய் உருவாக்கியது அவரது தாயார் வடிவாம்பாள் பெரியசாமி!


மேட்டூரைச் சேர்ந்தவர்


ஆனந்த் தமிழகத்தில் மேட்டூரை சேர்ந்தவர்; அப்பா பெரியசாமி தண்ணிக்குட்டைபட்டி எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து, குடும்ப சூழல் காரணமாய் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியாமல் மேட்டூர் கெம்பிளாஸ்ட் நிறுவனத்தில் சேஃப்டி ஆபீசராக பணிபுரிந்தவர். அங்கு 1992-ல் தீ விபத்து ஏற்பட்டு அதில் சிக்கின ஊழியர்களை காப்பாற்றுவதற்கிடையில் தன் உயிரைத் துறந்தவர். ஆனந்தின் அம்மாவுக்கு அப்போது 37 வயது! அந்த சமயம் ஆனந்த் ஒன்பதாம் வகுப்பும், அக்கா பாரதி கல்லூரியிலும் படித்துக் கொண்டிருந்தனர்.


அப்பா பெரியசாமி பரோபகாரி.யார் எது கேட்டாலும் கொடுத்து விடுவார். அதனால் சம்பளம் வந்தாலும் கூட அவர்களுக்கு 'அன்றாடம் காய்ச்சி'.. நிலைதான். சொந்த வீடு கிடையாது; சேமிப்பு கிடையாது. கம்பெனி குவார்டர்ஸ் கொடுத்திருந்ததால் அதன் வசதி-- வாய்ப்புகளால் குடும்பம் ஒப்பேற்றிக் கொண்டிருந்தது. அதன் பின் ஆனந்தை புடம் போட்டு ஆக்கினதெல்லாம் அம்மா!


அப்பாதான் ரோல் மாடல்


ஆனந்தின் ரோல் மாடல் அப்பா! அவர் சிறந்த அறிவாளி. மனிதாபிமானி. வாழ்வை எந்த தருணத்திலும் நிராசையின்றி அனுபவிக்கனும். உள்ளத்தில் நிறைவு காணனும் என வாழ்ந்தவர். விரும்பியதை, ஆத்மார்த்தத்துடன் செய்யணும்; -வீண் கவலைகள் கூடாது. நீதி, நேர்மை,- ஒழுக்கம் தவறக்கூடாது என்பதில் அவர் கறார்.


அப்பா தங்களுக்கு எதுவும் சேர்த்து வைக்காமல் நட்டாற்றில் விட்டு விட்டு போய் விட்டாரே.. என்று குடும்பத்தினர் வெறுக்கவில்லை. அந்த அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்தன. “அப்பா... வீட்டில் எந்தக் குறையும் வைக்கவில்லை. - பணப்பற்றாக்குறையை - எங்கள் மேல் திணிக்காமல் எங்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்தார். அவர் எங்களுக்கு எந்த கஷ்டமும் நேரிட வைத்ததில்லை! இருப்பதை வைத்துக் கொண்டு எங்களுக்கு ராஜ வாழ்க்கை கொடுத்தார்!” என்று நெகிழ்கிறார் ஆனந்த்.


அவர் சிறந்த அறிவாளி. புத்தகங்களைத் தேடித் தேடி படிப்பார். அத்துடன் கதைகள் எழுதுவார். நாடகம் எழுதி இயக்குவார். அவரது சரித்திர நாடகங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. கம்பெனியின் கிளப் செக்ரட்ரியாக இருந்து பல நிகழ்சிகளையும் ஒருங்கிணைத்திருக்கிறார். கம்பெனிக்குள்ளும் வெளியூர்களிலும் நாடகம் போடப்படும்போது அவர் தன்னுடன் ஆனந்தையும் அழைத்துச் செல்வார்.


அங்கே அவரது ஆற்றல்-அரவணைப்பு -கூட இருப்பவர்களைக் கையாள்வது - ஒருங்கிணைப்பது - போன்ற நுணுக்கங்களை அவரிடம் இருந்து ஆனந்த் கற்றுக்கொள்ள முடிந்தது. அப்பாவுக்கு, சினிமாவுக்குப் போகணும் டைரக்டர் பாரதிராஜா போல வரணும் என்கிற கனவு இருந்தது. இருந்தாலும் கூட குடும்பத்திற்காக அதைத் தியாகம் செய்தார்.


வாழ்க்கை என்பது வாழ்வதற்கே; வாழ்வில் கனவும் லட்சியமும் வேண்டும். அதை அடைய முயற்சிக்கணும்; உழைக்கணும். அது கைகூடாத சூழலில் உள்ளதிற்கு திருப்திப்படனும் என்பார். ஆனந்த் பள்ளியில் கற்றதை விட தந்தையிடமும் வீட்டில் கற்றதும்தான் அதிகம். அப்பாவின் அறிவும் அம்மாவின் கனிவோடு கூடிய துணிவும் ஆனந்திருக்கு கிடைத்த வரப்பிரசாதம்.


படிப்பில் சுமார்தான்


இன்னும் சொல்லப் போனால் ஆனந்த் படிப்பில் சுமார்தான். குவார்டர்ஸில் இருந்த சக மாணவர்கள் நன்றாக படித்து நல்ல மார்க் வாங்குவார்கள். வாழ்வில் கல்விதான் முக்கியம் அதுதான் நமது சொத்து என்று அறிவுறுத்தினாலும் கூட, வாங்கும் குறைந்த மார்க்கை சொல்லி மகனை நோகடிப்பதில்லை. அவன் எப்படியும் நல்ல நிலைக்கு வந்து விடுவான் என்கிற நம்பிக்கை அன்றே அவர்களுக்கு இருந்தது.


நன்றாக படிக்கும் பாரதியை மட்டுமில்லை.. படிப்பு விஷயத்தில் ஆனந்தையும் யாருடனும் ஒப்பிட்டும் குறைத்தும் பேசுவதில்லை.கவனமாய் முயற்சி செய். வருவது வரட்டும். நமக்கு எதுவோ- அது போதும் என்பார் அப்பா. ஆனந்த் பாடப் புத்தகங்களை விட அதிகம் படிப்பது சயின்ஸ் , கணக்கு போன்றவைதான். அவற்றை ஆழமாய் படித்து ஆராய்ச்சி செய்வான்.


குவார்ட்டர்ஸில் இருந்த லைப்ரரி , ரெக்ரியேஷன் கிளப்புகள் எல்லாம் அதற்கு உதவின. அவன் சும்மா இருப்பதில்லை. அவனது மனதில் எப்போதும் புதிது புதிதாய் ஏதாவது ஓடிக் கொண்டிருக்கும். அவன் மின் சாதனங்கள், -பேட்டரிகளை வைத்து எதையாவது நிரண்டிக் கொண்டிருப்பான். கேட்டால் ஆராய்ச்சி என்பான்.அந்தமாதிரி ராத்திரி பகலாய் எதையாவது செய்து சமயத்தில் அது ஏடா கூடத்தில் முடிவதும் உண்டு.


கிண்டலும் வாழ்த்தும்


பாடத்தை விட்டு விட்டு இவன் என்ன படிக்கிறான்--. எதற்காக - என்னத்தை செய்கிறான்? என்னபெரிதாய் செய்து கிழித்து விடப் போகிறான்- என மற்றவர்கள் கேட்பார்கள். அதற்கு அவன் சொல்லும் பதில் எவருக்கும் விளங்காது. 'ஆமா... இவரு ஆராய்ச்சி பண்ணிப் பெரிய விஞ்ஞானி ஆகப் போறாரு! '.. என்கிற கிண்டல் ஒரு பக்கமிருந்தாலும், ”இவன் பிற்காலத்தில் பெரிய அளவில் எதோ சாதிக்கப் போகிறான் என அக்கம் பக்கத்தவர்கள் வாழ்த்துவதுமுண்டு. அவை எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் சின்ன வயதிலேயே அவனிடம் எப்போதும் தேடல்...தேடல்!


டாக்டர் அப்துல் கலாம் சொன்னது போல எப்போதும் கனவு... கனவு ! பொதுவாய் இரவு நேர கனவுகள் விடிந்ததும் மாய்ந்துவிடும். பகல் கனவு பலிக்காது என்பர். ஆனால் ஆனந்தின் சித்தாந்தமே வேறு. அவன் எப்போதும் ஏதாவது சிந்தனையில் இருப்பான். பகலில் விழித்திருந்து காண்பதால் அதை செயல்படுத்த முடியும் என நம்புவான்.


நம்மூரில் படிப்பு-- சம்பாத்தியம் என்கிற குறுகிய வட்டம் அமைத்துக் கொண்டு அதற்கு மேல் கனவு காண விடாத கட்டுப்பாடு ஒரு துரதிர்ஷ்டம். ஆனால் அப்பாவும் அம்மாவும் அவனைப் புரிந்து கொண்டிருந்தனர். அவன் மேல் நம்பிக்கையும் வைத்திருந்தார். பிறந்தோம், இறந்தோம் என்றில்லாமல் ஏதாவது செய்யணும் சாதிக்கணும் என்பார் அப்பா. வயது முதிர்ந்து - படுக்கையில் கிடந்து சாவதை விட - ஒரு வீரனாக சாதனை ஹீரோவாக சாகணும் என்று சொல்லுவார். சொன்னபடியே - 47 வயதிலேயே அவர் ஹீரோவாக.... மரணம்!


மீண்டு வெகுண்டெழுந்த அம்மா


அவர் இருந்தவரை வீட்டில் எல்லாம் இருந்தது. போன பின்பு எதுவுமே இல்லாத வெறுமை. எதிர்பாரா கொடுமை! வறுமையும் கஷ்டங்களும் அறியாத குடும்பம் ஆடிப் போயிற்று. பியுசி வரை படித்திருந்த அம்மாவிற்கு எதுவும் தெரியாது. மூன்று மாதங்கள் அப்படியே பிரமை பிடித்திருந்தவர் -அதிலிருந்து மீண்டு வெகுண்டெழுந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.


ஆமாம். மனம் தளர்ந்து விடாமல் கணவரது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற வைராக்கியம் அவரிடம்! அப்பாவிற்கு கம்பெனியில் இருந்து வந்த பிடிப்பு மற்றும் இன்சூரன்ஸ் தொகை மட்டுமே அப்போது மிஞ்சியிருந்தது. அதுவும் அப்படி ஒன்றும் பெரிய தொகை இல்லை. ஆனாலும் குடும்பத்தின் வளத்திற்கு காரணமாயிருந்த அந்த கம்பெனியை அப்பா தெய்வமாய் மதித்ததால் ஏற்றுக் கொண்டு தாரமங்கலம் எனும் ஊருக்கு அவர்கள் இடப் பெயர்ச்சி!


அதன் பின் அவர்களுக்கு எல்லாமே அம்மா தான் ! அவர் அந்த 37 வயதில் துவண்டும் தளர்ந்தும் போகவில்லை. முடியும் - முடியனும் என்கிற துணிச்சல் அவருக்கு. அதன்படியே வாரிசுகளை தட்டிக் கொடுத்து அவர்களுக்கு எவ்வித அசௌகர்யங்களும் ஏற்படாத வண்ணம் வளர்த்தார். அதற்கிடையில் அவர் தன் தேவைகளை தவிர்த்த தியாகம் பெரிது.


கம்ப்யூட்டர் எஞ்சினியரிங்


மகள் பாரதியின் திருமணம்! சொந்த வீடு! ADSPயான மருமகன் மணி, அவருக்கு மகனாக வாய்த்து அனைத்து வழிகளிலும் உதவி வந்தார். அதுவரை கஷ்ட நஷ்டங்களை அறியாத ஆனந்துக்கு அப்போது எல்லாம் புரிந்தது. ஆனாலும் கூட படிப்பில் முன்னேற்றமில்லை. ஆனந்துக்கு அந்த வயதுக்குண்டான ஆசாபாசங்கள், பொழுதுபோக்கு , ஃபேஷன் எதிலும் ஆர்வமில்லை. நல்ல டிரஸ் எடுத்துக் கொள்ளும்படி அம்மா பணம் கொடுத்தாலும் 'டிரஸ் சோறு போடாது புத்தகங்கள்தான் நம்மை காப்பாற்றும்!' என்று அந்த பணத்தில் புத்தகம் வாங்கி விடுவான்.


ஆனந்தை மெடிக்கலில் சேர்க்க வேண்டும் என மருமகன் தீவிரமாயிருந்தார். அம்மாவுக்கோ மகனை என்ஜினியராக்கணும் என்பது லட்சியம். ஆனால்அவனது மார்க்குக்கு என்ஜினியரிங்கில் வாய்ப்பு கம்மி. அத்துடன் அம்மாவிற்கு சிரமம் தரக்கூடாது-- பேசாமல் சயின்ஸ் பட்டப்படிப்பில் சேரலாம் என்பது ஆனந்தின் விருப்பம். ஆனால் அம்மா விடவில்லை. எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று பிடிவாதமாய் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் சேர்த்து விட்டார். கம்ப்யூட்டர் என்ஜினியரிங்!


லேபிலேயே தவம்


அங்கும் கூட ஆனந்திற்கு படிப்பை விட வளர்ந்து கொண்டிருந்த கம்ப்யூட்டர் மேல் அதிக நாட்டம் எழுந்தது. முன்பு எந்தவித உத்தியும் இல்லாமல் எதெதிலோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவன் கம்ப்யூட்டர் பக்கம் திரும்பினான். வசதியின்மையால் கம்ப்யூட்டர் வாங்க முடியாததால் கல்லூரி லேபிலேயே அவன் எப்போதும் தவம்! !


'தன் அறிவு-ஆற்றல் அனைத்தையும் செலுத்தி சளைக்காமல் புதிய புதிய மென்பொருட்கள் எழுத ஆரம்பித்தான். அவைகள் புரபசர்களை கவர்ந்தது. அதனால் லேபை-யே அவனது பொறுப்பில் விட்டனர். கல்லூரி வாழ்விலும் சரி ஆனந்த் நண்பர்களுடன் ஒட்டுவதில்லை. பொழுதை வீணாக்க மாட்டான்.' என்று சிலாகிக்கிறார் - ஆனந்தின் வகுப்புத் தோழரும் -பிரபல பத்திரிக்கையாளரான லேனா தமிழ்வாணனின் மகனுமாகிய அரசு லட்சுமணன்.


நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு கூட ஆனந்தின் 'சித்தம் போக்கு - சிவம்போக்கு' புரிவதில்லை. அவனது நோக்கம் - திறமை - ஆற்றல் - புதிது புதிதான ஆக்கத்தை அவர்களால் உணர முடிவதில்லை. பலருக்கும் மார்க் அடிப்படையில் கேம்பஸ் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைத்தன. பெரிய அளவில் மார்க் இல்லாவிட்டாலும் கூட ஆனந்தின் மென்பொருட்களைபற்றி கல்லூரி புரபசர்கள் மூலம் அறிந்த NEWGEN எனும் நிறுவனம் தங்களுக்கு இப்படி ஒருவர்தான் வேண்டும் என்று டில்லிக்கு ஆனந்தைத் தள்ளிக் கொண்டு போயிற்று !


பகிர்ந்து கொள்ளும் குணம்


1999ல் படிப்பு முடிந்தவுடன், அம்மாவின் பாரம் குறைக்கணும் என்று உடனே டில்லி! ஆனந்தின் திறமையை அங்கீகரித்து ஆறு மாதத்திலேயே அவரை நிரந்தரமாக்கி அந்த நிறுவனம் விருதும் வழங்கி மகிழ்ந்தது. எதையும் நமக்கென்று வைத்துக் கொள்ளக் கூடாது - பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் - என்று சின்ன வயதில் இருந்தே வளர்க்கப்பட்டதால் ஆனந்தின் செயல்பாடுகளும் அப்படியே அமைந்தன.


பொதுவாய் யாரும் எதுவும் கண்டுபிடித்தாலும் அவரவர்களே வைத்துக் கொள்வர். உரிமை கொண்டாடுவர். அதை வைத்து பிசினஸ்! ஆனால் ஆனந்த், தன் மென்பொருள்களை இன்டர்நெட் மூலம் பொதுமை (opensource) படுத்துவார். அவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அவற்றை வளப்படுத்தவும் செய்யலாம்! இது வியாபார நோக்கத்திற்கு எதிரானது. ஆனாலும் கூட ஆனந்த் அதற்காக கவலைப் படுவதில்லை.


அந்த சமயம் அமெரிக்காவிலிருந்து Mark Zugsmith என்பவர் இந்தியாவிற்கு சோஷியல் சர்வீஸ் செய்யணும் என வந்திருந்தார். அவர்பால் ஈர்க்கப்பட்டு ஆனந்தும் (பைத்யக்காரத்தனம் என தூற்றப்பட்டு ) வேலையை விட்டுவிட்டு அவருடன் சேர்ந்து சமூக சேவையில் இறங்கினார்.


ஒரு கட்டத்தில் 'டப்பு ' இல்லாமல் போகவே, பெங்களூர் கம்பெனி ஒன்றில் பார்ட் டைமாக வேலை எடுத்து செய்ய ஆரம்பித்தார். பலவீனம் என குறையாக சொல்லப்பட்ட Open source software - இவருக்கு பலமாயிற்று. அதன் மூலம் பிசினஸ் விரிந்தது. அந்த நேரம் எட்டாக் கனியாக இருந்த பவர்ஃபுல் கம்ப்யூட்டரையும் இவரது மென்பொருளை உபயோகித்து சூப்பர் கம்ப்யூட்டராக பயன்படுத்த முடியவே அது பேசும் பொருளாயிற்று.


ஆனந்துக்கு அமெரிக்கா வாய்ப்பு வந்தாலும் கூட தன்னை ஆளாக்கின தாயை தனியே விட்டுவிட்டுப் போக விருப்பமில்லை. அம்மாவோ, 'உன் மென் பொருள் வேட்கைக்கும் - திறமைக்கும் சரியான அங்கீகாரம் அங்கு தான் கிடைக்கும்” என்று நிர்பந்ததித்து அனுப்பி வைத்தார்.


2003இல் அமெரிக்கா!


அங்கு கம்பெனி வேலை பார்த்தாலும் கூட தன் களம் இதில்லை என ஆனந்த்திடம் எப்போதும் பரப்பு...பரபரப்பு ! அவருக்கு அந்த 'சுழி'யிலிருந்து மீள முடியவில்லை. இது போதும் என சும்மா இருக்க முடிவதில்லை. உள்ளுக்குள் ஏதோ ஒரு சக்தி அடுத்து அடுத்து என உந்திக் கொண்டே இருக்கும் -இன்னமும் இருக்கிறது! நினைத்ததை அடைய வேண்டும் என்னும் மன உறுதி!


2005-ல் நண்பர்களுடன் சேர்ந்து GLUSTER எனும் மென்பொருள் நிறுவனம் ஆரம்பித்தார். அதில் அசுர வளர்ச்சி! ஐந்தே வருடத்தில் அதை RED HAT எனும் உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ரூபாய் 1100 கோடி கொடுத்து வாங்கிற்று. அதை விற்ற பின் சம்பாத்யம் போதும் இனி அறிவைப் பெருக்கணும் என சயின்ஸ்-- கணித படிப்பு --ஆராய்ச்சி என கிளம்பினார்.


ஆனால் வாழ்க்கைக்கும் தன்னைச் சார்ந்துள்ள குடும்பம் மற்றும் ஊழியர்களுக்காகவும் பொருளாதாரம் ஈட்டவும் வேண்டும் என்பதிற்காக அந்தப் பக்கமும் கவனம் செலுத்தினார்.


திருப்பமும் வளமும் தந்த மனைவி


ஆனந்த்பாபுவின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உரமிட்டது அப்பா! அடித்தளம் மட்டுமின்றி உயர்த்தியும் பிடித்தது அம்மா என்றால் அதில் திருப்பமும் வளமும் தந்தது அவரது மனைவி கரீமா கபூர்! டில்லிவாசியான கரீமா பைனான்சும் எகனாமிக்சில் PhD யும் முடித்து - ஊரில் பார்த்து வந்த பெரிய வேலையை விட்டுவிட்டு இவருடன் அமெரிக்காவிற்கு போய் ஐக்கியமானவர். அவருடைய தூண்டுதல் - விருப்பம் - திட்டமிடலில் 2015-ல் கரீமா, நண்பர் ஹர்ஷாவுடன் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த MinIO ( மின் ஐ ஓ) நிறுவனம்! அகஸ்தியா பெரியசாமி, ஆரியமான் பெரியசாமி என இவர்களுக்கு இரண்டு வாரிசுகள்.


புதிய புதிய மின் பொருள்களை உருவாக்கி அவற்றை பொதுவெளியில் சந்தைப்படுத்தல் - அதன் பராமரிப்பு என இந்த நிறுவனம் இன்று ஜொலிக்கிறது. பிரமாதமாய் கொழிக்கிறது. இவர்களது மென்பொருட்களைத் தினந்தோறும் 10 லட்சம் பேருக்கு மேல் டவுன்லோட் செய்கிறார்கள். இப்படியாக கம்பெனியின் மதிப்பீடு 8000 கோடி ரூபாயை கடந்திருக்கிறது.


ஆனந்த்பாபுவின் பலம், --விரும்பி தேர்ந்தெடுத்து -- தீர்மானித்த காரியத்திலிருந்து பின் வாங்காமல் செயல்படுவது! சாஃப்ட்வேர் போலவே ஆனந்தும் மென்மையானவர். ஆவேசம், - பிறர் மேல் போட்டி, - பொறாமை கொள்ளாதவர்.


எது செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கணும் என்பார். மென்பொருளை சும்மா உருவாக்கினால் போதாது; -அதை கலைநயத்துடன் உணர்ந்து -ரசித்து சிலை வடிப்பது போல உருவாக்கணும் என மெனக்கெடுவார். எக்காரணம் கொண்டும் தரத்தில் விட்டுக் கொடுப்பதில்லை. அதே சமயம் எதற்கும் அலட்டிக் கொள்வதுமில்லை. எளிமையான ஜோவியல் குணம்! கலகலப்பு-- கலாய்ப்புக்கெல்லாம் ஆனந்திடம் பஞ்சமில்லை. எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.


ஆனந்த்பாபுவின் இந்த வெற்றிக்கு எது காரணம்? அது பில்லியன் டாலர் கேள்வி! வழக்கமான அறிவு - ஆற்றல்? கடுமையான உழைப்பு? முயற்சி? சாதிக்கணும் என்கிற வெறி? சவால்களை ஏற்று வெல்லும் துணிவு? தன்னம்பிக்கை ? அடுத்து.. அடுத்து என்கிற ஓயாத தேடல்? முயன்றால் முடியாததில்லை என்கிற மன திடம்?


“இல்லை... இல்லை -அதுக்கும் மேலே!” என்று சிலிர்க்கிறார், -ஆர்ப்பரிக்கிறார், ஆனந்தபாபு பெரியசாமி.


_ என்.சி.மோகன்தாஸ்







      Dinamalar
      Follow us