
நியூசிலாந்து கர்நாடிக் சங்கத்தின் சார்பில் தியாகராஜ ஆராதனை மிகச்சிறப்பாக பிக்ளிங் சென்டரில் கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு ஸ்ரீ விநாயகருக்கும் மற்றும் சத்குரு தியாகராஜருக்கும் பூஜை மற்றும் ஆரத்தியுடன் ஆராதனை தொடங்கியது.
ஆக்லாந்தில் உள்ள, இசைக்கலைஞர்கள் பத்மா கோவர்த்தன், பிரியா விஜய், மாலா நட்ராஜ், மற்றும் யசோதா குறிப்பாக அவர்களிடம் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் பலர் சேர்ந்து கொண்டு தியாகராஜரின் சௌராஷ்ட்ரா ராகத்தில் அமைந்த மகாகணபதிம் என்ற கீர்த்தனையை தொடங்கி, பின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை முறையே நாட்டை ராகத்தில் ஜகதா நந்தகராக, கௌள ராகத்தில் துடுக்குகள, ஆரபியில் சாதிஞ்சனே, வராளி ராகத்தில் அமைந்த கனகணருசிரா இறுதியாக ஸ்ரீ ராகத்தில் அமைந்த எந்தரோ மஹானுபாவுலு மனமுருகி அவர் இசையால் பாடி ஸ்ரீ தியாகராஜருக்கு அஞ்சலி செய்தனர்.
பின்னர் தியாகராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் மகா ப்ரசாதம் காலை உணவாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து இங்குள்ள ஆசிரியர்களிடம் வாய்ப்பாட்டு, வயலின், வீணை, புல்லாங்குழல் மற்றும் மிருதங்கம் பயிலும் மாணவ மாணவிகளின் கச்சேரி அமைந்தது. இசை கற்கும் மாணவர்கள் மிகச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சதகுரு ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனைகளை மிக அழகாக பாடியும் வாத்தியங்களை இசைத்தும் சபையோர்களை மகிழ்வித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆராதனை விழாவில் கலந்து கொண்டனர். பின் மங்கள இசையுடன் இசை நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. 2 மணியளவில் நிறைவு பெற்றதும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement