/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ரப்பர் ஸ்டாம்ப் தயாரிப்பில் 'முத்திரை' பதிக்கிறார் இவர்!
/
ரப்பர் ஸ்டாம்ப் தயாரிப்பில் 'முத்திரை' பதிக்கிறார் இவர்!
ரப்பர் ஸ்டாம்ப் தயாரிப்பில் 'முத்திரை' பதிக்கிறார் இவர்!
ரப்பர் ஸ்டாம்ப் தயாரிப்பில் 'முத்திரை' பதிக்கிறார் இவர்!
ADDED : ஆக 24, 2025 06:30 AM

கோ வை ராஜ வீதி, எப்போதும் போல் பரபரப்பாக இயங்கும் இந்த சாலையில், காலத்தோடு பயணிக்கும் ஒரு கடை மட்டும், காலத்தை வெல்லும் வகையில் நிமிர்ந்து நிற்கிறது,'சிவா & கோ' என்ற சிறிய கடை!
இந்த கடையில், இன்னும் ரப்பர் ஸ்டாம்ப், பெயர் பலகை, பேட்ஜ் எல்லாம் கை வேலைப்பாடாகத்தான் தயாரிக்கப்படுகிறது.
ராஜ வீதியின் வரலாறையே கைகளில் சுமந்து நிற்கும், இந்த கடையின் உரிமையாளர் 76 வயதான சிவசுப்பிரமணியன், “வயசு எவ்வளவு ஆனாலும் ஸ்டாம்ப் வேலை செய்யணும், அதுதான் மனசுக்கு சந்தோஷம்,'' என்கிறார்.
“பிரிட்டிஷ் காலத்துல, வசந்தா மில்ஸில் பிரிண்டிங் தொழில் நடத்தியவர் என் தந்தை கணபதி. 1952ல் இந்தக் கடையை தொடங்கினார்.
அந்த காலத்துல கோவையில ஸ்டாம்ப் வேணும்னா, எங்க கடைக்குதான் வரணும். கோவையில் முதல் கடை எங்க கடை! ஒரு ஸ்டாம்ப் அப்போ ரூ.2.50. இப்போ அது ரூ.250.
அப்போ கம்ப்யூட்டர் எதுவும் இல்ல. ஒவ்வொரு எழுத்தையும் கம்பி கொண்டு கையால் பதித்து செய்வோம். கஷ்டம் தான்; ஆனா பிசினஸ் நல்லா நடந்தது,” என்கிறார்.
தந்தை கணபதி பயன்படுத்திய, அதே மெஷினில் தான், சிவசுப்பிரமணியனும், அவருடைய மகனும் வேலை செய்து வருகிறார்கள். “ஆர்டர் பண்ண வர்றவங்க இன்னும் அந்த மெஷினாலேதான், ரப்பர் ஸ்டாம்ப் வேணும்னு கேக்கிறாங்க,'' என்று எழுத்துக்களை கவனமாக எடுத்து பொருத்துகிறார்.
தமிழில் மட்டும்தான் ஸ்டாம்ப் பண்ணுவீங்களா? “யார் சொன்னா...எல்லா மொழிகளையும் நேசிக்கணும். கத்துக்கணும். தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழ் மொழி முக்கியமுனு கவர்மென்ட் உத்தரவு போட்டுருக்கு. தமிழ் வளரணும், ஆனா மற்ற மொழிகளையும் கத்துக்கணும். ஸ்கூல்ல ஹிந்தி படிச்சேன்(தான் பள்ளியில் படித்தபோது கிடைத்த ஹிந்து விடைத்தாளை, இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார்).
என்னால், மலையாளம், ஹிந்தி, கன்னடம் எல்லாம் எழுத, பேச முடியும். எனக்குப் பிறகு வர்ற தலைமுறையும் இப்படியே, பல மொழிகள் கற்றுத் திறமையானவர்களா வளரணும்,''.
காலச்சூழலுக்கு ஏற்ப, நகரம் தன்னை மாற்றிக் கொண்டாலும், ரப்பர் ஸ்டாம்ப் பிசினஸ் என்ற பாரம்பரிய தொழில்களின் தரத்தின் மீது, மக்களுக்கு இன்னும் இருக்கிறது நம்பிக்கை!