/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பனி மேகங்கள் தவழும் வெல்லிங்டன் கதை
/
பனி மேகங்கள் தவழும் வெல்லிங்டன் கதை
ADDED : ஜன 11, 2026 05:05 AM

வா சகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் கவிஞர் சுகுமாரனின் எழுதிய 'வெல்லிங்டன்' - நாவல் குறித்து எழுத்தாளர் சுதேசமித்திரன், தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். சமீபத்தில் கவிஞர் சுகுமாரன் எழுதிய 'வெல்லிங்டன்' நாவலை படித்தேன். இந்த நாவல் தமிழில் வெளி வந்துள்ள முக்கியமான நாவல்களில் ஒன்று. இந்த நாவல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லிவனின் கதையிலிருந்து தொடங்குகிறது. சல்லிவனின் கதை ஊட்டியின் தோற்றத்தை விவரிக்கிறது.
மலைக்காடுகளில் சுற்றித்திரிந்த சல்லிவன் ஊட்டியை கண்டுபிடித்து, கோத்தகிரி வழியாக முதல் சாலையை அமைத்து, போக்குவரத்துக்கு அடித்தளமிட்டு, காடுகளை அழித்து பிரிட்டிஷ் தேசத்தின் பயிர்களை விளைய செய்து வெற்றி கண்டார். பணி ஓய்வுக்கு பிறகு சல்லிவன் இங்கிலாந்து திரும்பி சென்றது வரை, அவரது வரலாறு நீள்கிறது.
சல்லிவன் முதலில் ஊட்டி என, தவறாக நினைத்த இடம் ஜகதளா. அதுதான் இன்றைய வெல்லிங்டன்.
வெல்லிங்டன் தான் இந்த நாவலின் கதைக்களம். 50 ஆண்டுகளுக்கு முன் இந்த நிலத்தில் குடியிருந்தவர்கள், அழகிய சிறு ஓடைகள் இயற்கையின் எழிலை சித்தரித்த படி நாவல் விரிகிறது. 15 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உறவுகள் மாறாமல், ஒரே தெருவில் குடியிருக்கும் யதார்த்தத்தை உயிர்ப்புடன் எழுதி இருக்கிறார் சுகுமாரன்.
நாவலில் வரும் பாத்திரங்களின் ஏக்கங்கள், சந்தோஷங்கள், உணர்ச்சிகள், ரகசியங்கள் எல்லாம் பாபு என்ற சிறுவனின் பார்வையில் கதையாக சொல்லப்படுகிறது. அத்தை அம்முவால் வளர்க்கப்படும் பாபுவை, சொந்த மகனாகவே பார்க்கிறாள் அம்மு. பாபுவோ அவளை அம்மா என்று அழைக்கத் தயாராக இல்லை. அம்முவைப்போலவே கவுரி, சகுந்தலா, சுகந்தி, வசந்தி, விமலா, ரெஜினா என, பெண் பிள்ளைகளாக நாவல் முழுவதும் நிறைந்துள்ளனர்.
இவர்களில் மூத்தவளாக வருபவர் சரஸ்வதி டீச்சர். தங்கை சாந்தாமணி. தாயாக இருந்து வளர்த்தவளுக்கு அவள் என்ன செய்துவிட்டுப் போகிறாள் என்பதை, கனத்த இதயத்துடன் கதையில் இறக்கி வைக்கிறார் சுகுமாரன்.
வீட்டின் ஒவ்வொரு சுவருக்குப் பின்னாலும் அப்பிக் கிடக்கின்றன மனித மனங்களின் ரகசியங்கள். நாவலில் படைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள் மிக வலுவானவை. தாய்மாமனைத் தந்தையாகப் பார்க்கிற மலையாளிகளின் மனோபாவம், இரண்டு பாத்திரங்கள் வாயிலாக அழுத்தமாக சொல்லப்படுகின்றன.
இந்த நாவலில் மனிதர்கள் மட்டுமல்ல, மலைத் தாவரங்கள், புல்தரைகள் நாவல் முழுக்க விளைந்து கிடக்கின்றன. சிறு ஓடை ஒன்று சலசலத்து ஓடுகிறது. மேட்டுப்பாளையம், ஊட்டி ரயில் மலையேறி நாவலுக்குள் இறங்கிப் போகிறது.
நாவலின் களம் வெல்லிங்டன் என்றாலும், பெரும்பாலான பாத்திரங்கள் பேசும் மொழி மலையாளம்தான். தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மலையாள வசனங்கள். தெலுங்கு, கன்னடம், படகா என, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற மொழிகளில் கதாபாத்திரங்கள் உரையாடுகின்றன. தமிழ், மலையாளம்இரண்டும் கலந்து அந்தந்த பாத்திரங்களின் இயல்பாக பேசும் உரையாடல், நாவலில் நேர்த்தியாக வெளிப்படுகிறது.
இயற்கையின் சாட்சியாக வெண்பனி மேகங்கள் தவழும் வெல்லிங்டன் நகரத்தின் கதையை வாசிக்கும் போது உடலும், உள்ளமும் சில்லிடுகிறது.

