UPDATED : ஆக 24, 2025 07:34 AM
ADDED : ஆக 24, 2025 07:01 AM

ஒ ரு புகைப்படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பர். மொபைல்போன் காலத்தில், அனைவருமே ஒளிப்படக் கலைஞர்களாகிவிடுகிறோம்.
இருப்பினும் இதில் இருந்து தனித்து நிற்கிறது, கானுயிர்களைப் படம் எடுத்தல்; இயற்கை சார்ந்த, கானுயிர் ஒளிப்படங்கள் பலவகைகளில் இயற்கை சார்ந்த பாதுகாப்புக்கும் உதவ வேண்டும்; அப்போதுதான் அப்பணி அர்த்தம் பொதிந்ததாக இருக்கும்.
திருப்பூர் இயற்கைக்கழகத் தலைவரான ரவீந்திரனின் பல்வேறு இயற்கைசார் பணிகளுடன், கானுயிர் புகைப்படப் பணிகள் தனித்துவமானதாக திகழ்கிறது. இதற்கான மெனக்கெடலும், நேரச் செலவிடலும் இன்றி, இது சாத்தியமாகாது.
![]() |
ரவீந்திரன் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு படிக்கும் போது, தந்தை வாங்கி கொடுத்த கேமராவில், குடும்ப நிகழ்வுகள், வெளியில் பார்க்கும் விஷயங்கள் எல்லாவற்றையும் படம் எடுக்க ஆரம்பித்தேன்.
கல்லுாரி படிக்கும்போது, பிலிம் கேமராவில், சிறுவாணி, ஊட்டி போன்ற இடங்களில் சென்று எடுத்து வந்தேன். திருப்பூர் வந்த பின், நஞ்சராயன் குளத்தில் இருந்து பறவைகளை எடுத்தேன். இயற்கை ஆர்வலர்கள் வாயிலாக, அந்த அமைப்பில் சேர்ந்து, பறவைகளின் அழகியலான புகைப்படங்களை எடுத்து, ஆவணப்படுத்த ஆரம்பித்தேன். வன உயிரின ஒளிப்படம் என்பது, இயற்கைக்கு அருகே நம்மை கூப்பிட்டு செல்வது போன்று இருந்தது. இயற்கையை ரசிக்கவும் முடிந்தது.
பந்திப்பூர், முதுமலை, கபினி போன்ற இடங்களுக்கு சென்று, யானை, சிறுத்தை போன்றவற்றை தொடர்ந்து எடுத்து வந்தேன். ஆப்பிரிக்கா காடுகளுக்கு போக வேண்டும் என்ற ஆசை உள்ளது. இலங்கைக்கு பணி நிமித்தமாக செல்லும் போது, அங்குள்ள வன உயிரினங்களை படம் எடுத்தேன். புகைப்படக்கலை தாண்டி, வன உயிரினங்கள் வாழ்விடம், சந்திக்கும் சிக்கல் போன்றவற்றை உற்று நோக்கி, மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கும் பணியை செய்து வருகிறேன். புகைப்படம் எடுக்கும் பழக்கம் தான், இன்று என்னை சுற்றுச்சூழல் ஆர்வலராக மாற்றியுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.