/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
அரசியலும், எழுத்தும் பேச்சும்...! - அசத்தும் வைகைச்செல்வன்
/
அரசியலும், எழுத்தும் பேச்சும்...! - அசத்தும் வைகைச்செல்வன்
அரசியலும், எழுத்தும் பேச்சும்...! - அசத்தும் வைகைச்செல்வன்
அரசியலும், எழுத்தும் பேச்சும்...! - அசத்தும் வைகைச்செல்வன்
ADDED : மே 19, 2024 09:23 AM

அ.தி.மு.க., இலக்கிய அணிச்செயலாளராக இருக்கும் முனைவர் வைகைச்செல்வன் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் இணைந்த திறமை பெற்றவர். இதுவரை 11 புத்தகங்கள் எழுதியுள்ள இவர் அடுத்த ஆறு மாதத்தில் தொடர்ச்சியாக 14 புத்தகங்களை வெளியிட உள்ளார். இந்த புத்தகங்களுக்காக அரசியல் பணியோடு, முழுநேரமும் எழுத்து என உழைத்து வருகிறார். அண்மையில் இவர் எழுதி, தாமரை பிரதர்ஸ் மீடியா (பி) லிட் வெளியிட்ட 'திருக்குறள் எளிய உரை' பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவருடன் ஒரு உரையாடல்...
* திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்துள்ளன; அதில் இருந்து உங்கள் உரை எப்படி வேறுபட்டது?
எளிமையாகவும், சுருக்கமாகவும் இருக்கும். கருவும், தன்மையும் மாறாது. உதாரணமாக
'தொட்டனைத் துாறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் துாறும் அறிவு'
என்ற குறளுக்கு 'தோண்ட தோண்ட தண்ணீர் வரும். படிக்க படிக்க அறிவு வளரும்' என எழுதியுள்ளேன். சிறு குழந்தைகள் கூட புரிந்து கொள்ளலாம். எனது உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் அதில் தந்திருப்பது சிறப்பு.
* உங்கள் எழுத்துக்கள் எல்லாம் இலக்கியம் சார்ந்தது தானா?
தமிழ் மீது தீராத காதல் கொண்டவன் நான். கலை, இலக்கியம், வரலாறு, திரைப்பாடல், கட்டுரை என தமிழின் அனைத்துச்சுவைகளையும் எழுதி வருகிறேன். தற்போது கம்பராமாயண 10,500 பாடல்களில் 1000 பாடல்களை தேர்வு செய்து 'கம்பன் செய்த பாயிரம்; நெஞ்சில் நிற்கும் ஆயிரம்' என்ற உரை நுால் எழுதி வருகிறேன். எனது மூன்று நுால்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். சில நுால்களுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
* இலக்கியவாதி எப்படி அரசியல்வாதி ஆனீர்கள்? ஜெயலலிதாவை சந்தித்தது எப்படி?
நான் பச்சையப்பன் கல்லுாரியில் படித்த போது 1989ல் கல்லுாரிக்கு வந்திருந்தார். எங்களுக்கு நிறைய அறிவுரை தந்தார். அப்போது அவரது நேரடி அறிமுகம் கிடைத்தது. 'வடக்கை வெல்லும் தெற்கு' என்று ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் எழுதினேன். மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியன் அந்நுாலை வெளியிட்டார். மறைந்த சபாநாயகர் காளிமுத்து பாராட்டினார். அவர்கள் வழியே ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்தேன். என்னை பாராட்டி கட்சியில் பொறுப்புகள் தந்தார்.
* அரசியல் கட்சிகளுக்கு இலக்கிய அணி என்பது ஏன் அவசியம்?
இலக்கியம் இல்லாமல் மொழி இல்லை. ஒரு கட்சிக்கு பேச்சாளர்கள் முக்கியம். நன்றாக பேச இலக்கிய அறிவு அவசியம். எழுத்தும், பேச்சும் என இரட்டை திறமை உள்ளவர்களை அரசியலில் இருந்து அகற்ற முடியாது.
* அரசியலும், எழுத்தும் இணைந்து எப்படி பயணிக்கிறீர்கள்?
பகல் முழுவதும் அரசியல் பணி; இரவில் எழுத்துப்பணி என திட்டமிடுகிறேன். நல்ல எழுத்தாளர், நல்ல பேச்சாளராகவும், நல்ல பேச்சாளர் தேர்ந்த எழுத்தாளராகவும் இருப்பதில்லை. இரண்டும் எனக்கு வாய்த்ததை முன்பே மறைந்த நெடுஞ்செழியன் பாராட்டியிருக்கிறார்.
இது போல நான் மட்டுமல்ல; நிறைய பேர் இருக்கிறார்கள். அதிகம் படிப்பதாலும், எழுதுவதாலும் இது சாத்தியமாகிறது. அண்ணாத்துரை, இந்த இரண்டு திறமையும் வாய்க்க பெற்றவர்.
பேச்சாளராவது எப்படி என்பதை சொல்லும் 'பேசு, பேசு நல்லா பேசு' என்ற நுாலை எழுதி வருகிறேன். நல்ல மேடைப்பேச்சிற்கு ஆழ்ந்த படிப்பு அவசியம். நெடுஞ்செழியன், காளிமுத்து, வலம்புரிஜான், கிருபானந்தவாரியார், இளந்தேவன் என்னை கவர்ந்த பேச்சாளர்கள்.
* தமிழில் இலக்கிய புத்தகங்கள் வெளிவருவது குறைந்து விட்டதா?
தமிழில் தற்போது தன்னம்பிக்கை சார்ந்த நுால்கள் தான் அதிகம் வெளிவருகின்றன. இதனை மட்டும் படித்து ஒருவர் முழுமையடைய முடியாது. இலக்கிய நுால்களை இளைய தலைமுறை படிக்க வேண்டும்.
* உங்களை சிந்திக்க வைத்த புத்தகம்...
சங்க இலக்கியங்கள். மூன்றாயிரத்து ஐந்நுாறு ஆண்டுகளுக்கு முன்பு நமது வாழ்க்கை நெறிமுறைகள், வாழ்வியல், பற்றி சங்க இலக்கியங்களை படித்து வியக்க முடிந்தது. அவற்றை படித்து கவர்ந்த நானும் சங்க இலக்கியங்கள் தொடர்பாக மூன்று நுால்கள் எழுதியுள்ளேன். 3000 பக்கத்தில் நான் எழுதிய 'சங்கம் வரைந்த இலக்கிய சித்திரம்' விரைவில் வெளிவர உள்ளது.

