/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'என்ர பொண்ணு ஏ.சி., ரூம்ல உக்காந்து வேல பாக்குறா சார்...'
/
'என்ர பொண்ணு ஏ.சி., ரூம்ல உக்காந்து வேல பாக்குறா சார்...'
'என்ர பொண்ணு ஏ.சி., ரூம்ல உக்காந்து வேல பாக்குறா சார்...'
'என்ர பொண்ணு ஏ.சி., ரூம்ல உக்காந்து வேல பாக்குறா சார்...'
ADDED : ஆக 24, 2025 06:31 AM

நீ ங்கள் மேலேபடித்ததை நம்மிடம் சொன்னவர், 50 வயதான இருளர் பழங்குடியினப் பெண் தாயம்மா.
அதைச் சொல்கையில், அவரின் முகத்தில் தெரிந்த உணர்வை, பூரிப்பு என்ற ஒற்றைச் சொல்லால் விவரித்து விட முடியாது. அப்போது அந்த முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
பில்லூர் அணை அருகே உள்ள 20க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியினர் குடியிருப்புகளுள் ஒன்றைச் சேர்ந்தவர்தான் இந்த தாயம்மா.
தமிழக வனத்துறையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா திட்டத்தில், சமைக்கும் குழுவில் உள்ள 12 பேரில் ஒருவர்.
கோரப்பதி, நீராடி, வீரக்கல், குண்டூர், கடம்பன்கோம்பை, நெல்லிமரத்தூர், மானார், சேத்துமடை என 20க்கும் மேற்பட்ட இருளர் கிராமங்கள், காரமடை சரகத்துக்கு உட்பட்ட பில்லூர் வனப்பகுதிக்குள் உள்ளன.
இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, வனத்துறை கையிலெடுத்த திட்டம்தான் சூழல் சுற்றுலா. சுற்றுச்சூழலுக்கு எவ்வித எதிர்மறைத் தாக்கமும் ஏற்படுத்தாமல், சுற்றுலா பயணியரை வரவழைத்து, உணவிட்டு, பரிசல் பயணமும், ஆற்றில் குளிக்கும் அனுபவமும் தந்து இயற்கை, வனவிலங்குகள் பற்றிய புரிதலுடன் திருப்பி அனுப்பும் திட்டம்.
இதில் கிடைப்பவை அனைத்தும், இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள இருளர்களுக்கே வருவாய் ஆதாரமாக மாற்றப்படுகிறது. அப்படி, சமைக்கும் குழுவில் உள்ள ஒருவர்தான் தாயம்மா.
இருளர் மொழியும், தமிழும் கலந்து பேசினார்.
''எனக்கு ஒரு வயசு இருக்கும்போது அம்மா போயிருச்சு. 2 அண்ணங்கதான் வளத்தாங்க. படிக்கறதுக்கு போகல. காட்ட விட்டு கீழ போக மாட்டோம். எல்லாமே இங்கதான். ரேஷனு கடயில பொருளு குடுத்துருவாங்க. காய்கறி, பருப்புனு எல்லாமே பயிர் பண்ணிக்குவோம். அதனால, காசே தேவப்படாது,''
''கொஞ்ச வருசத்துக்கு (2007ல்) முன்னாடி சார் மாருங்க (வனத்துறையினர்), இப்படி ஒரு வேலை இருக்குனு சொல்லி, எங்கள எடுத்தாங்க. நாங்க 12 பேரு சமைப்போம். ஆம்பளைங்க வெவ்வேற ஊரு. அவங்க பரிசல் ஓட்டுவாங்க.
இந்த வேலைக்கு வந்ததுக்கு அப்புறம்தான், எங்களுக்கு காசே கிடச்சுது. மாசம் 2 ஆயிரம், 3 ஆயிரம் கிடச்சுது. அதெல்லாம் எவ்ளோ பெரிய காசு.
அத சேத்து வச்சு போஸ்ட் ஆபிசு, பேங்குல போடுவோம். அதுக்கு புக்கெல்லாம் குடுத்தாங்க. இப்ப 8 ஆயிரம் ரூவா 12 ஆயிரம் ரூவா கூட கிடைக்குது. இவ்ளோ பெரிய தொகை அதிர்ஷ்டம்தானுங்க சார்,''.
''அதெல்லாம் சரி... உங்க பசங்க என்ன பண்றாங்க,'' ''நான்தான் படிக்கல. எனக்கு ஒரு பொண்ணு. மூணு பசங்க. எல்லாத்தயும் படிக்க வச்சுட்டேன். இங்க எங்களுக்கு காடு இருக்கு. அத அனுபவிச்சுக்கலாம். வேற எதும் பண்ண முடியாது. கிடக்கற காச சேத்து வச்சு பசங்களுக்கு குடுத்துட்டா, அவங்க செலவு பண்ணிருவாங்க. தீர்ந்து போயிடும். ஆனா, படிக்க வச்சுட்டா, காலத்துக்கும் ஒதவுமில்லீங்களா.
பக்கத்துல, 5வது வரைக்கும் பள்ளிக்கூடம் இருக்கு. அதுக்கப்புறம், 12வது கீழ இறங்கிப் போகணும். அங்கயும் சேத்துவிட்டோம்.
ரெண்டு பசங்க எஞ்சினீரிங் படிச்சுட்டாங்க. ஒருத்தன் ஐ.டி., இன்னொருத்தன் சிவுலு எஞ்சினீரிங் படிச்சுருக்காங்க. புள்ள எஞ்சினீரிங் இல்ல. ஆனா, 5 வருசம் படிப்பாங்களே அது படிச்சா.
மூணு பேரும் வேலக்கிப் போறாங்க. கவருமென்டு வேல இல்ல. பிரைவேட்டுதான். ஆனா, நல்லா சம்பாரிச்சி நல்லா இருக்காங்க. கலியாணமெல்லாம் ஆயிருச்சு. பொண்ணு ஏ.சி., ரூமுல உக்காந்துட்டே வேலை பாக்குறா. பாக்குறதுக்கு இப்ப புசு புசுனு நல்லா இருக்காங்க சார்.
கடசீப் பையன், மதுரையில எஞ்சினீரிங் 2வது வருசம் படிக்கிறான். ஆனா, என்ன படிப்புனு தெரியல. காசு மட்டும் அப்பப்ப அனுப்பிருவேன். படிப்புதானுங்க முக்கியம். காசு செலவாயிரும். படிப்பு காப்பாத்துமில்லீங்களா,''
- ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்தார்.
உயர்ந்து படர்ந்த மரங்களுக்குக் கீழ் நாங்கள் நின்றிருந்தோம். அந்த அடர்த்தியான நிழலிலும் அவரின் முகம் தனித்து ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அவரிடம் கிளம்புகிறோம் என்றோம்.
சந்தமா போயிட்டு வாயி! என வாய்கொள்ளாச் சிரிப்புடன் வழியனுப்பினார்.
தாயம்மா மட்டுமல்ல, அங்கிருந்த இருளர் பழங்குடியினப் பெண்கள் நஞ்சம்மா, மருதி, பாப்பம்மா என ஒவ்வொருவரிடமும், இதுபோன்ற கதைகள் இருக்கின்றன.
ஏதோவோர் அரசு ஊழியரின் மனதில் உதித்த சூழல் சுற்றுலா திட்டம், அப்பகுதி பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை மாற்றிப்போட்டிருக்கிறது.
2007க்கு முன் அந்த இருளர் குடியில், பட்டதாரிகளே இல்லை. இன்று அனேகமாக குடும்பத்துக்கு ஒரு பட்டதாரி இருக்கிறார் அல்லது உருவாகிக் கொண்டிருக்கிறார். கல்வி எல்லாவற்றையும் மாற்றிப்போடும்!