/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பொன்னியின் செல்வன் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்பு: ராஜலட்சுமி ஸ்ரீனிவாசனுடன் நேர்காணல்
/
பொன்னியின் செல்வன் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்பு: ராஜலட்சுமி ஸ்ரீனிவாசனுடன் நேர்காணல்
பொன்னியின் செல்வன் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்பு: ராஜலட்சுமி ஸ்ரீனிவாசனுடன் நேர்காணல்
பொன்னியின் செல்வன் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்பு: ராஜலட்சுமி ஸ்ரீனிவாசனுடன் நேர்காணல்
UPDATED : ஆக 24, 2025 12:06 PM
ADDED : ஆக 24, 2025 06:23 AM

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் எழுதிய கவிதைகளை சிந்தனை களஞ்சியம் எனும் தலைப்பில் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து இலக்கிய உலகில் கவனத்தை ஈர்த்தவர் மொழிபெயர்ப்பாளர் ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன்.
சென்னை பல்கலைகழகத்தில் தமிழ் - சமஸ்கிருத ஒப்பீட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பெங்களூரு பூர்ண பிரஜ்ன சம்சோ தன் மந்திரம் என்ற சமஸ்கிருத ஆராய்ச்சி மைய தலைவராக பணியாற்றியுள்ளார். தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, குஜராத்தி, ஆங்கில மொழிகளை அறிந்த அவர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர புதினத்தை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவரது மகள் தான் ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி.
ஆரோவில்லில் இனிமையான சூழலில் அவருடன் ஒரு சந்திப்பு.
உங்களுக்கு சமஸ்கிருத மொழிபெயர்ப்பு மீது ஆர்வம் வந்தது எப்படி?
தமிழ் தான் எனக்கு தாய்மொழி. அதே நேரத்தில் சிறுவயதில் இருந்தே சமஸ்கிருதத்தின் மீதும் ஆர்வம் இருந்தது.கதைகள் படிக்கும்போது அந்த கதைகளை சமஸ்கிருதத்திலும் எழுதி பார்ப்பேன்.சிறுவயதிலேயே எனக்கு ராமாயண ஹரிகதா நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கம்பன், துளசிதாஸ், ஆழ்வார்களின் பாசுரங்கள் என பல வடிவங்களில் ராமாயணத்தை அறிந்தேன். இதுவே பின்னாளில் தமிழ் - சமஸ்கிருதம் இடையில் மொழிபெயர்ப்பு பணியை செய்ய ஆர்வத்தை துாண்டியது.
பொன்னியின் செல்வனை மொழிபெயர்ப்பதில் ஆர்வம் வந்தது எப்படி?
கல்கியின் நுாற்றாண்டின்போது அவரது நுால்களை மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் பொன்னியின் செல்வன் நாவல் முழுமையாக கவர்ந்தது. அதை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க நினைத்தாலும் அது என்னால் முடியுமா என என்னுள் சந்தேகம் எழுந்தது.
பொன்னியின் செல்வன் மொழிபெயர்ப்புக்கு மூத்த புலவர் புலமைபரிசில் வழங்க என்னை தேர்வு செய்ததும் எனக்குஉந்துதலாக அமைந்தது. மத்திய அரசு அளித்த நிதியுதவியோடு அந்தப் பணியை செவ்வனே செய்து முடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது பொன்னியின் செல்வன் சமஸ்கிருத மொழி பெயர்ப்பு நுால் ஐந்து பாகங்களாக ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தானம் வெளியிட்டது. அப்போதைய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிதி ராணி கலந்து கொண்டு வாழ்த்தினார்.
பொன்னியின் செல்வன் மொழிபெயர்ப்பில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான சவால் பற்றி...
சிறந்த எழுத்தாளரான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மொழிபெயர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. அது அற்புதமான படைப்பு. அவருடைய எழுத்துகளில் இடம் பெரும் விவரிப்புகள், அழகிய வர்ணனைகளை சமஸ்கிருதத்தில் கடத்தி செல்வது என்பது நேரம் எடுத்து கொள்ளும் வேலை.
ஒரு சொல் தவறாமல், அந்த உணர்வையும், நகைச்சுவையும் சொல்வதற்கு ரொம்ப கவனம் செலுத்தினேன். பொன்னியின் செல்வன் நாவலை மொழிபெயர்க்க பொருத்தமான சொற்களைக் கண்டுபிடிப்பது நேரத்தை எடுத்துக்கொண்டது. அது சவாலாகவும் அமைந்தது. உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் நகைச்சுவையை துல்லியமாக வெளிப்படுத்தக்கூடிய பொருத்தமான சொற்களைத் தேடி நான் பல ஆதாரங்களை ஆராய வேண்டியிருந்தது.
உங்களுடைய இதர மொழிபெயர்ப்புகள் என்ன?
இரட்டை காப்பியங்களான 'சிலப்பதிகாரம்', 'மணிமேகலை'யை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பு செய்தது மனதுக்கு நிறைவளித்த ஒன்று. அடுத்து கல்கி, பாரதியார் எழுதிய சிறுகதைகளை தேர்ந்தெடுத்து சிலவற்றை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்பு செய்துள்ளேன்.
டாக்டர் மு.வ., எழுதிய 'கரித்துண்டு' நாவலை சமஸ்கிருதத்தில்மொழிபெயர்த்தது மறக்க முடியாதது. நான் ஒளியின் நிழல் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த புத்தகம் மகாத்மா காந்தியின் மகன் ஹீராலால் காந்தியின் வாழ்க்கை கதை, மகாபாரதத்தில் ஆண் பாத்திரங்கள், மகாபாரத்தில் பெண் பாத்திரங்கள் என்ற இரு நுால்கள் குஜராத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த நுால்களாகும்.
இதுதவிர 'ராம் கீர்த்தி மகா காவியம்' என்ற பெயரில் தாய் மொழியில் உள்ள தாய்லாந்து நாட்டு ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். இதற்கான பாராட்டு விழாவில் தாய்லாந்து மன்னர் பங்கேற்று என்னை பாராட்டினார்.
அடுத்தமொழி பெயர்ப்பு என்ன?
அடுத்து நற்றிணை நுாலினை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கும் பணியை துவங்கியுள்ளேன்.நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சி சிறப்பு, கொடைத்தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன. இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களை கொண்டது. இதுவரை 100 பாடல்களை மொழி பெயர்த்துள்ளேன்.
கடைசியாக ஒரு கேள்வி சமஸ்கிருதம் புழக்கத்தில் இல்லாத மொழி என்ற விமர்சனம் வருகின்றதே...
சமஸ்கிருதம் இறந்த மொழி என்று சொல்வது முற்றிலும் தவறு. சமஸ்கிருதமும், தமிழ்மொழியும் தனித்தனியே விஸ்வரூபமாக வளர்ந்துள்ளன.நான் மொழிபெயர்த்து வெளியிட்ட 'லகு கதை மஞ்சரி' என்ற தலைப்பில் சாகித்திய அகாதெமி வெளியிட்ட புத்தகத்தில் புராண காலத்தில் இருந்து 20ம் நுாற்றாண்டு வரை 60க்கும் மேற்பட்ட சமஸ்கிருத சிறுகதைகளை உள்ளன.
இவை தாலி பிரச்னை, விதவை நிலை, பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் போன்ற நவீன கால பிரச்னைகளையும் கையாளுகின்றன. இதுவே சமஸ்கிருதம் இன்றும் காலத்திற்குஏற்ற வகையில் எழுதப்பட முடியும் என்பதை காட்டுகின்றது என்கின்றார் அழுத்தமாக.....