UPDATED : ஆக 08, 2026 06:19 PM
ADDED : ஆக 08, 2026 06:01 PM

இயந்திரங்களின் சத்தத்தோடு ஓடிக்கொண்டிருக்கும் திருப்பூரில், இயற்கையின் சுவாசத்தை உணர ஒரு இடம் தேடுபவர்கள் பலர்.
அவர்களுக்கெல்லாம் நம்பிக்கையாய் மாறியுள்ளது, நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்.
கடந்த 2022-ல் தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்தக் குளம், ஆயிரக்கணக்கான உள்நாட்டுப் பறவைகளுக்கும், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து பறந்து வரும் வெளிநாட்டு விருந்தாளிகளுக்கும் பாதுகாப்பான புகலிடமாக திகழ்கிறது.
சரணாலயத்தின் இன்னொரு முகம்
ஆனால், இந்தச் சரணாலயத்தின் இன்னொரு அழகான முகம், அதை ஒட்டியுள்ள நஞ்சராயன் நகர்.
இங்கு வசிக்கும் மக்கள், பறவைகளுக்கு இடையூறாக இல்லாமல் தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்க வீட்டு மரத்திலோ, சுவரிலோ எந்தப் பறவை கூடு கட்டினாலும் அதை யாரும் தொந்தரவு செய்ய மாட்டோம். குஞ்சுகள் கீழே விழுந்தாலோ, காயமடைந்தாலோ உடனே மீட்டு வனத்துறைக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் தகவல் தெரிவிப்போம், என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்.
அவர்களின் அக்கறை அதோடு முடிவதில்லை.
பறவைகள் பயப்படக் கூடாது என்பதற்காக தீபாவளியன்றும் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதில்லை. குளத்தில் யாராவது குப்பை அல்லது ஆலைக்கழிவுகளை கொட்ட முயன்றாலும் உடனே தடுத்து, வனத்துறைக்கு தகவல் கொடுப்போம், என்று பெருமிதத்துடன் சொல்கிறார்.
கனவை சுமக்கம் பொதுமக்கள்
இந்த அக்கறையோடு இன்னொரு கனவையும் அவர்கள் சுமந்து வருகிறார்கள்.
திருப்பூரில் இயற்கையை ரசிக்கக் கூடிய இடங்கள் மிகக் குறைவு. அதனால், நஞ்சராயன் சரணாலயத்தை ஒரு நல்ல சூழல் சுற்றுலாத் தலமாக உருவாக்க வேண்டும். ஆனால், அதற்காக பறவைகளின் அமைதியும் வாழ்விடமும் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. பாதுகாப்பும், சுற்றுலாவும் சமநிலையில் இருக்க வேண்டும், என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த விருப்பம்.
நஞ்சராயன் சரணாலயம் இன்று பறவைகளுக்கு மட்டுமல்ல... இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக்கொண்ட மனிதர்களின் மனசாட்சிக்கும் ஒரு முகவரியாக மாறி வருகிறது.
---
நஞ்சராயன் குளம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் பறவைகள் கூடு கட்டியுள்ளன.
நஞ்சராயன் குளம்
