PUBLISHED ON : டிச 22, 2025 12:25 AM

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கடந்த, 2005ல் அமல்படுத்தியது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையிலான இத்திட்டத்தில், ஆண்டுக்கு, 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்தத் திட்டத்தின் பெயரை, 'விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' அதாவது வி.பி.,- ஜி ராம் -ஜி என பெயரை மாற்றி, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவை, லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு, 100 நாள் வேலை வழங்க உறுதி அளிக்கும் நிலையில், புதிய மசோதா 125 நாள் வேலை வழங்க உறுதி அளிக்கிறது.
இப்போதைய திட்டத்துக்கான முழு நிதியையும், மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவின்படி, மத்திய அரசும், மாநில அரசுகளும், 60:40 என்ற சதவீதத்தில், திட்டத்திற்கான நிதி சுமையை ஏற்க வேண்டும்.
அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்கள் மட்டும், 10 சதவீத நிதி வழங்கினால் போதும். ஊரக வேலை திட்டத்தால், விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில், விவசாய பணிகள் தீவிரமாக நடைபெறும் கால கட்டங்களில், இந்த திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதை, 60 நாட்கள் வரை மாநில அரசுகள் நிறுத்தி வைக்கலாம்.
புதிய ஊரக வேலை திட்டப்பணிகள், விக்சித் பாரத் தேசிய ஊரக கட்டமைப்பு திட்டத்துடன் இணைக்கப்படும். குறிப்பாக, தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான பணிகள், ஊரக உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான கட்டமைப்பு பணிகள், மோசமான காலநிலையை மட்டுப்படுத்தும் பணிகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கிராமப்புறத்தில் வசிக்கும் எந்தவொரு நபரும், இந்த திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் அந்த நபருக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, ஆரம்பம் முதல் விமர்சித்து வந்தாலும், அதை ரத்து செய்தால், மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என, அந்தத் திட்டத்தை தொடர்ந்தது.
மேலும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை இத்திட்டம் பாதுகாக்கிறது என்பதையும் ஏற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் இருப்பதை தடுக்கும் வகையில், புதிய மசோதா வாயிலாக, தற்போது மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில், மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு, 60:40 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுகளுக்கு கூடுதலாக, 50,000 கோடி ரூபாய் வரை செலவு கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மத்திய அரசால் திட்டம் கட்டுப்படுத்தப்படும் போது, நாங்கள் ஏன், 40 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்றும், மாநில அரசுகள் வரும் நாட்களில் கேள்வி எழுப்பலாம்.
தற்போது பெரும்பாலான மாநில அரசுகளின் நிதி நிலைமை மோசமாகவும், அவற்றின் நிதி அதிகாரங்கள் குறைந்தும் இருப்பதால், அவை தங்களுக்கான 40 சதவீத பங்கை செலுத்த முடியாமல் தவிக்கும் நிலைமை உருவாகும்.
ஏற்கனவே மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட சில திட்டங்களில், பல மாநிலங்கள் தங்களின் 50 சதவீத பங்கை செலுத்த முடியாமல் திணறி வருவதால், அந்தத் திட்டங்களின் செயல்திறன் குறைவாகவே உள்ளது. அது போன்ற நிலைமை இந்த திட்டத்திற்கும் உருவாக வாய்ப்பு உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைபாடுகள் உள்ளன என்பது உண்மையே. அவற்றை சரிசெய்வதும், அதில் மாற்றங்கள் செய்வதும் அவசியமே. அதேநேரத்தில், அந்த மாற்றங்களால் திட்டம் சீர்குலைந்து விடக்கூடாது. அது நடக்காமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் என நம்பலாம்.

