PUBLISHED ON : மார் 25, 2024 12:00 AM

லோக்சபா தேர்தல் தேதி கடந்த, 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், நாடு முழுதும் உள்ள, 543 தொகுதிகளுக்கும், ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக, ஏப்ரல், 19ல் தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதற்கு முன்னதாக, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தர முன்னாள்ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தலைமையில்நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு, ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்தஅறிக்கையை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம், 14ம் தேதி சமர்ப்பித்துள்ளது.
மொத்தம், 18,626 பக்கங்கள் உடைய அந்த அறிக்கையில், 'நாடு முழுதும் தேர்தல் நடவடிக்கைகளை இரண்டு கட்டமாக மேற்கொள்ள வேண்டும். அதாவது, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு முதல்கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
'இரண்டாவது கட்டமாக, அடுத்த, 100 நாட்களுக்குள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்தத் தேர்தல்கள் அனைத்திற்கும், பொதுவான வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்' என்பது உட்பட பலபரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
'ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்' என, 2019 லோக்சபா தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே, பா.ஜ., தெரிவித்திருந்தது.
'தேர்தல் செலவுகளை குறைக்கவும், அரசு நிதி ஆதாரங்களை திறமையான வகையில் செயல்படுத்தவும், பாதுகாப்பு படையினரை சரியான முறையில் பயன்படுத்தவும், சிறப்பான கொள்கை முடிவுகளை எடுக்கவும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அவசியம். இதுதொடர்பாக பல்வேறுதரப்பினரிடமும் ஆலோசிக்கப்பட்டு, ஒருமித்த கருத்து உருவாக்கப்படும்' என்றும் கூறியிருந்தது.
அந்த அடிப்படையில் தான், ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, இக்குழுவினர், 47 அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெற்றுள்ளனர். அவற்றில், 32 கட்சிகள், இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆயினும், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில், சில பிரச்னைகள் உள்ளன. இந்த இரண்டு தேர்தல்களும் மாறுபட்ட பிரச்னைகள் மற்றும் அம்சங்களை உள்ளடக்கியவை. மக்களும் இந்தத் தேர்தல்களை வெவ்வேறு கோணத்தில் தான் அணுகுகின்றனர். உதாரணமாக, 2014 மற்றும் 2019 லோக்சபாதேர்தலில், டில்லியில் அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றி பெற்றது.
ஆனால், இதே மாநிலத்தில், 2015 மற்றும் 2020ல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனால் தான், சில எதிர்க்கட்சிகளும், தேர்தல் பார்வையாளர்களும், 'ஒரே நாடு ஒரே தேர்தல் முறை, மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு சாதகமாக மக்களை வளைக்கும் முயற்சி. மத்திய அரசில் உள்ள கட்சிக்கு சாதகமாக, அந்தக் கட்சியின் ஆட்சியே மாநிலங்களிலும் உருவாக வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகவே அமையும்' என்றும் விமர்சிக்கின்றன.
எனவே, நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த முற்பட்டால், அதற்கு நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்புஉருவாகும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, மாநிலங்களில் பதவி வகிக்கும், பா.ஜ., அல்லாதஅரசுகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கதவை கட்சிகள் தட்டும் சூழ்நிலையும்உருவாகலாம். மேலும், இந்த முறையை அமல்படுத்த அரசியல் சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும். அதுவும் எளிதில் நடைபெறும் விஷயமல்ல. எனவே, இந்த விஷயத்தில், மத்திய அரசு எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றுவது அவசியம்.

