UPDATED : மார் 09, 2024 10:48 AM
ADDED : பிப் 21, 2024 12:53 AM

டாக்டர்.கே.வீரபத்மன்
கட்டுரையாளர், உளவியல் மற்றும் சமூகசேவை துறை பேராசிரியர். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். திருப்பூர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர். தமிழகத்தில், 11 மாநகராட்சி, 44 நகராட்சி, 21 பேரூராட்சி, 32 கிராம ஊராட்சிகளில் குப்பை மேலாண்மை திட்டம் குறித்து பயிற்சி வழங்கியுள்ளார்.தன் குழுவினருடன் இணைந்து, நெகிழிக்கான மாற்றுப் பொருட்களை மக்களிடையே பிரபலப்படுத்தி வருபவர்.
திருப்பூரில் பயணிக்கும் நொய்யல், கவுசிகா நதியில் விளையாடி, குளித்து மகிழ்ந்த மக்கள் இன்றும் உள்ளனர்; அந்நீரை பருகியவர்களும் உண்டு. தெளிந்த நீரோடையாக இருந்தது, தற்போது மாசுபட்டு உருக்குலைந்திருக்கிறது. அதில் கொட்டப்படும் குப்பை தான் இதற்கு காரணம் என்பதை உணர்ந்தோம். நதியை மீட்டெடுக்க, திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தி, ஆறு, ஓடை, கால்வாய் உள்ளிட்ட இடங்களில் குப்பைக் கொட்டக் கூடாது என, தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
மக்காத குப்பையை எப்படி கையாள்வது, மறு சுழற்சிக்கென யாரிடம் வழங்குவது என்ற விபரம் பலருக்கு தெரிவதில்லை; உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு கூட தெரியாத நிலை இருந்தது. பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்கள், சேகரிக்கும் குப்பையை, ஓரிடத்தில் தேக்கி வைத்து, தங்கள் பணியை நிறுத்திக் கொள்கின்றன. இது தவறான செயல். குப்பைத் தொட்டியில்லா நிலை உருவாக வேண்டும் என்பது தான், மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு.
தமிழகம், டார்ஜிலிங், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், உ.பி., ம.பி., பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா என பல மாநிலங்களில், 360 பேர் எங்கள் குழுவில் உள்ளனர். அவர்கள், குப்பை மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்காத குப்பையை சேகரித்து மறு சுழற்சிக்கு அனுப்புகின்றனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பின் சுகாதார அதிகாரிகள், ஆய்வாளர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு, பயிற்சி வழங்குகிறோம். மத்திய அரசு, 'துாய்மை இந்தியா' திட்டத்தில், துாய்மையான கிராமங்களை தேர்வு செய்து விருது வழங்குகிறது. அத்தகைய நிலையை எட்ட வழிகாட்டுகிறோம்.
மாற்றுப் பொருள்
'நெகிழி' பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்பது, மத்திய, மாநில அரசுகளின் அறைகூவல். 'அவற்றின் உற்பத்தியை நிறுத்த வேண்டியது தானே' என பலரும் வாதிடுவர். உணவு பொருள் தயாரிப்பு உள்ளிட்ட சில வகை பொருட்களை 'பேக்கிங்' செய்ய 'பாலித்தீன்' அவசியம். இதை தவிர்க்க முடியாது; மாறாக, அவற்றை மறு சுழற்சிக்கு வழங்கினால், அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும். அவ்வகையில், தமிழகத்தில் 29 மாவட்டங்களில், கலெக்டர்கள் ஏற்பாட்டின் படி, கண்காட்சி நடத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாலித்தீனுக்கு மாற்றுப் பொருள் அறிமுகம் செய்திருக்கிறோம்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, ஒரு நாளில், 100 கிலோ குப்பை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்' (மொத்த கழிவு உருவாக்கிகள்) எனப்படுகின்றனர். திருச்சி, கோவை மாநகராட்சி நிர்வாகங்கள், தினமும், 50 கிலோ குப்பையை வெளியேற்றுபவர்களை 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்' என வகைப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றன. அவர்கள், குப்பையை தாங்களே மேலாண்மை செய்து கொள்ள வேண்டும்; அதற்குரிய தொழில்நுட்ப உதவியை உள்ளாட்சி நிர்வாகங்கள் வழங்கும்.
மட்கும் மற்றும் மட்காத குப்பையாக, வீடுகளிலேயே தரம் பிரித்து வழங்க வேண்டும்; இது சரியாக நடக்காத பட்சத்தில், அடுத்தடுத்த செயல்களும் சரியாக நடக்காது. வீடுகளில் தினமும் சேகரமாகும், 400 முதல், 500 கிராம் குப்பையை நம்மால் தரம் பிரிக்க முடியாவிட்டால், டன் கணக்கிலான குப்பையை, நகராட்சி, மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களால் எப்படி தரம் பிரிக்க முடியும் என்பதை உணர வேண்டும். 'என் குப்பை, என் பொறுப்பு' என்ற மனநிலை உருவாக வேண்டும்.
பாறைக்குழியும் 'பார்க்' ஆகும்!
பல இடங்களில் பாறைக்குழியில் குப்பை கொட்டப்படுகின்றன; நிலத்தடி நீர் பாதித்து, சுற்றுச்சூழல் மாசுபடும். இந்த குப்பையில் இருந்து மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, பேட்டல் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறும். 'ப்வேட்டல்' என்ற ஆங்கில வார்த்தைக்கு 'விபத்தில் நேரிடும் மரணம்' என்ற சம்பவத்துக்கு இந்த வார்த்தையை பயன்படுத்த கேட்டிருக்கலாம்.
குப்பையால் நிரம்பியுள்ள பாறைக்குழியில், ஆங்காங்கே துளையிட்டு அதனுள் இருக்கும் மீத்தேனை உறிஞ்சி எடுத்துவிட்டால், தேங்கியுள்ள குப்பை நிலத்தடியில் அமிழ்ந்து விடும்; அதன் மீது மண் நிரப்பி அழகிய பூங்காவாக மாற்ற முடியும்; அதற்கான தொழில்நுட்ப வசதிகளை எங்களால் ஏற்பாடு செய்து கொடுக்க முடியும்.
காரைக்குடி, கம்பம், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில், மட்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்து, அருகேயுள்ள மார்க்கெட் உட்பட இடங்களுக்கு மின் வசதி வழங்கி வருகின்றனர். பாலித்தீன் பையை பயன்படுத்தி, 'பைரோ ஆயில்' என்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. பாலித்தீன் பயன்படுத்தி சாலையும் அமைக்கப்படுகிறது. சில இடங்களில் பயோ கேஸ் தயாரிக்கின்றனர்.
சில கல்லுாரிகளில், 'வேஸ்ட் மேனேஜ்மென்ட்' என்ற பாடப்பிரிவும் உள்ளது. மாநில அரசு, தற்போது, துாய்மைப் பணியை தனியார் மயமாக்கியுள்ள நிலையில், இத்துறை சார்ந்து படித்து பட்டம் பெற்றவர்களின் தொழில்நுட்ப அறிவு, அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
கட்டுப்படுத்த என்ன வழி?
துாய்மைப் பணியாளர்கள், காலை நேரங்களில் மட்டுமே, வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கின்றனர். அதிகாலையிலேயே வேலைக்கு செல்வோரால், குப்பையை, துாய்மை பணியாளர்களிடம் வழங்க முடிவதில்லை. மாலை பணிமுடித்து வீடு திரும்பும் அவர்கள், குப்பையை கால்வாய் உள்ளிட்ட இடங்களில் வீசி விடுகின்றனர். எனவே, மாலையிலும், குப்பை சேகரிக்க வேண்டும்.
சாலையோர தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் பலர், உணவுக்கழிவுகளை இரவு நேரங்களில், தெருவோரம் கொட்டுகின்றனர்; அவர்களையும், உணவுக்கழிவுகளை தரம் பிரித்து, வழங்க உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், பல ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்டிருக்கும் குப்பையை, 'பயோமைனிங்' முறையில் அகற்ற வேண்டும்.
பள்ளி மாணவ, மாணவியர், 'பால் பாய்ன்ட் பேனா' பயன்படுத்துவதை தவிர்த்து, 'இங்க் பேனா' பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். குப்பை மேலாண்மை குறித்து, அடுத்த தலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான், வரும் 20, 30 ஆண்டுகளில், குப்பையில்லா நகரை நம்மால் நிச்சயமாக உருவாக்க முடியும்.