/
வாராவாரம்
/
சிந்திப்போமா
/
மிகப்பெரிய உணவு பஞ்சம் எதிர்கொள்ளப்போகிறோம்
/
மிகப்பெரிய உணவு பஞ்சம் எதிர்கொள்ளப்போகிறோம்
UPDATED : மார் 09, 2024 10:48 AM
ADDED : பிப் 21, 2024 12:55 AM

டாக்டர் கே.அசோகன்
கட்டுரையாளர், கோவை வ.உ.சி., உயிரியல்பூங்கா இயக்குனராகவும், வன விலங்கு
கால்நடை மருத்துவராகவும் பணியாற்றியவர். 15 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் குறித்து, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு விழிப்புணர்வுஏற்படுத்தியவர். 300 யானைகளுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தியுள்ளார்; 50 யானைகளை காப்பாற்றியுள்ளார். நாட்டில் முதல் முறையாக,மலைப்பாம்புகள் குறித்து ஆராய்ச்சிமேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கால்நடை மேய்ச்சலுக்கும், வேளாண்மைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தற்போது, கால்நடை வளர்ப்பு குறைந்து வர முக்கிய காரணம், போதிய தீவனம் கிடைக்காதது தான். சமீபகாலமாக வன விலங்குகளின் தொல்லையால், கால்நடை வளர்ப்போர் மேய்ச்சல் நிலங்களுக்கு கால்நடைகளை அனுப்புவதில்லை. வேறுவழியின்றி பெரும்பாலான கால்நடைகள், குறிப்பாக பசுக்கள், குப்பை கழிவை உட்கொள்வதால் அவை பாதிக்கப்படுவதுடன், அவற்றின் பாலை பருகுவோருக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
கோடைகாலங்களில் வெயிலின் தாக்கமானது கால்நடைகளையும் பாதிக்கும். சூரிய கதிர்வீச்சு, காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை பொறுத்தே, கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். கால்நடைகளுக்கும் 'ஹார்மோன்' மாற்றங்கள் நிகழும். பால் உற்பத்தி, 20 சதவீதம் குறைவது, சினை பிடித்தல் தள்ளிப்போவது போன்றவை உதாரணம்.
குறையும் எண்ணிக்கை
ஆடுகளில் அதிகமாக வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க திறன் குறையும். ஒட்டகங்கள், பன்றிகள், கழுதைகள், குதிரைகள், கோவேறு கழுதைகள், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கிராமங்களில், வீட்டுக்கு தேவையான பாலுக்கு கறவை மாடு வளர்ப்பர். இதற்கு தேவையான தீவனம் கடைகளில் வாங்கியதில்லை. வயல், வாய்க்கால்களில் கிடைக்கும் புற்களை அறுத்து வந்து இரவில் கொடுப்பர். வறட்சியால், புற்கள் அறுக்க முடியாத சூழ்நிலையில், கறவை மாடுகள் வளர்ப்பது வெகுவாக குறைந்து போனது.
20வது கால்நடை கணக்கெடுப்பின்படி, தேசியளவில் தமிழகம், பசுவின எண்ணிக்கையில், 13வது இடத்திலும், எருமையின எண்ணிக்கையில், 14, செம்மறியாட்டின எண்ணிக்கையில், நான்காவது, வெள்ளாட்டின எண்ணிக்கையில், ஏழாவது, கோழியின எண்ணிக்கையில், இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மேய்ச்சல் நிலங்களின் நிலை
அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகளின்படி, மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில், 45 சதவீதம் நிலப்பரப்பு (59.42 லட்சம் எக்டேர்) பயிரிடும் பரப்பாக உள்ளது. ஆனால், கால்நடைகளுக்கான நிரந்தர மேய்ச்சல் நிலங்களின் பரப்பு, மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில், 0.83 சதவீதம் (1.08 லட்சம் எக்டேர்) மட்டுமே.இந்த வேளாண் பரப்புக்கும், மேய்ச்சல் நிலப்பரப்புக்கும் உள்ள வித்தியாசமே, தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்களை அதிகப்படுத்துவது மற்றும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நாடு முழுவதும் எந்த வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும், அதற்கு தேர்வு செய்யப்படும் இடம் மேய்ச்சல் நிலமாகத்தான் உள்ளது.
தொழிற்சாலைகள், சுரங்கங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், காற்றாலைகள், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள் என, பல்வேறு திட்டங்களும் இந்த வறண்ட புல்வெளிகளில் தான் செயல்படுத்தப்படுகின்றன. காடுகள் அழிப்பு பேசப்படும் அளவுக்கு, புல்வெளிகளின் அழிவு பேசப்படுவதில்லை.
வறண்ட புல்வெளிகளை மீட்டு, வளம் குன்றா வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க வேண்டிய காலம் இது. காலநிலை மாற்றம் என்பது, உலகளவில் கால்நடைகளை பாதிக்கும் அச்சுறுத்தலோடு உள்ளது. கோடைக்காலங்களில் பொதுவாக, 20 முதல் 27 சதவீதம் அளவில் மட்டுமே கால்நடைகள் சினைபிடிக்கின்றன. விவசாயம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் கலப்படம், போலி ஆகியவற்றாலும், நிலம், நீர், காற்றை மாசுபடுத்துகிறோம்.
பறவை நட்பு சூழல் அவசியம்
பறவைகளின் பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பதற்கும், நகரமயமாக்கலின் சவால்களுக்கு மத்தியில், பறவைகள் செழித்து வளர இடங்களை வழங்குவதற்கும், நகர்ப்புறங்களில் பறவை நட்பு சூழலை உருவாக்குவது அவசியம். இயற்கையால் மனிதர்களின் தேவையை மட்டுமே நிறைவு செய்ய இயலும். குறிப்பாக, 10 லட்சம் உயிரினங்கள், அழியும் தருவாயில் உள்ளன. தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், இவை முற்றிலும் அழிந்து போய்விடும் என்கிறது, ஒரு அறிக்கை.
சூழலியல் சிதைவுக்கும், உயிர்களின் அழிவுக்கும், மனித செயல்பாடுகளே முதன்மை காரணம். ஏறக்குறைய, 400 கோடி மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்வது இயற்கை தான். உதாரணமாக, புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும், 70 சதவீத மருந்துகள் இயற்கையாக கிடைப்பவை அல்லது இயற்கை மூலப் பொருட்களை கொண்டு உருவாக்கப்படுபவை.
காத்திருக்கும் ஆபத்து
தற்போது, 75 சதவீதத்துக்கும் மேலான உணவுப் பயிர்களின் மகரந்தசேர்க்கை, பறவைகள் மற்றும் விலங்குகளின் உதவியோடு தான் நடக்கின்றன. மகரந்த சேர்க்கைக்கு காரணமாகும் உயிரினங்கள் அழிந்து கொண்டே வருவதாலும், நிலப்பயன்பாடு மாற்றத்தாலும், பயிர்கள் உற்பத்தி பெரியளவில் குறைந்து வருகிறது. இது, மிகப்பெரிய உணவுப் பஞ்சத்துக்கு வழி வகுக்கும். மனிதர்கள், இயற்கை அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதால், 75 சதவீத நிலப்பரப்பு, அதன் இயற்கை தன்மையை இழந்து விட்டது. 66 சதவீத கடல் பகுதி பாதிக்கப்பட்டு வருகிறது. 85 சதவீத நீராதாரங்கள் மாயமாகி விட்டன.
கடந்த 2016ம் ஆண்டில், உணவுக்காகவும், விவசாயத்துக்காகவும் பயன்படுத்தப்பட்ட, 6,190 வகையான வளர்ப்பு நாட்டு விலங்கினங்களில், 55 வகையான நாட்டு ரக விலங்கினங்கள் அழிந்து விட்டன. 1,000க்கும் மேற்பட்டவை, அழியும் தருவாயில் உள்ளன. இயற்கையும், இயற்கை சார்ந்து வாழும் உயிர்களும் அழிக்கப்பட்டு வருவதால், மனித இனம், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்துகளை சந்திக்க வேண்டி வரும். அதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, அவசர அவசியம்.