/
வாராவாரம்
/
சிந்திப்போமா
/
அடுத்த தலைமுறைக்கு நாம் தரப்போகும் அபாயம்
/
அடுத்த தலைமுறைக்கு நாம் தரப்போகும் அபாயம்
UPDATED : பிப் 07, 2024 08:00 AM
ADDED : பிப் 07, 2024 02:15 AM

ரவிக்குமார்
கட்டுரையாளர், தமிழ்நாடு வேளாண் பல்கலை, நீர் மற்றும் புவிசார் ஆராய்ச்சி மைய பேராசிரியர், விஞ்ஞானி. சொட்டுநீர் பாசனம் குறித்த 'ஸ்பிரின்குலர் அண்டு டிரிப்ரிகேசன்' நுால் ஆசிரியர். 40 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். 2011ல் சிறந்த ஆராய்ச்சிக்கான தேசியளவிலான விருது, பெற்றவர்.
தமிழகத்தில், சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. எதிர்பாராத அதிக மழைப்பொழிவு, திடீர் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. பல்வேறு காரணிகளால் பருவநிலை, காலநிலை மாற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
வருங்காலங்களிலும், மழைப் பொழிவின்போது மாற்றங்கள் அதிகளவில் நிகழலாம். அதே சமயம் நீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மாசு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. வெள்ள பாதிப்பு சார்ந்த இயற்கை சீற்றங்களை ஓரளவு கட்டுப்படுத்தவும், நீர் பற்றாக்குறையை சமாளிக்கவும் அரசு, பொதுமக்கள் ஒத்துழைப்பின் படி ஆக்கப்பூர்வமான நீர் மேலாண்மை திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டியது அவசியம்.
அச்சுறுத்தல்
நீரின் முக்கியத்துவம் அறிந்த நம் முன்னோர் குளம், ஏரி, அணைகளை உருவாக்கி நிலத்தடி நீரை உயர்த்தினர். அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்பவும் தொலைநோக்கு பார்வையுடனும், போதிய நீர் மேலாண்மையை நம் முன்னோர் கையாண்டதால் நாம் அதை தற்போதும் பயன்படுத்தி வருகிறோம். நம் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லப் போவது என்ன? என்பதுதான் தற்போதைய கேள்வி. கடந்த, 30, 40 ஆண்டுகளுக்குமுன், திறந்தவெளி கிணறுகள் அதிகம் இருந்தன; குறைந்த அடியிலேயே நீர் எடுத்து பயன்படுத்தினர். தற்போது 90 சதவீத திறந்தவெளி கிணறுகள் வற்றி மறைந்துவிட்டன. ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. சில மாவட்டங்களில், 600 முதல் 1,000 அடி வரை ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டும் நீர் கிடைப்பதில்லை.
மொத்தமாக நம்மிடம் உள்ள நன்னீரில் 70 சதவீதம், விவசாய பாசனத்துக்கும், மீதமுள்ளவை தொழில்துறைக்கும், அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்துகிறோம். அதிகரிக்கும் மக்கள் தொகை, குறைந்து வரும் நிலத்தடி நீர் பெரும் அபாயத்தை கண்முன் நிறுத்துகின்றன. நிலத்தடி நீர் முக்கியமான இயற்கை வளங்களில் ஒன்று. பற்றாக்குறை, தவறான பயன்பாடு வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தலாகியுள்ளது.
விழிக்கணும்
நிலத்தடி நீரை சேமிக்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதிக மழை, அதிக வறட்சி என பருவநிலை சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் மீண்டும் பூமிக்குள் சுத்தமாக்கி அனுப்ப வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலை நீர் நுட்ப மையம் சார்பில் மழை நீரை சுத்தமாக்கி மீண்டும் நிலத்துக்குள் அனுப்பி செறிவூட்ட, மூன்று தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிடைமட்டமாக நகரும் வடிகட்டி, செங்குத்தாக நகரும் வடிகட்டி, வடிகுழாய் வடிகட்டி என தொழில் நுட்பங்களை, மிகக்குறைந்த செலவில் செயல்படுத்தி, மழை நீரை சுத்தமாக்கி நிலத்துக்குள் மீண்டும் அனுப்ப முடியும். குறைந்த இடம் போதும் என்பதால், விவசாய நிலங்கள், வீடுகளிலும் சுத்தமான மழைநீர் சேமிப்பை சாத்தியப்படுத்த இயலும்.
தற்போது, நிலத்தடி நீர் குறைந்து மாசுபடுத்தப்படுகிறது. இதை, ஐந்து, நுாறு ஆண்டுகள் ஆனாலும் சரி செய்ய இயலாது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பாவும் இதுபோன்ற சிக்கலில் மாட்டியுள்ளன. இந்தியா தற்போதே விழித்துக் கொள்ள வேண்டும். நிலத்தடி நீர் பற்றாக்குறை, மாசு போன்ற சிக்கல், அடுத்த தலைமுறையை பெரிய பிரச்னையில் தள்ளிவிடும். நீர் மாசு கட்டுப்படுத்த, ரசாயன பயன்பாடு அதிகரித்து மனித இனத்தை பேரழிவுக்கு கொண்டு சென்று விடும். உடனடியாக, நிலத்தடி நீரை சுத்தமாக்கி சேமிக்க வேண்டியது அவசியம்.
சொற்பம் தான்
தமிழக அரசு, பொதுமக்கள், விஞ்ஞானிகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் ஒன்றிணைந்து, போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். சிறிய கட்டமைப்பாக இருந்தாலும் மழை நீர் சேமிப்பு அவசியம். மழை நீர் கட்டமைப்பை அதிகம் உருவாக்குவதால் வெள்ள பாதிப்பின் அளவு குறைந்து, நிலத்தடி நீர் வளம் மேம்படும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வீடு, அலுவலகங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதை பின்பற்றுபவர்கள் ஒரு சதவீதத்துக்குள் குறைவானவர்கள் தான். அதுவும் தண்ணீர் கிடைக்காத பகுதியில் உள்ளவர்களே மழை நீர் கட்டமைப்பை ஏற்படுத்துகின்றனர். மழை நீர் கட்டமைப்பின் அவசியம் உணர்ந்து அனைவரும் செயல்படுத்த வேண்டும்.
மழை நீர் கட்டமைப்பு உருவாக்கி, நீரை சேமித்து பயன்படுத்துபவர்களுக்கு சில சலுகை, மானியத்தை அரசு அறிவிக்கலாம். அதன் வாயிலாக மழை நீர் சேமிப்பை மக்களிடம் ஊக்குவிக்கலாம். தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நீர் மேலாண் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
மழை நீர் சேமிக்கும் அதே அளவுக்கு, அதை சுத்தமாக்கி நிலத்துக்குள் செலுத்த வேண்டும். மழைப் பொழிவு காலங்களில், மழை நீர் சேமிப்பு முறைகளை பின்பற்றி நிலத்தடி நீர் செறிவூட்ட வழிவகை செய்ய வேண்டும். இது குறித்த வழிகாட்டுதலை விவசாயிகள், பொதுமக்களுக்கு வழங்க வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர்.