/
வாராவாரம்
/
சிந்திப்போமா
/
'மாயமாகும்' மக்கள்... நீலகிரிக்கு என்னதான் ஆச்சு!
/
'மாயமாகும்' மக்கள்... நீலகிரிக்கு என்னதான் ஆச்சு!
'மாயமாகும்' மக்கள்... நீலகிரிக்கு என்னதான் ஆச்சு!
'மாயமாகும்' மக்கள்... நீலகிரிக்கு என்னதான் ஆச்சு!
UPDATED : ஜன 05, 2024 02:22 PM
ADDED : ஜன 03, 2024 01:07 AM

சி.ம.ஆனந்த பார்த்தீபன்
கட்டுரையாளர், கோவை கிருஷ்ணா பல்தொழில்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறை பேராசிரியர், பேராசிரியர்களுக்கான, 'குருபிரம்மா' விருது, 'தங்கத்தமிழன்' விருது பெற்றவர். சிவோகா மனிதவள மேம்பாட்டு நிறுவன இயக்குனர்: தமிழர் பண்பாட்டு வாழ்வியல் பயிற்சியாளர். இதுவரை ஏழு தன்னம்பிக்கை புத்தகங்களை எழுதியவர். தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு குறித்த பாடபுத்தகங்களை எழுதுபவர்.
தமிழர் நிலத்திணைகளில் பாலை நிலம் தவிர்த்து, மீதமுள்ள நான்கு நிலங்களில் குறிஞ்சியே சிறந்தது; வளமுடையது. குறிஞ்சி நிலத்தில், வாழ்க்கைக்கு போதுமான வளம் இயற்கையாகவே கொட்டிக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும், அருவிகளும், சிற்றாறுகளும் சிலிர்த்துக் கொண்டு ஓடிய வண்ணமிருக்கும். மலை என்றாலே குறிஞ்சிப் பூ பூத்து, குளிர்ப்போர்வை போர்த்தும் சுகமான இடம். அந்த மலைகளுக்கெல்லாம் ராணி என்றால், எப்படியிருக்கும்?
நீலகிரி என்றால், நீல நிறமான மலை என்று பொருள். நீலகிரி என்ற பெயர், 600 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. நீலகிரிக்கு பக்கத்திலுள்ள சமவெளியில் நின்று காணும்போது, நீலநிறமான படலம் மலையை போர்த்தி இருப்பது போல் தோன்றும்.
முதல் முறையாக கி.பி.1602ம் ஆண்டில், 'பெர்ரீரி' என்ற போர்த்துகீசியப் பாதிரியார் நீலகிரி மலையை கண்டுபிடித்தார். தொன்மையான பழங்குடி மக்களான தோடர்கள், குறும்பர்கள், கோத்தர்கள் என, பல இனக்குழுக்கள் வாழும் செய்தி, அப்போது தான் சமவெளியில் வசிக்கும் மக்களுக்கு தெரிந்தது.
அதன் பின், 200 ஆண்டுகளுக்கு பிறகு தான், அதாவது, 1819ம் ஆண்டில், அன்றைய கோவையின் பிரிட்டீஷ் கலெக்டர் ஜான் சலீவன், நீலகிரி மலைக்கு சென்று, நீலகிரி மலையை உண்மையில் ஆராய்ந்து அரசுக்கு தெரியப்படுத்தினார்.
இடம்பெயர்வு
அன்றிலிருந்து இன்று வரை, நீலகிரி மாவட்டத்தில் எண்ணற்ற காலப்பரிணாமங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 7.35 லட்சம் மக்கள் அதாவது, தமிழக மக்கள் தொகையில், ஒரு சதவீதம் மக்கள் இருந்தார்கள். அது, தற்போது கூடியிருக்கலாம் என்றாலும் கூட, சமீபகாலத்தில், நீலகிரியின் மக்கள் பிறந்த ஊரை விட்டு வேறிடத்துக்கு இடம்பெயர்வது அதிகரித்து விட்டது.
பொதுவாக, போன நுாற்றாண்டு வரைக்கும் பிழைப்பு தேடி, வேறிடம் போவது என்பது சகஜமாக இருந்தது. ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. சரியான பொருளாதார வசதிகள் இல்லாதது, வேலை வாய்ப்பின்மை, கல்விச்சாலை வசதியின்மை, மருத்துவ வசதியின்மை என பல காரணங்கள், அந்த இடம்பெயர்வுக்கு பின்னால் இருந்தது.
ஆனால், இந்த நுாற்றாண்டிலும் அந்த காரணங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வி, தற்போது நீலகிரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை பார்த்தவுடன் எழுகிறது. சில்லென்று வீசும் குளிர்க்காற்றோடு, மலைராணி மடியில் பவனி வந்தவர்கள், நீலகிரியில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்த, மலை மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்கள், கோவை போன்ற பெருநகரங்களை நோக்கி வருவதற்கான காரணங்கள் என்ன?
பொருளாதார பிரச்னை
பெரும்பாலான மக்கள், விவசாயத்தை மிக முக்கியமான தொழிலாக செய்கிறார்கள். அதிலும் அவர்கள் பயிரிடும் தேயிலை, வருடம் முழுவதுக்குமான பொருளாதாரத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி தருகிறது.
கிலோவுக்கு வெறும் 12 ரூபாய் மட்டுமே தேயிலைக்கு கிடைப்பதால், எந்த லாபமும் இல்லாத விவசாயத்தை செய்வதை விட, அந்நிலத்தை விற்று விட்டு வேறு வேலைக்கு சென்று விடலாம் என்ற மனநிலையில், சிறு, குறு விவசாயிகள் உள்ளனர்.
வெளியூரில் இருக்கும் வசதி படைத்தவர்கள் பலர், நீலகிரியில் இடம் வாங்கி, காட்டேஜ் மாதிரியான வீடுகளை கட்ட துவங்கியிருப்பதால், விவசாயம் குறையத் தொடங்கி விட்டது. நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள், வன விலங்குகள் உலாவும் பகுதிகள் போன்ற இடங்களில் கட்டடம் கட்ட அனுமதியில்லை.
ஆனால், பல பங்களாக்கள் ஆங்காங்கே முளைத்தபடி இருக்கின்றன. சீட்டுக்கட்டாய் சரியும் அளவுக்கு நிலச்சரிவு அபாயத்தை, வரம்பு மீறிய கட்டடங்கள் உருவாக்கியிருக்கின்றன. மனிதர்களின் இயற்கை மீதான ஆதிக்கத்தின் விளைவாக, இயற்கை பேரிடர்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு மக்களை சமவெளிப் பகுதியை நோக்கி நகர வைத்திருக்கிறது.
நீலகிரி மக்களின் பெரும் சிக்கலே, அங்கிருக்கும் வேலை வாய்ப்பு பிரச்னை தான். நீடில் பேக்டரி, அரசின் வெடிமருந்து தொழிற்சாலை மற்றும் தேயிலை தொழிற்சாலைகள் என, சொற்ப அளவில் மட்டுமே வேலை வாய்ப்புக்கு அங்கே வாய்ப்புகள் உண்டு. அனைத்து வசதிகள் உள்ளடக்கிய மருத்துவமனைகளுக்கு, கோவை நோக்கி வர வேண்டி உள்ளது. ஊட்டி தொகுதியில் 5,944, குன்னுார் தொகுதியில் 3,100, கூடலுார் தொகுதியில் 821 பேர் என, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும், வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம், 9,8௬5 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று.
இதற்கான காரணங்களையெல்லாம் சரி செய்து, இருப்பவர்களை தக்க வைத்துக் கொள்வது அரசு மற்றும் அதிகாரிகளின் கையில் உள்ளது. ஏனென்றால், இவர்களிடம் மட்டும் தான் நீலகிரி பத்திரமாக இருக்கும்.