/
வாராவாரம்
/
சிந்திப்போமா
/
800 பாரம்பரிய விதை ரகங்கள் மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!
/
800 பாரம்பரிய விதை ரகங்கள் மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!
800 பாரம்பரிய விதை ரகங்கள் மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!
800 பாரம்பரிய விதை ரகங்கள் மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!
UPDATED : பிப் 07, 2024 07:59 AM
ADDED : பிப் 07, 2024 02:14 AM

பிரியா ராஜ்நாராயணன்
கட்டுரையாளர், திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரியில், 'ஆடை தயாரிப்பு மற்றும் மெர்ச்சன்டைசிங்'; பொள்ளாச்சி தியாகராஜா கல்லுாரியில் எம்.பி.ஏ., பயின்றவர். பாரம்பரிய விதைகளை மீட்டுருவாக்கம் செய்யும் முழுநேர விவசாயி. கள ஆய்வு செய்து, 800 விதை ரகங்களை சேகரித்து, திண்டுக்கல்லில் உள்ள தோட்டத்தில், விதைத்தீவு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்.
விதை என்பது, 'விதை முதல் விதை வரை' இருக்க வேண்டும். அவற்றை விதைத்து காய்கறிகளைப் பறித்து, அவற்றில் இருந்தும் விதை எடுக்கும் வகையில் தரமானதாக இருக்க வேண்டும். அவற்றையே மரபு ரகம், பாரம்பரிய விதை என்று கூறுகிறோம். ஒவ்வொரு விதையும் எப்படி கஷ்டப்பட்டு சேகரிக்கப்படுகிறது என தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், அதை வீணடிக்காமல் மரபு விதைகளை பாதுகாக்க முடியும். எதுவும் எளிதாக கிடைத்துவிடுவதில்லை. ஒவ்வொரு ரக விதையையும், தேடி அலைந்து கண்டறிந்து காப்பாற்றி வருகிறோம்.
மரபு ரக விதைகளை தற்சார்பு வீட்டுத்தோட்டம் அமைத்து உணவு தேவைக்கு எடுக்கலாம்; விதை எடுக்கவும் பயன்படுத்தலாம். கிராமங்களுக்கு சென்று, விவசாயிகளிடமும் விதை சேகரிக்கலாம். கேரளா உட்பட, வெளிமாநிலங்களுக்கு சென்றும், விதைகளை சேகரித்திருக்கிறோம். இதுவரை, 800 விதை ரகங்களை சேகரித்து வைத்துள்ளோம். விதைத் தேர்வில், மண் சார்ந்த ரகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு, 30 முதல் 35 கி.மீ., தொலைவில், காய்கறி ரகங்கள் மாறுபடும். மண் சார்ந்த ரகங்களை மட்டுமே, அந்தந்த பகுதியில் விளைவிக்க வேண்டும்; மரபு ரக விதைகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.
தபால் மூலம் பரவலான விதைகள்
கடந்த 2007 முதல், ஊர் ஊராக சென்று, பாரம்பரிய மரபு விதைகளை சேகரிக்க துவங்கினோம். அப்போதெல்லாம், சுய முகவரி எழுதிய தபால் ஒன்றை அனுப்பினால் அதன் மூலம், விதையை எங்களுக்கு அனுப்பி வைத்தனர். சில கிராமங்களில், 40 ஆண்டுகள் வரை பராமரித்து பாதுகாக்கப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் இருந்து பெற்றுள்ளோம்; பராமரித்து வருகிறோம். விதை என்பது வெறும் பொருள் அல்ல; எதிர்காலம். எங்களுக்கு, பொன் முட்டையிடும் வாத்து; செடியின் முதல் காயில் இருந்து விதை எடுக்கக்கூடாது; மூன்றாவது அறுவடையில் இருந்து விதை எடுக்கலாம்.
'வாட்ஸ்ஆப்' மூலம் வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. பலமுறை பேசியும் கண்டுகொள்ளாதவர்கள், 2010க்கு பிறகுதான், விழிப்புணர்வுடன் கவனிக்க துவங்கினர். பலரும் கூட்டாக சேர்ந்து, பொக்கிஷத்தை பாதுகாப்பது போல், அரியவகை விதை ரகங்களை பாதுகாத்து வைத்திருக்கிறோம். மரபுரக விதை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் மிகவும் குறைவு.
மரபு விதைகள் கிடைத்தால், அவற்றை செடியாக்கி எவ்வளவு விதை தயாரிக்க முடியுமோ, அவ்வளவு தயார் செய்ய வேண்டும். ஒரு விதையை, தேடி அலைந்து வாங்கினால், மறுமுறை எங்கும் சென்று வாங்கக்கூடாது. நாம் தான் மரபுவிதையை உருவாக்கி, பராமரிக்க வேண்டும்; பரவலாக்கவும் வேண்டும்.
விளைவித்து உண்ண வேண்டும்
விதை எடுப்பதற்காக மட்டும் வீட்டுத்தோட்டம் வைத்திருந்தால், அதில் எவ்வித பயனும் இல்லை; வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை நாம் சமைத்து உண்ண வேண்டும். அப்போதுதான், வீட்டுத்தோட்டம் அமைப்பவர் வெற்றி பெற முடியும். அதற்கு பிறகே, விதையை சேகரித்து வைக்கலாம்.
வீட்டுத்தோட்டம் அமைத்து, சமூக வலைதளப் பக்கத்தில் 'லைக்' வாங்கினால் மட்டும் போதாது. அதற்காக மட்டும் வீட்டுத்தோட்டம் வளர்க்க வேண்டாம். குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து, அரிய ரகங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று சூளுரை ஏற்க வேண்டும்.
தற்சார்பு தோட்டம் அமைத்து, விஷம் தெளிக்காத காய்கறிகளை விளைவித்து உண்ண வேண்டும். பொதுவாக, ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதை நஞ்சு என்றே கூறுவோம். மருந்து இல்லாமல், வீட்டுத்தோட்டத்தில், காய்கறி, கீரைகள் விளைவித்து வீட்டில் பயன்படுத்த வேண்டும். வீட்டுத்தோட்டம் வைத்துக்கொண்டு, கடைக்கு சென்று காய்கறி, கீரை வாங்கக்கூடாது.
விதையை செடியாக்கி, காய்கறி, கீரையை விளைவித்து, நாம் அனுபவித்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் மற்ற வருக்கு சொல்ல முடியும். விவசாயியாக இருந்தால் உற்பத்தி செய்த காய்கறிகளை, முதலில் அவர்களே சாப்பிட்டு பார்க்க வேண்டும். தேவையான விதைகளை சேமித்து வைத்துக்கொண்ட பிறகே, மற்றவர்களுக்கு வழங்கலாம்.
மண் சார்ந்த மரபு ரக விதைகள்
வீட்டுத்தோட்டத்தில் நன்கு வளர்ந்து, அதிக மகசூல் கொடுக்கும் ரகமே, மண் சார்ந்த ரகம் என்பதை உறுதி செய்யலாம். ஆயிரம் ரகம் வளர்ந்தாலும், மண் சார்ந்த ரகம் ஒரு சில மட்டும் கிடைக்கும். கத்தரி, பீர்க்கன், வெண்டை, தக்காளி, என, ஒவ்வொரு காய்கறியிலும் மண் சார்ந்த ரகங்களை எடுத்து பத்திரமாக வைக்க வேண்டும். நமது வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்க வேண்டும். பிறகு, அடுத்த தலைமுறையினருக்கும் மரபுசார் விதைகளை கொண்டு சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு காய்கறி ரகம் பிரசித்தி பெற்றது. அவர்கள், 30 முதல், 40 ஆண்டுகள் வரை, பராமரித்து வைத்துள்ளனர். அதிக காய்கறி ரகங்கள் இருந்தாலும், சமைக்க தெரிந்த ரகங்களை மட்டும் வளர்க்கலாம். ஒரே ரகத்தை அனைவரும் வைக்காமல், மாறுபட்ட ரகங்களை வளர்க்க வேண்டும்.
தக்காளியில் 70 ரகம் உண்டு
நாட்டு தக்காளி மட்டும், 70 வகை ரகங்கள் உள்ளன. ஆப்பிள் தக்காளி சதைப்பற்று அதிகம் இருக்கும். மஞ்சள் கோலி தக்காளியில், இனிப்புச்சுவை அதிகம். 'ஸ்பூன்' தக்காளி என்பது, மிகச் சிறிதாக இருக்கும்; ஒரு ஸ்பூனில் 10 தக்காளி வரை நிற்கும். திராட்சை போல் கொத்து கொத்தாக காய்க்கும் தக்காளி ரகங்களும் உள்ளன. சிவப்பு ரகத்தில் புளிப்பு இருக்கும்; மஞ்சள் ரகத்தில் இனிப்பு இருக்கும். இருதய வடிவ தக்காளி, பறித்து ஒன்றரை மாதமானாலும் கெடாது.
முக்கோண தக்காளி, 'பிங்க்' போண்டா தக்காளி ஆகியனவும் உள்ளன. நாட்டு ஆப்பிள் தக்காளி, நெல்லிக்காய் போல் இருக்கும். தமிழக பாரம்பரிய விதைகளை பரவலாக்கி வருகிறோம். விவசாயி களுக்கு நுகர்வோர் நலன் மிக முக்கியம்; விழிப்பாக இருந்து, மரபுசார் காய்கறிகளை விளைவித்து கொடுக்க வேண்டும். நுகர்வோரும் விழிப்புணர்வாகி, மரபுசார் காய்கறிகளை கேட்டால் தான், விவசாயிகளும் அவற்றை விளைவிப்பர்.
'ைஹப்ரீடு' ரகம் ஆகாது
தற்போது, மருந்து தெளிக்கப்பட்ட 'ைஹப்ரீடு' காய்கறிகள் அதிகம் விற்கப்படுகிறது. ஒரு சில ரகங்களை சாப்பிடவே கூடாது. காய்கறிகளை கழுவி பயன்படுத்தினாலும் ஊடுருவி வளர்ந்த காய்கறிகளில் நச்சுத்தன்மை நீங்காது.குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே, மரபுசார் விதைகளை பயன்படுத்த துவங்குவோம்; ஆரோக்கியத்தை உணர்வோம்.
சம்பாதிப்பது என்பதே ஒரு சாண் வயிற்றுக்குத்தான்; மருந்து கலந்த உணவை சாப்பிட, கோடி கோடியாக சம்பாதித்தும் பயனில்லை. மண் சார்ந்த ரகங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். கத்தரி, தக்காளி, புடலை, பீர்க்கன், சுரைக்காய், கொத்தவரை போன்ற காய்கள் தான் நமது மண்ணின் காய்கறிகள். மலைகளில் விளையும் காய்கறிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நுாற்றுக்கும் அதிகமான கிழங்கு ரகங்கள், 40க்கும் அதிகமான கீரை ரகங்கள் உள்ளன. தக்காளி-௭௦ ரகம், மிளகாய் - 78 ரகம், சுரைக்காய் - 65, அவரை - 30, பொரியல் தட்டை - 25, பீர்க்கன் - 20, வெண்டைக்காய் - 44 என, அரிய வகை விதைகள் கைவசம் உள்ளன. மரபுசார் விதைகளை உற்பத்தி செய்து, பரவலாக்கி வருகிறோம். நம்மிடம் வழக்கொழிந்த ரகங்கள், வெளிநாடுகளில் பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளனர். அவற்றை, மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வந்து சேர்த்ததும் பெருமையாக இருக்கிறது.