/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
தாமிரபரணி நதியை ஏன் காப்பாற்ற வேண்டும்?
/
தாமிரபரணி நதியை ஏன் காப்பாற்ற வேண்டும்?
PUBLISHED ON : ஜன 11, 2026 02:40 AM

தென்பொதிகை மலையில், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு மேலே உள்ள பூங்குளத்தில், பொங்கிப் பெருகி பாய்ந்தோடி வரும் தாமிரபரணி ஆறு பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தத்தைக் கடந்து பாபநாசம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி வழியாக அந்த மாவட்டத்தைக் கடந்து, துாத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல் வழியாக புன்னைக்காயல் என்னுமிடத்தில் மன்னார் வளைகுடாவில் கடலுடன் கலக்கிறது!
கிட்டத்தட்ட 120 கி.மீ., நீளமுள்ள இந்த ஆறு, 23 கி.மீ.,யை மலை மீதே கடக்கிறது. மலைக்குக் கீழே, பாபநாசத்தில் தான் முதன் முதலில் தரையில் தவழ்கிறது. சமவெளியில் இதன் ஓட்டம், 97 கி.மீ., மட்டுமே.
தென்மேற்கு பருவம் மற்றும் வடகிழக்கு பருவம் என, இரு மழைக்காலங்களிலும் இப்பகுதியில் மழை இருப்பதால், இது வற்றாத ஜீவநதியாகத் திகழ்கிறது. இது, தமிழகத்தில் பிறந்து தமிழக கடலோரத்திலே சங்கமம் ஆகும் ஆறு என்ற பெருமைக்குரியது.
அச்சு வடிவில் திருக்குறள்
திருக்குறளின் மூலப்பாடத்தை, ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் முதன்முதலாக 1812ம் ஆண்டு பதிப்பித்த போது, பிழை திருத்தம் செய்து செப்பனிட்டது தாமிரபரணி நதிக்கரை கவிராயர்கள் என்பது, கொல்கட்டா தேசிய நுாலகத்தில் கிடைக்கும் திருக்குறள் ஓலைச்சுவடி மூலம் தெரியவருகிறது.
அந்த ஓலைச்சுவடி தரும் குறிப்பு:
இது பொத்தகம், கலியுகாப்தம் 4900-க்கு ஆங்கிரச தொண்டை மண்டலம் சென்னைப் பட்டணத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது.
மாசம் தினச் சரிதையின் அச்சுக்கூடம், ஆண்டு 1812. திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர் பிழைதீர்த்துச் சென்னைப் பட்டினத்துக்கு அனுப்புவிச்சு, அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டு அச்சிற்பதித்த காகிதப் பொத்தகத்தை ஆழ்வார்திருநகரியில், தேவர்பிரான் கவிராயர், ஆதிநாத பிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேற்டு எழுதியிருப்பது மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாணக் கவிராயரிடத்தில் தீர்மானமானது. ஆழ்வார்திருநகரியில் சோதித்தது 999 தை மீ.
நம் ஏடு சுத்தமாய்த் திருத்தியிருக்கிறது. திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளில் தாமிரபரணி நதிக்கரை ஓரம்தான் அக்காலத்தில் பல புலவர் பெருமக்கள் வாழ்ந்தனர் என்ற வரலாறு உண்டு.
அச்சு வடிவில் திருக்குறள் இன்று நம் கைகளில் கிடைப்பதற்கு, தாமிரபரணி நதி தான் உதவி இருக்கிறது. மேலும், தாமிரபரணி கரையோரப் பகுதிகளில், கள ஆய்வுப்பணியில் 100க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆதிச்சநல்லுார், சிவகளை மற்றும் கொற்கை உள்ளன. இந்த அனைத்துப் பகுதிகளும் தற்போது தொல்லியல் வரலாறுகளில் முக்கியப் பகுதிகளாக உள்ளன. குறிப்பாக ஆதிச்சநல்லுாரில் தாமிரபரணி நதிக்கரையில் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் அகழாய்வுப் பணிகள் நடந்தன.
ஆதிச்சநல்லுாரைப் பொறுத்தவரை, இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் நடந்துள்ளன. இதில், மத்திய அரசு சார்பில் மூன்று முறையும், தமிழக தொல்லியல் துறை சார்பில் இரண்டு முறையும் நடந்ததுள்ளன.
வெளிநாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இந்த பகுதியில் பலமுறை ஆய்வுப் பணிகள் செய்துள்ளனர். அகழாய்வு பணியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம், இரும்பால் ஆன வாள், அம்பு, ஈட்டி போன்ற பொருட்களும், நெல் உமிகள், சங்க கால வாழ்விட பகுதிகள், முதுமக்கள் தாழிகள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சேல் கெண்டை மீன்
ஒவ்வொரு நதிக்கும் தனிச்சிறப்பான மீன் இனங்கள் உள்ளன . தாமிரபரணி நதிக்கு உரிய சிறப்பியல்பு பெற்ற இனம், 'சேல் கெண்டை மீன்!' இந்த வகை மீன்கள் அதிக மாகப் பெருகும்போது, தாமிரபரணி ஆற்றின் ஆரோக்கியம் மேம்படும்.
ஆனால், தாமிரபரணியில் இன்று அதிக மீன்களைக் காண முடிவதில்லை. ஆற்று ஓரத்தில் மணல்களும் இல்லை; ஆற்றில் மீன் இனங்களும் அதிகமாக இல்லை என்பது வேதனையான விஷயம் தான்.
இதிகாச புராணங்களில் தாமிரபரணியின் பெருமை சொல்லப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில், 'குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமங்கள் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்' என்று, தர்மரைப் பார்த்து ஒரு முனிவர் சொல்வதாக பாடல் ஒன்று உண்டு.
ராமாயணத்தில், தமிழகத்தின் ஒரே, வற்றாத, ஆண்டு முழுவதும் நீரோடும் நதி தாமிரபரணி என்று சொல்லப்பட்டுள்ளது. இது, பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் நற்குணங்களையும் கொண்டுள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் 41ம் சருக்கத்தின் ஒரு சுலோகத்தில், 'மலை சிகரத்தில் (பொதிகை) அமர்ந்தவர் அகத்திய முனிவர்; தாமிர பரணி ஆறு முதலைகள் நிறைந்தது' என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
தன்பொருநைப்புனல் நாடு
காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தில், தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் விளைந்த உயர்தர முத்துக்களைக் கொண்டு வந்து, ரகுவின் காலடியில் காணிக்கையாக வைத்ததாக ஒரு பாடல் இருக்கிறது.
சங்க இலக்கியங்கள் தாமிரபரணியை 'தன் பொருநை, பொருநை' என்கின்றன. தாமிரபரணி கரையில் பிறந்த நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் தாமிரபரணியை, 'தன்பொருநல், வண்பொருநல்' என்கிறார்.
சிலப்பதிகாரம், சேரனை, 'பொருநை பொறையன்' என்று போற்றுகிறது. பெரிய புராணத்தில் சேக்கிழார் பாண்டிய நாட்டை, 'தன்பொருநைப்புனல் நாடு' என்கிறார்.
'பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திருநதி' என்கிறார் கம்பர். 'அழகர் கருணைப்போல பொருநை பெருகிவரும் அழகைப் பாரும் பள்ளீரே' என்கிறது முக்கூடற்பள்ளு. தமிழ் இலக்கியங்கள் தாமிரபரணிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன.
கல்வெட்டுகள் மூலமாகவும் தாமிரபரணியின் பெருமையை அறிந்துகொள்ள முடிகிறது. 'முதல் ராஜராஜன் காலமான 1013-ம் ஆண்டு வெட்டப்பட்ட கல்வெட்டு, தாமிரபரணியில் சிற்றாறு (சித்ரா நதி) கலக்கும் இடத்தில் தாமிரபரணியை, 'தன் பொருந்தம்' என்று குறிப்பிடுகிறது.
தொழிற்சாலை கழிவுகள்
தாமிரபரணி கரையோர கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில், மூவேந்தர்களைப் பற்றிய குறிப்புகளும் அவர்கள் வழங்கிய கொடைகளும் இடம் பெற்றுள்ளன.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறதோ, அதே முக்கியத்துவத்துடன், திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென் திருப்பேரை, தொலைவில்லிமங்களம், திருக்குளந்தை, திருப்புளியங்குடி, திருக்கோளூர், வரகுணமங்கை, அரவிந்தலோசன் ஆகிய தலங்கள் நவ திருப்பதி என்று அழைக்கப்படுகின்றன.
நவ கைலாய கோவில்களும், நவ திருப்பதி கோவில்களும் தாமிரபரணி கரை ஓரமாகத்தான் அமைந்திருக்கின்றன. வைணவ, சைவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக தாமிரபரணி விளங்குகிறது என்று சொன்னால், அது மிகையல்ல.
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோவிலானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயம். இது, பாண்டிய மன்னர்களால் கி.பி., 700ம் ஆண்டில் கட்டப்பட்டது.
நெல்லையப்பர் கோவிலில் சுவாமிக்கு தனி ராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி ராஜகோபுரமும் உண்டு. பொதுவாக கோவில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும்.
ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோவிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமிக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.
நெல்லையப்பரும் காந்திமதியும், தாமிரபரணிக்கு நீராடச் செல்லும் வைபவமும் உண்டு. ஐந்து சபைகளில், நெல்லை தாமிர சபை.
தாமிர சபை பக்கத்தில் தாமிரபரணி தேவிக்கு சிலையும் உள்ளது. தாமிரபரணி மகாத்மியம் புத்தகத்தில், 'இந்தப் புண்ணிய நதி, வைகாசி விசாக நாளில் உற்பத்தியானது' எனக் கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு பெருமை கொண்ட தாமிரபரணி ஆறு பாபநாசம் கோவிலை கடக்கும் போது, அங்கு, திதி என்ற பெயரில் 100 டன் பழைய துணிகள் குறிப்பாக புடவைகள் ஆண்டுதோறும் வீசப்படுகின்றன.
பல லட்சம் லிட்டர் தொழிற்சாலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமலேயே தாமிரபரணி ஆற்றில் கலக்கவிடப்படுகின்றன. திருநெல்வேலியில் 200 டன் திடக்கழிவுகளை தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் கொட்டுகின்றனர்.இவை எதையும் அரசு தடுத்து நிறுத்தவில்லை. இதைச் செய்யாமல் தாமிரபரணி ஆற்றைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டாமா?
இத்தனை புனிதமிக்க ஆற்றில் கழிவுகளைச் சேர்த்து மாசுபடுத்துவது பாவமல்லவா? நதிகளை வைத்து தானே நாகரிகங்களைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது!எனவே, சிறப்பு வாய்ந்த தாமிரபரணியையும், அதன் கரையோர கோவில்களையும் காப்பாற்ற வேண்டியது அரசு மற்றும் பொதுமக்களின் கடமை என்பதையும் உணர வேண்டும்.
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர்,
கலைமகள் மாத இதழ்.
இமெயில்: Kizhambur@gmail.com

