/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
நீதிபதிக்கு எதிராக அவதுாறு கிளப்புவதில் ஏதோ சதித்திட்டம்!
/
நீதிபதிக்கு எதிராக அவதுாறு கிளப்புவதில் ஏதோ சதித்திட்டம்!
நீதிபதிக்கு எதிராக அவதுாறு கிளப்புவதில் ஏதோ சதித்திட்டம்!
நீதிபதிக்கு எதிராக அவதுாறு கிளப்புவதில் ஏதோ சதித்திட்டம்!
PUBLISHED ON : ஜூலை 28, 2025 12:00 AM

- மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவரிடம் நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோடு 'நான் மதரீதியாக ,சாதி ரீதியாக தீர்ப்புகள் வழங்கி வருவதாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட் டுகளை கூறிவருகிறீர்கள். இதுகுறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன? எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில், மதரீதியில் உள்ளதாக சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு வாஞ்சிநாதன், 'உங்கள் குற்றச்சாட்டு எது தொடர்பானது என தெரியவில்லை. அப்படி இருக்கும்போது இதற்கு எப்படி பதில் அளிக்க முடியும். நீங்கள் எழுத்துப்பூர்வமாக கூட கேள்வி எழுப்பினால் நான் எடுத்து பூர்வமாக பதில் அளிக்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார். நீதிபதி ஜி.ஆர்., சுவாமிநாதன் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய விவகாரம் சூடு பிடித்துள்ளது .
தற்போது வாஞ்சி நாதனுக்கு ஆதரவாகவும், ஜி.ஆர்., சுவாமிநாதனுக்கு எதிராகவும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, சிடி செல்வம் கலையரசன், சசிதரன், அரி பரந்தாமன், அக்பர் அலி, விமலா, எஸ் எஸ் சுந்தர் உள்ளிட்ட பலர் கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று தமிழக முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படபோவதாக அறிவித்திருக்கிறார்கள்.
உண்மையில்லை நீதிபதி ஜி.ஆர்.,சுவாமிநாதன், வலதுசாரிகளுக்கு ஆதரவானவர், குறிப்பிட்ட சாதி, இனங்களுக்கு ஆதரவானவர் என்ற குற்றச்சாட்டில் துளியளவும் உண்மையில்லை. இவர் திருவாரூர் மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற 7 வருட காலத்தில் சுமார் 1,03,685 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிபதி சந்துரு அவர்கள், 95,607 வழக்குக்கு தீர்ப்பு வழங்கியதை விட அதிகம்.
'வழக்கறிஞர்கள் மீது, நீதிபதிகளின் கோபம் தற்காலிகமானது தான், வழக்கு முடிவில் நியாயத்தின் பக்கம் தீர்ப்பு இருக்கும்' என்று கூறியவர் ஜி.ஆர்., சுவாமிநாதன். நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள், நீதிபதிகள் ஒன்றும் கடவுள் அல்ல; நீதியே கடவுள்' என்று கூறியவரும் இவரே.
இப்படி எல்லாம் சொன்னவர் மீது, நீதித்துறையில் முன்பு பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எதிர்ப்பதன் பின்னணியில் பல சந்தேகங்கள் எழுகிறது. தாங்கள் விரும்பிய தீர்ப்புகளை வழங்கினால் அவரை 'நீதி காவலர்' என்பதும், நியாயத்தின் பக்கம் தீர்ப்பு வழங்கினால் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தவாதி, ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவதுாறு பரப்புவதும் எந்த வகையில் நியாயம்?
குறிப்பிட்ட சில வழக்குகளுக்காக நள்ளிரவில் நீதிமன்ற நீதிபதிகளின் வீட்டு கதவுகள் திறக்கப்படுவதும், ஒரே இரவில் அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படுவதும் சாதாரண ஏழை குடிமக்கள் வழக்காடிகளுக்கு கிடைக்குமா என்றால் இல்லை என்பது நிதர்சன உண்மை. நீதித்துறையையும், காவல்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆட்சியில் இருந்தவர்கள் அழுத்தங்களை கொடுத்து எப்படி நடத்தினார்கள் என்பதற்கு பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும்.
ஜி.ஆர். சுவாமி நாதனுக்கு
எதிராக குரல் கொடுக்கும் முன்னாள் நீதிபதிகள் மீதும், அவர்கள் கொடுத்த தீர்ப்பின் மீதும் பல விமர்சனங்கள் இருந்தாலும் அது குறித்து எல்லாம் எனக்கு கோபம் இல்லை. தமிழ்நாட்டில் தற்போது நடக்கக்கூடிய படுகொலைகள் போதை கலாச்சாரம் குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது, இயற்கை வளச்சுரண்டல்கள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அதிகரித்து வரும் பாலியல் வக்கிரங்கள் என எவ்வளவோ நடப்பதை எல்லாம் தங்கள் கண்ணில் படாதது போல, காதுகளில் கேட்காதது போல, வாய் மூடி மவுனிகளாக இருக்கிறார்களே என்ற வருத்தத்தில் தான் இதை எழுதுகிறேன்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். நீதிபதி ஜி. ஆர்.,சாமிநாதன், உண்மையில் வலதுசாரி ஆதரவாளரா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவரா என்றால், இல்லை. இவர், பல இடங்களில் கம்யூனிச சித்தாந்தங்களையும், ஈ.வெ.ரா., போன்றவர்களையும் குர் ஆன், பைபிளில் உள்ள கருத்துக்களையும் உயர்வாக பேசி இருக்கிறார்.
கருத்து சுதந்திரம் பெருமாள் முருகன் என்கின்ற எழுத்தாளர், 'மாதொருபாகன்' என்ற நூலை எழுதியது கொங்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் ஒரு பிரிவினர் குறித்து அவதூறாக நுால் எழுது கிறார். பல்வேறு சாதி, சமூக அமைப்புகள் வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் பெருமாள் முருகனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி கடையடைப்பு என கொந்தளித்தன. அப்போது, பெருமாள் முருகனுக்கு எதிரான நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. அவருக்கு துப்பாக்கி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வழக்காடியது இந்த ஜி.ஆர் சுவாமிநாதன். பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நின்ற வெங்கடாசலபதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இவற்றை மறுக்க மாட்டார்கள்.
போலீசாருக்கு கண்டனம் சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்கில் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த ஜி ஆர் சுவாமிநாதன் தான், அதே சவுக்கு சங்கர் மீதான நில மோசடி வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தார். அதிகாரம் மிக்கவர்கள் தன்னிடம் பேசியதால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று சொல்லி, குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.
சந்திக்க வேண்டாம் 'என்னை நீதிமன்ற அறையில் யாரும் சந்திக்க வர வேண்டாம்; நீதிமன்றத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்' என்று தெரிவித்தவர் ஜி ஆர் சுவாமிநாதன். வலதுசாரி இயக்கத்தை சார்ந்தவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஜி ஆர் சுவாமிநாதன், 'நாளை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் போன்றவர்கள் அழைத்தாலும் அந்த கூட்டங்களிலும் நான் கலந்து கொள்வேன்' என்று தெரிவித்த கருத்தை, தற்போது இவரை எதிர்ப்பவர்கள் லாவகமாக இவர்கள் மறந்துவிட்டார்கள்.
'தப்லிக் ஜமாத்' அமைப்பு நடத்திய மாநாடுதான் கொரோனா நோய் பரவலுக்கு காரணம்' என்று பல வெளிநாட்டைச் சார்ந்த இஸ்லாமிய மதத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போது அவர்களுக்கு பிணைவழங்கியதும் இவரே. ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட 70 வழக்குகளையும் இவர்தான் ரத்து செய்தார் .
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்தவர்.
ஸ்ரீரங்கத்தில் பிராமணாள் ஹோட்டல் சேதப்படுத்தப்பட்ட வழக்கில், திராவிடர் கழக உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்தார்.
போலி பாஸ்போர்ட் விவகாரதில் ஐ.பி.எஸ்.,அதிகாரி டேவிட்சன் ஆசிர்வாதம் குறித்து, அப்போதைய பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய போது, அந்த வழக்கை முழுமையாக விசாரித்து, 'பாஸ்போர்ட் மோசடி நிகழ்ந்த காலத்தில் மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர்.
அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையென்றால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது' என்று தீர்ப்பளித்தவரும் இந்த நீதிபதி தான்.
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டிற்கு வாகனங்களில் வருவோருக்கு பாஸ் வழங்குவது குறித்த வழக்கை விசாரிக்கும் போது, 'மற்ற கட்சி மாநாடுகளில் பங்கேற்பவர்களுக்கு இதுபோல் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறீர்களா, என்று கேள்வி எழுப்பினார். உடனே 'சங்கிகளின் முருகன் மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துவிட்டார்' என்று அவதூறு கிளப்பியவர்களும் இவர்களே.
தற்போது, நீதிபதி ஜி.ஆர்., சுவாமிநாதனுக்கு எதிராக வன்மத்தோடு மிரட்டும் தொனியில் அவதுாறு கிளப்புவதில் ஏதோ சதித்திட்டம் இருப்பதாக சந்தேகிக்கிறேன்.
திராவிட, கம்யூனிச, இந்து மத வெறுப்பு என எண்ணம் கொண்டவர்களின் கூட்டங்களில் கலந்துகொண்டு, பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தியும் பேசியவர்கள், வாஞ்சிநாதன் என்ற வழக்கறிஞரை முன் முன்முகமாக வைத்து செய்யும் அரசியல் சரிதானா.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்பால் பயன் பெற்றவர்கள், நீதியின் பக்கம் நின்று வழக்காடும் வழக்கறிஞர்கள், பொது மனிதர்கள் இந்த நீதிபதிக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இருப்பது, அநீதிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பது போலல்லவா ஆகிவிடும். ஒரு நபரை எதிர்த்து இத்தனை பேர் குரல் கொடுப்பது, ஏதோ விஷயத்தை மடைமாற்றம் செய்யும் முயற்சியோ என, சந்தேகிக்க தோன்றுகிறது.
- இராம ரவிக்குமார் -
இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்