PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM

இரா.அர்ஜூன மூர்த்தி, தமிழக பாஜ
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கை, 505 வாக்குறுதிகளுடன், பொருளாதார மீட்சி, தொழில் துறை முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் புரட்சிகர மாற்றங்களுக்கு உறுதியளித்தது. ஆனால், 2025 ஆகஸ்ட் வரையிலான தரவுகள், இந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேறவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதற்கு மாறாக, பா.ஜ., ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகியவை உள்நாட்டு உற்பத்தி, தொழில் துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன.
87 சதவீத வாக்குறுதி தோல்வி
சமீபத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்ட, 'விடியல் எங்கே?' அறிக்கை, தி.மு.க.,வின் 2021 தேர்தல் அறிக்கை தோல்விகளை ஆவணப்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகக் கூறினாலும், அன்புமணியின் அறிக்கை, 505 வாக்குறுதிகளில் 66 மட்டுமே முழுமையாகவும், 66 பகுதியாகவும் நிறைவேற்றப்பட்டதாகவும், 87 சதவீதம்
அதாவது, 373 வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என்றும் ஆதாரங்களுடன் விமர்சிக்கிறது.
விடியல் உறுதி, யதார்த்த இருள்
* ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல்
* தொழில் துறை மீட்சிக்கு 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
* மதுரை- - துாத்துக்குடி தொழில் வழித்தடம் அமைத்தல்
* சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு சிறப்பு நிறுவனங்கள் உருவாக்குதல்
* திறன் பயிற்சி சட்டம் இயற்றுதல்
* தனியார் துறையில் 75 சதவீத உள்ளூர் இட ஒதுக்கீடு
* முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்த வட்டி கடன்கள்
* ஆண்டுக்கு 25,000 இளைஞர்களுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு 'ஸ்டார்ட் அப்' கடன்கள்
- இவை முக்கிய வாக்குறுதிகள்.
பொருளாதார நிவாரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை முறையே 5 மற்றும் 4 ரூபாய் குறைத்தல், சமையல் எரிவாயு உதவியாக 100 ரூபாய் வழங்குதல் மற்றும் கொரோனா நிவாரணமாக 4,000 ரூபாய்
வழங்குதல் ஆகியவையும் உறுதியளிக்கப்பட்டன.
ஆனால், தமிழக வேலையின்மை விகிதம் 5-6 சதவீதமாகவும், இளைஞர்களிடையே 10 -- 15 சதவீதமாகவும் உள்ளது. தனியார் துறையில் 75 சதவீதம் உள்ளூர் இட ஒதுக்கீடு, தொழில் துறை எதிர்ப்பால் முடங்கியது. தொழில் துறை மீட்சிக்கு உறுதியளிக்கப்பட்ட 15,000 கோடி ரூபாய் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.
தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. வரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வு மக்களை வாட்டுகிறது.
தி.மு.க.,வின் 2021 அறிக்கை, மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் சென்னை- - சேலம் பசுமை வழித்தடம் போன்ற பெரிய திட்டங்களை முன்னெடுப்பதாக உறுதியளித்தது.ஆனால், 2025 வரை, இத்திட்டங்கள் காலதாமதம் மற்றும் நிதி பற்றாக்குறையால் பின்னடைவை சந்தித்துள்ளன. உதாரணமாக, சென்னை- - சேலம் எட்டு- வழி நெடுஞ்சாலை திட்டம், நிலம் கையகப்படுத்துதல் பிரச்னை மற்றும் சுற்றுச்சூழல் எதிர்ப்பால் முடங்கி
உள்ளது.
ஜி.டி.பி., தொழில் துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு: ஒரு ஒப்பீட்டு பார்வை
மாநில உள்நாட்டு உற்பத்தி
கடந்த 2024- - 25ம் ஆண்டில், தமிழ்நாடு 11.19 சதவீத ஜி.டி.பி., வளர்ச்சியை பதிவு செய்து, மொத்த ஜி.டி.பி., 27.2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
ஆனால், இந்த வளர்ச்சி, அ.தி.மு.க., ஆட்சியின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
தொழில் துறை வளர்ச்சி
தமிழகம் 2024- - 25ல், 14.7 சதவீதம் தொழில் துறை வளர்ச்சியை அடைந்துள்ளது. இது ஆட்டோமொபைல், ஐ.டி., மற்றும் ஜவுளி துறைகளால் உந்தப்பட்டது.
ஆனால், தி.மு.க., உறுதியளித்த மதுரை- - துாத்துக்குடி தொழில் வழித்தடம் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் தாமதமாகியுள்ளன. குஜராத், 8-9 சதவீத தொழில் துறை வளர்ச்சி; உத்தர பிரதேசம், 7-8 சதவீத வளர்ச்சி; மத்திய பிரதேசம், 6-7 சதவீத வளர்ச்சியுடன் முந்தியுள்ளன.
தமிழகத்தில் வேலையில்லாதோரின் சதவீதம் 5-6 ஆக உள்ளது. இளைஞர்களிடையே இது 10- - 15 சதவீதம் வரை உயர்ந்து காணப்படுகிறது.
குஜராத், 3.9 சதவீத வேலையின்மை; மத்திய பிரதேசம், 2.6 சதவீத வேலையின்மை; உத்தர பிரதேசம், 5.2 சதவீத வேலையின்மையைக் காட்டுகின்றன.
மொத்தம் 505 வாக்குறுதிகள், 87 சதவீத தோல்வி. நம் மாநிலத்தை, 30 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து விட்டது தி.மு.க., இந்த முரண்பாடுகள் மற்றும் தோல்விகள், மக்களின் தீர்ப்பை
தீர்மானிக்கும்!