PUBLISHED ON : ஏப் 15, 2024 12:00 AM


பிரதமர் மோடி சமீபத்தில் ஜம்முவில் பிரச்சாரம் செய்யும் போது அணிந்திருந்த தலைப்பாகை பலரது கவனத்தையும் ஈர்த்தது.இப்போது அந்த தலைப்பாகையை உருவாக்கியவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மணீஷ்சிங் ஜம்வால்தான் அவர்,ஜம்முவைச் சேர்ந்தவர்,தலைப்பாகை செய்வதை குடும்பத் தொழிலாக தொடர்பவர்,தலைப்பாகை செய்வதில் மேலும் கவனம் செலுத்தி விதவிதமாக இவர் உருவாக்கும் தலைப்பாகை பலரையும் கவர்ந்து வருகிறது.'டோக்ரா' வகை தலைப்பகை எனப்படும் இவ்வகை தலைப்பாகை செய்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் இவர் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார்.
டோக்ரா பாரம்பரிய தலைப்பாகை, ஜம்முவின் உள்ளூர் மொழியில் 'சஃபா' அல்லது 'பக்ரி' என்றும் அழைக்கப்படுகிறது.பல்வேறு சமூக, மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் டோக்ரா தலைப்பாகை அணியப்படுகிறது.
இது ஞானம், அறிவு மற்றும் தூய்மையை அடையாளப்படுத்துகிறது.பின், ராஜ்புத் சமூகத்தினர் மத மற்றும் சமூக செயல்பாடுகளுக்கு முன்னதாக இதனை அணிவார்கள். இது 'துர்ரா' எனப்படும் வலுவான மற்றும் நன்கு ஸ்டார்ச் செய்யப்பட்ட மடல் கொண்டது.இளஞ்சிவப்பு நிற தலைப்பாகை பெரும்பாலும் மணமகன் மற்றும் மணமகளின் தந்தைகளால் அணியப்படும்.
திருமணத்திற்கு முந்தைய நாள் இதனை அணிவதை பெருமையாக கருதுவர் மற்ற ஆடைகளுடன் ஒப்பிடும்போது தலைப்பாகை ஒரு விலையுயர்ந்த பொருளாகும்.5- மீட்டர் அளவுள்ள சாதாரண துணியை வாங்கி, விரும்பிய வண்ணத்தில் சாயமிடுவார்கள். பின்னர் அது ஸ்டார்ச் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது.
தலைப்பாகை கட்டுவது ஒரு கலை , அலங்கரிக்கப்பட்ட துணி ஒரு நபரின் தலையில் கலைநயத்துடன் கட்டப்பட்டு, பின்னர் உரியவரின் தலையில் வைக்கப்படுகிறது. விஐபி..க்களுக்கு முன்பு உபயோகித்த ஒரு தலைப்பாகையைக் கொண்டு தயாரிப்பர்.
எல்லா பராம்பரியத்தையும் தொலைப்பது போல இன்றைய இளைஞர்கள் இந்த தலைப்பாகை கட்டுவதையும் தவிர்த்து வருகின்றனர்.அவர்களுக்கு இதில் எல்லாம் இப்போது ஆர்வமும் இல்லை நேரமும் இல்லை.திருமணத்தின் போது மட்டும் தவிர்க்கமுடியாமல் அணிந்து கொள்கின்றனர்.இப்போது பிரதமர் அணிவதால் இந்த டோக்ராகவிற்கு புத்துயிர் கிடைத்துள்ளது.
பொதுவாக நமது பகுதியில் ஆண்கள் துண்டினைத் தலையில் கட்டிக்கொள்ளும் போது அது தலைப்பாகை எனப்படுகிறது. இது வேலையின் தீவிரத்தைக் காட்டும் குறியீடாகவும் உள்ளது.பாரதி தலைப்பாகை அணிவதை பெருமையாக கருதினர் அவரை முண்டாசுக்கவிஞர் என்றே இதனால் அழைக்கிறோம். இப்போதும் கோவிலில் பரிவட்டம் கட்டுதல் என்ற பெயரில் தலைப்பாகை கட்டப்படுவது அந்த நபருக்கு கிடைக்கும் உயர்ந்த மரியாதையாகக் கருதப்படுகிறது.
தலைப்பாகை செய்வதை ஒரு கலையாகக் கையாண்டு வரும் மணீஷ் சிங்கிற்கு சமீபத்தில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் சிறந்த இளைஞர் என்ற மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது இந்த விருதினை வாங்கும் போது இவர் அணிந்திருந்த தலைப்பாகை இன்னும் சிறப்பாக இருந்தது.
இவரது நிரந்தர வாடிக்கையாளர்களின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஒருவர்.இப்போது பிரதமரும் இவரது வாடிக்கையாளராகிவிட்டார்.

