PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM
![]() |
புதுக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களில் பலர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர்.
சிங்கப்பூரில் பணியாற்றினாலும் அவர்களது குடும்பம் இங்கேயேதான் உள்ளது, வருடத்திற்கு ஒரு முறையோ இருமுறையோ வந்து பார்த்துவிட்டு செல்வர்.
![]() |
அவர்களில் ஒருவரான தமிழரசன் என்பவர் தனது மகன்களுக்கு தனது சொந்த ஊரான அறந்தாங்கியில் காதணி விழா வைத்திருந்தார்.
![]() |
இதற்கான பத்திரிகையை சிங்கப்பூரில் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு வைத்தவர் மரியாதை நிமித்தமாக தான் பணியாற்றும் நிறுவன முதலாளிகளுக்கும் வைத்தார்.
![]() |
அவர்களும் வாழ்த்தை தெரிவித்ததுடன் வருவதாகவும் தெரிவித்தனர், அது சம்பிரதாயமாக சொல்வது என்றுதான் எண்ணியிருந்தார்.
ஆனால் காதணி விழாவிற்கு முதல் நாள் அவர்கள் நிஜமாகவே வருவது உறுதியானதும் தமிழரசனுக்கு கையும் ஒடவில்லை காலும் ஒடவில்லை.
நண்பர்கள் உறவினர்களுடன் கலந்து பேசி வரும் முதலாளிகளுக்கு சிறப்பு வரவேற்பு வழங்க முடிவு செய்தார்.
அதன்படி விழாவிற்கு வந்த முதலாளிகளான லீ வே குவான்,என் ஜி யூச் ஆகியோரை சாரட் வண்டியில் அமரவைத்து சென்டை மேளம் முழங்க கரகம் காவடியுடன் தடபுடலாக வரவேற்று ஊர்வலமாக ஊருக்குள் அழைத்துச் சென்றார்.
விழா மண்டபத்தில் சிங்கப்பூர் விருந்தினர்கள் தமிழக கலாச்சாரப்படி வரவேற்கப்பட்டனர், விருந்தினர்களும் பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்து விழாவினை கலகலப்பாக்கினர்.,தமிழகத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பால் மகிழ்ந்த விருந்தனர்கள் உள்ளூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குதல் உள்ளீட்ட பல்வேறு உதவிகளை செய்துவிட்டுச் சென்றனர், அது மட்டுமின்றி புதுக்கோட்டையில் இருந்து இன்னும் எத்தனை பேர் வந்தாலும் வேலை வழங்கத் தயராக உள்ளதாக தெரிவித்தனர்.
அன்பை விதைத்தால் அது எப்படி எல்லாம் அறுவடையாகிறது...
-எல்.முருகராஜ்





