PUBLISHED ON : ஜூலை 22, 2026 08:59 PM

சென்னையை புகைப்படங்களால் செதுக்கும் 'சென்னை போட்டோ வாக்': 300-வது மைல்கல் புகைப்படப் பயணம் ஓர் அரிய அனுபவம்!
வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரம், பழமையும் புதுமையும் கரம்கோர்க்கும் ஒரு வரலாற்றுப் பெட்டகம். இந்த நகரத்தின் ஒவ்வொரு தெருவிலும், இடுக்கிலும் ஒளிந்திருக்கும் அழகைத் தங்கள் கேமரா லென்ஸ் வழியே உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வரும் 'சென்னை போட்டோ வாக்' குழு, சமீபத்தில் தனது 300-வது மைல்கல் போட்டோ வாக்கைக் கொண்டாடி சாதனை படைத்துள்ளது!

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு 'ஹாப் ஆன் - ஹாப் ஆஃப்' பாரம்பரியப் பேருந்துகளில் இந்த புகைப்பட உலா அரங்கேறியது. 50-க்கும் மேற்பட்ட உற்சாகம் நிறைந்த புகைப்படக் கலைஞர்கள், இரண்டு சிறப்புப் பாரம்பரியப் பேருந்துகளில் ஏறி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நகரத்தைச் சுற்றி வந்து தங்களின் கேமராக்களுக்கு வேலை கொடுத்தனர்.
விடியற்காலைச் சுறுசுறுப்பு, வீதி வியாபாரிகள், டீக்கடை அரட்டைகள் மற்றும் சென்னையின் அன்றாட வாழ்வியலின் எதார்த்தத் தருணங்கள்.
நாம் தினமும் கடந்து செல்லும் அதே இடங்கள் தான்! ஆனால், நகரும் பேருந்திலிருந்து, மாறும் வெளிச்சத்திலும் புதிய கோணங்களிலும் அவற்றைப் பார்த்தபோது, அதுவரை காணாத ஒரு புதிய சென்னை புகைப்படக் கலைஞர்களின் கண்களுக்குப் புலப்பட்டது.
இந்த அரிய மற்றும் மறக்க முடியாத 300-வது மைல்கல் போட்டோ வாக் நிகழ்வை, சென்னை போட்டோ வாக் குழுவின் முதன்மை மையக்குழு உறுப்பினர்களான ராமசாமி மற்றும் நவீன்குமார் ஆகியோர் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு வழிநடத்தினர்.
சென்னையின் வரலாற்றையும் கலை அழகையும் தங்களின் கேமரா மூலம் தொடர்ந்து பதிவுசெய்து வரும் இந்த அன்பான புகைப்படக் கலைக் குழுவின் பயணத்திட்டத்தைமெட்ரோபாலிட்டன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் செந்தில்குமார் போட்டோவாக்கை வெற்றிகரமாக நடத்த உதவியும் ஒருங்கிணைப்பும் செய்திருந்தார்.
-எல்.முருகராஜ்.
