ஒலகம் குளிருகாய குப்பையாத் தன்னக் கொளுத்திக் கொண்ட கவிஞன் பாரதி
ஒலகம் குளிருகாய குப்பையாத் தன்னக் கொளுத்திக் கொண்ட கவிஞன் பாரதி
PUBLISHED ON : மார் 28, 2024 12:00 AM

![]() |
மகாகவி பாரதி
தமிழர்கள் உள்ளங்களை எல்லாம் ஆட்கொண்ட ஆசுகவி
அவர் எழுதிய புத்தகங்களை விட அவரைப்பற்றி எழுதி வெளிவந்த புத்தகங்களின் எண்ணிக்கை மிக அதிகம்
பாரதி பற்றி இன்னும் இன்னும் அறியப்படவேண்டிய செய்திகள் ஆயிரக்கணக்கில் இருப்பதுதான் அதற்கு காரணம்.
முன் எப்போதையும் விட பாரதியின் அன்பர்கள் அவரைப்பற்றி பேசுவதையும், கேட்பதையும், படிப்பதையும் பெரிதும் விரும்புகின்றனர்.
இவர்களின் இந்த ஒட்டு மொத்த ரசனைக்காவும் உருவாக்கப்பட்டதுதான் 'காலத்தை வென்ற கவிஞன்' என்ற தலைப்பிலான பாரதி பற்றிய தொடர் சொற்பொழிவு,
![]() |
காலங்களில் அவன் வசந்தம் என்ற கவிஞர் கண்ணதாசன் புகழ்பாடும் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்த தொடர் நிகழ்ச்சி எதை நடத்தலாம் என்று ஆலோசித்த போது ஏகமனதாக எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் பாரதி பற்றி தொடர் சொற்பொழிவை நிகழ்த்துவது என்பது.
வழக்கம் போல கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளியும்,மைலாப்பூர் பாரதீய வித்யாபவனும் கைகோர்க்க பாரதி யார்? என்ற நாடகத்தின் மூலம் வாழும் பாரதியராக பலராலும் அறியப்பட்டு வலம் வரும் இசைக்கவி ரமணன்தான் இந்த நிகழ்வையும் தொகுத்து வழங்க உள்ளார்.
முதல் சொற்பொழிவு பாரதி குடும்பத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் ராஜ்குமார் பாரதியுடன் துவங்கியது.நல்லி குப்புசாமி,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, பாரதீய வித்யாபவன் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்துரைக்கு பிறகு நிகழ்ச்சி துவங்கியது.
பாரதியின் பாட்டுக்கு பலவித மெட்டுக்கள் இருந்தாலும் பாரதியின் மணைவி செல்லம்மாள் பாடி அவரது மகள் வழியாக ராஜ்குமார் பாரதி வரை கடைப்பிடிக்கப்படும் மெட்டுக்களாலேயே மேடையில் சில பாரதி பாடல்களை ராஜ்குமார் பாரதி பாடினார் மிக அற்புதமாக இருந்தது.வெறுமனே பாடல்களாக மட்டும் அல்லாமல் அந்த பாடல்கள் பிறந்த இடம் மற்றும் விதம் குறித்தெல்லாம் ராஜ்குமார் விளக்கம் தந்தது இன்னும் சிறப்பாக இருந்தது.
இந்த இளைய தலைமுறைக்கு நல்ல தமிழை கவித்துமான வரிகளை தரமான இலக்கியத்தை அறிமுகப்படுத்த விரும்பும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் இந்த நிகழ்ச்சியை வருங்காலத்தில் தவறவிடாமல் பார்க்கவையுங்கள், கேட்கவையுங்கள் அது பல தமிழ் வகுப்புகள் செய்திடாத மாயத்தை உண்டுபண்ணுவது மட்டுமல்லாமல் தலைமுறைக்கே சேர்த்திடும் புண்ணியமும் கூட.
நிகழ்ச்சியின் நிறைவாக இசைக்கவி பாரதி வாழ்ந்த புதுச்சேரி வீட்டிற்கு போயிருந்த போது ஏற்பட்ட தாக்கம் தந்த கவிதையை வாசித்த போது மொத்த அரங்கமுமே உருகியது கண்ணீர் பெருக்கியது.அந்த கவிதை இதுதான்..
அந்த
எட்டையபுரத்துச் சுப்பையா இங்க வளந்தானாம், ஒரு
கொட்டையத் துப்பி வெட்ட வெளியில கொடி வளத்தானாம்
தொட்டுக்காட்ட ஆருமில்ல துன்பப்பட்டானாம், எதுவும்
தொடங்குமுன்னே தோத்ததால தொவண்டு போனானாம்..
மனுசன் நடந்து நடந்து மணலுமொத்தம் சலிச்சிருச்சே சலிச்சிருச்சே! இங்க
மாறாத கதையப்பாத்து கடலும்கூட அலுத்துருச்சே அலுத்துருச்சே!
தனியொரு மனுசனா தலையில பாரமா
மனுசன மனுசனா மாத்திட வந்தானாம்
ஒலகம் குளிருகாய குப்பையாத் தன்னக்
கொளுத்திக்கிட்டானாம், ஆனா
கொழுந்து விட்டானாம்!
வானத்துக்கு வண்டியோட்டி வழக்குப்போட்டு
வாங்கிவந்தான் வாங்கிவந்தான், அத
வாசலேறிக் கொடுத்தபோதும் வாங்க ஒரு ஆளில்லேன்னு
ஏங்கிநின்னான் ஏங்கிநின்னான்
வானத்துக்கு தாகமா காட்டாத்து வேகமா
வாகனத்தத் தாண்டினான் வா வான்னு வேண்டினான், பசி
தாங்காம தன்னையே தின்னு
தணிச்சிகிட்டானாம், கொஞ்சம்
தரையத் தொட்டானாம்!
ஒலகம் மாறலப்பா ஒருத்தன்கூட தேறலப்பா தேறலப்பா, மனசு
கலகம் போடுதப்பா கட்டின வீடும் ஆடுதப்பா ஆடுதப்பா
மண்ணே சரிஞ்சாலும் விண்ணே இடிஞ்சாலும்
கண்ணே இருண்டாலும் காலே தொவண்டாலும், அந்த
முறுக்கு மீச நெனப்பு ஒண்ணே
முதக நிமித்துது, கொஞ்சம்
முன்னயும் தள்ளுது!
-எல்.முருகராஜ்


