
புரியாத விஷயங்களைப் புரியாத வகையில் சொல்லிப் புரியவைக்கும்பாணி 'ஜென்' கதைகளுக்கு உண்டு. இங்கே ஒரு கதை.
ஒருநாள் ஒரு ஜென் குரு, தன் சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சீடர்களைப் பார்த்து ஒரு கருத்தைச் சொன்னார்.
''இரண்டு பேர் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது மழைப்பெய்துகொண்டிருந்தது. அந்த மழையில் ஒருவனின் தலை நனையவில்லை'' என்றார்.
உடனே சீடர்கள் பேச ஆரம்பித்தனர்.
“அவன் ரெயின் கோட் போட்டிருந்தான். அதனால் நனையவில்லை” என்றான் ஒரு சீடன்.
“அப்படியானால் அவனது உடல் நனையவில்லை என்று குரு சொல்லியிருப்பார். தலை மட்டும் நனையவில்லை என்னும் போது, அவன் தொப்பி போட்டிருந்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும்” என்றான் மற்றொருவன்.
“சின்னக் குடை பிடித்திருக்கலாமே” என்றான் இன்னொருவன்.
குரு சிரித்தார்.
''நீங்கள் எல்லோருமே நான் சொன்னதை ஒரே கோணத்தில் பார்க்கிறீர்கள்.
இருவர் சென்றனர். மழை பெய்தது. ஒருவன் நனையவில்லை என்று
சொன்னேன். இருவருமே நனைந்துவிட்டார்கள் என்பதைத் தான் அப்படிக்
குறிப்பிட்டேன்'' என்றார் குரு.
சீடர்கள் தலை குனிந்தார்கள்.

