
பயறு வகைகள் அதிகமான புரதச்சத்து நிறைந்தவை .
உண்மை. 100 கிராம் அளவுள்ள பயறுகள், தானியங்கள் அளிக்கின்ற அதேயளவு கலோரி சக்தியை அளிக்கின்றன. அதையும் தாண்டி, பயறுகளில் புரதச் சத்து நிறைந்துள்ளது. இவை 18 சதவீதம் முதல் 25 சதவீதம் புரதத்தைக் கொண்டுள்ளன. இதில் சோயாபீன்ஸ் மற்ற பயறுகளின் புரதத்தின் அளவைவிட 35 முதல் 40 சதவீதம் அதிக புரதச்சத்தைக் கொண்டுள்ளது. அனைத்து பயறுகளிலும் போதுமான அளவு லைசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. ஆனால், இந்த அமினோ அமிலம் தானியங்களில் குறைவாக உள்ளது. எனவே பயறுகளை உணவில் சேர்ப்பதன் மூலம், தானியங்களில் உள்ள லைசின் குறைபாடு ஈடுகட்டப்படுகிறது.
விரால் மீன் ஒரு கடல் மீனாகும்.
தவறு. விரால் மீன் நன்னீரில் வாழும் தன்மையுடைய மீன் இனமாகும். அறிவியல் பெயர் சன்னா ஸ்ட்ரையேட்டா (Channa striata). இந்த மீன் உள்நாட்டு மீன் இனங்களில், கெண்டை மீன்களை விட முள் குறைந்த, சுவை மிகுந்த மீனாகும். எனவே, இது அதிக விலை மதிப்புள்ளதாக உள்ளது. விரால் மீன் நீண்ட உருளை வடிவ உடலைப் பெற்றிருக்கும். தலை பாம்பின் தலையைப் போன்று இருக்கும். இந்த மீன்கள் நீர்ப்பாசி, தாவரங்கள் நிறைந்த உள்நாட்டு நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை உள்ளிட்டவற்றில் காணப்படுகின்றன.

