தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/மாற்றத்திற்கு வித்திட்ட சாதனை நாயகி: ஷபானா பாசிஜ்-ரசிக்!

மாற்றத்திற்கு வித்திட்ட சாதனை நாயகி: ஷபானா பாசிஜ்-ரசிக்!

மாற்றத்திற்கு வித்திட்ட சாதனை நாயகி: ஷபானா பாசிஜ்-ரசிக்!


PUBLISHED ON : செப் 04, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2026 05:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு ஆணுக்கான கல்வியைக் கற்பிப்பது ஒரு தனிநபருக்குக் கல்வி கற்பிப்பது போன்றது; ஆனால், ஒரு பெண்ணுக்கான கல்வியைக் கற்பிப்பது என்பது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும், ஏன் ஒரு தலைமுறைக்கே கல்வி கற்பிப்பதற்குச் சமம்' என்ற வரலாற்று உண்மையைச் செயலில் நிரூபித்துக் காட்டியவர் ஷபானா பாசிஜ்-ரசிக்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அடக்குமுறைக்கு நடுவே பெண் கல்விக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த இந்தச் சாதனை நாயகி, இன்றைய உலகப் பெண் சமூகத்தின் ஒளிரும் முகமாகத் திகழ்கிறார்.Image 1615926ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பிறந்த ஷபானாவின் குழந்தைப் பருவம் சாதாரணமானதல்ல. முதலாம் கட்ட தாலிபான் ஆட்சிக் காலத்தில் (1996--2001) பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டபோது, ரகசியமாகச் செயல்பட்ட நிலத்தடிப் பள்ளிகளுக்குச் சென்று ஆபத்தான சூழலில் படித்துத் தேறியவர். பின்னாளில் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மிடில்பரி கல்லூரியில் உயர்கல்வி கற்றுத் தன் திறமையை நிரூபித்தார். வெளிநாட்டில் வசதியான வாழ்க்கை வாழும் வாய்ப்பிருந்தும், தன் நாட்டுப் பெண்களின் அவல நிலையை மாற்ற வேண்டும் என்ற உந்துதலுடன் சொந்த மண்ணிற்குத் திரும்பினார்.

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக 'ஆப்கானிஸ்தான் தலைமைத்துவப் பள்ளி' (SOLA - School of Leadership, Afghanistan) என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவரானார். இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஆப்கானியப் பெண் குழந்தைகளுக்கு நவீனக் கல்வியும், தலைமைப் பண்பும் ஊட்டி அவர்களை உலகின் முன்னணித் தலைவர்களாக மாற்றினார்.

2021 ஆகஸ்டில் தாலிபான்கள் மீண்டும் காபூலைக் கைப்பற்றியபோது, ஷபானாவின் வாழ்க்கை ஒரு போர்க்களமானது. பள்ளியின் மாணவிகளையும் ஆசிரியர்களையும் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழல். அப்போது, தாலிபான்கள் தன் மாணவிகளைக் குறிவைத்துத் துன்புறுத்திவிடக் கூடாது என்பதற்காக, அந்தப் பள்ளியின் பல வருட ஆவணங்களையும், மாணவிகளின் கல்விப் பதிவேடுகளையும் தன் சொந்தக் கைகளாலேயே தீயிட்டு எரித்துச் சாம்பலாக்கினார்.Image 1615927மாணவிகளை ஆப்கானிஸ்தானில் இருந்து பத்திரமாக விமானத்தில் வெளியேற்றும் அந்த இக்கட்டான கணத்தில், ஒருவேளை தான் பிடிபட்டாலோ அல்லது தன் அலுவலகம் சோதனையிடப்பட்டாலோ, எந்த ஒரு மாணவியின் பெயரும், முகவரியும் தாலிபான்களின் கைகளில் சிக்கக்கூடாது என்பதில் ஷபானா மிகத் தெளிவாக இருந்தார். அதனால் தான், மாணவிகளின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கடந்த கால அடையாளங்களையும் சாதனைக் குறிப்புகளையும் தன் கையாலேயே தீயிட்டு சாம்பலாக்கினார்.

சுருக்கமாகச் சொன்னால், மாணவிகளின் உயிருக்கும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் எந்த ஆபத்துகளும் வராமல் இருக்க, அவர்களின் கல்வி வரலாற்றையே தற்காலிகமாக அழித்துவிட்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஷபானாவிற்கு ஏற்பட்டது

தாய்நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தாலும், தன் இலக்கில் இருந்து பின்வாங்கவில்லை. காபூலில் இருந்து சுமார் 6,000 கி.மீ தூரத்தில் உள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு தனது மாணவிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். ருவாண்டா அரசு இவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. இன்று ருவாண்டா மண்ணில் சோலோ பள்ளிக்கான புதிய சர்வதேச வளாகத்தை நிறுவி, உலகெங்கிலும் உள்ள அகதிப் பெண் குழந்தைகள் கல்வி கறக உதவும் ஒளி விளக்காகத் திகழ்கிறார் ஷபானா.

ருவாண்டாவிற்கு கொண்டுவரப்பட்ட மாணவிகள் மற்றும் அதற்குப் பிறகு அங்கு சேர்ந்த மாணவிகள் பலரும் தற்போது தங்களது உயர் கல்வியை வெற்றிகரமாகத் தொடர்கின்றனர். பள்ளியின் முக்கிய நோக்கமே பெண் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வியை வழங்குவதோடு நின்றுவிடாமல், உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முழு உதவித்தொகையுடன் சேர்வதற்கான வழிகளை ஏற்படுத்துவதுதான். அதன்படி பல மாணவிகள் உலகின் பல்வேறு முன்னணிக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் உள்ள மிகவும் சோகமான மற்றும் வலி நிறைந்த ஒரு பகுதி எது என்றால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஆபத்தான சூழல் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிய மாணவிகள் பலர் தங்கள் பெற்றோரை விட்டுப் பிரிந்துதான் வாழ்கின்றனர். தாலிபான் ஆட்சியில் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்வதே ஆபத்தானது என்பதால், பல மாணவிகளால் தங்கள் பெற்றோரை நேரில் சந்திப்பதோ அல்லது எளிதில் தொடர்புகொள்வதோ பெரும் சவாலாக உள்ளது. சில மாணவிகள் தங்கள் குடும்பத்தினரை முற்றிலும் பிரிந்து பாதுகாப்பான நாடுகளில்தான் தங்கிப் படித்து வருகின்றனர். பெண் கல்விக்காகவும் சுதந்திரத்திற்காகவும் இந்தப் பிஞ்சுப் பருவ மாணவிகள் தங்கள் குடும்பத்தினரின் பாசத்தைத் துறந்துவிட்டு, ஒரு நீண்ட போராட்டப் பயணத்தை மேற்கொண்டு வருவது உலகையே கண் கலங்க வைக்கிறது.

வெறும் நேரடி வகுப்புகளோடு நின்றுவிடாமல், செயலி மூலம் ஆப்கானிஸ்தானுக்குள்ளேயே முடங்கிப்போன பல்லாயிரக்கணக்கான பெண் குழந்தைகளுக்கு ஆன்லைன் வழிக் கல்வியைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். இவரது இந்த அசாத்திய தைரியத்தையும் சேவையையும் பாராட்டி 'சிஎன்என் ஹீரோ' உள்ளிட்ட பல சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தடைகள் எத்தனையோ வரலாம், ஆனால் லட்சியம் உறுதியாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும் புதிய வரலாற்றை எழுதலாம் என்பதற்கு ஷபானா பாசிஜ்-ரசிக் ஒரு மச்சச்சுடர் சான்று. வான் உயர்ந்த சுவர்களை உடைத்து, கல்வி என்னும் ஆயுதத்தால் உலகை மாற்றிக்கொண்டிருக்கும் இந்த நவீன கால ஜான் ஆஃப் ஆர்க், ஒடுக்கப்பட்ட பெண்களின் அழியாத குரலாக என்றென்றும் நிலைத்திருப்பார்!

-எல்.முருகராஜ்

பெட்டிச் செய்தி

தாலிபான்கள் பெண்களின் உயர்கல்விக்குத் தடை விதித்ததோடு, மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் மற்றும் மருத்துவப் பயிற்சி நிலையங்களிலும் பெண்கள் படிக்கக் கடுமையான தடை விதித்துள்ளனர். இதனால், எதிர்காலத்தில் புதிய பெண் மருத்துவர்களே உருவாக முடியாத ஒரு சூழல் அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வயதான பெண் மருத்துவர்களை வைத்தே பெண்களுக்கான மருத்துவம் மற்றும் மகப்பேறுகளை சமாளித்து வருகின்றனர் அந்த மருத்துவர்களுக்கும் நிறைய கட்டுப்பாடு விதிப்பதால் கடுமையான மன உளைச்சலில் உள்ளனர்.அவர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் கிராமப்புறங்களிலும் சிறிய நகரங்களிலும் பெண் மருத்துவர்கள் அல்லது பெண் மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால், கர்ப்பமான பெண்களுக்குப் பிரசவம் பார்ப்பதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறத் தாலிபான்களின் சட்டம் அனுமதிப்பதில்லை அல்லது குடும்பத்தினர் அனுமதிப்பதில்லை. இதனால் முறையான மருத்துவமின்றி தாய்மார்களும் பச்சிளம் குழந்தைகளும் உயிரிழக்கும் அவலம் அதிகரித்து வருகிறது. இது மனித உரிமைகளுக்கு எதிரான செயல் மட்டுமல்லாமல், பெண்களின் உடல்நலனைப் பலிகொடுக்கும் செயல் என்றும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார அமைப்புகள் கடுமையாக எச்சரித்துள்ளன.சுருக்கமாகச் சொன்னால், 'பெண்களுக்குப் பெண் மருத்துவர்கள் வேண்டும்' என்ற எதார்த்தமான தேவையைக்கூட தாலிபான்கள் புரிந்து கொள்ளவில்லை மாறாக, குறுகிய கொள்கைகளின் அடிப்படையில் பெண்களின் கல்வியைத் தடுத்து நிறுத்தியுள்ளதால், இன்றைக்கு ஆப்கானிஸ்தான் மருத்துவத் துறை மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது என்பதே கசப்பான உண்மையாகும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us