
அழகின் மீது தீரா காதல் கொண்டவளே...
பழங்கால வானொலி பெட்டியின் புகைப்படத்தை 'ஸ்டேட்டஸ்' ஆக பதிவிட்டிருந்த தோழியிடம், அதன் முகவரி குறித்து விசாரித்தேன். சேலம் 'பொக்கிஷம்' என்றாள்.
'இந்த களிமண் சிலைக்கு குறைந்தது 80 வயது இருக்கலாம்' என கடையில் எனக்கு காண்பிக்கப்பட்டது கரடுமுரடாக இருப்பினும் வெகுவாய் என்னை ஈர்த்தது. சேலத்தின் அடையாளங்களில் ஒன்றான மாடர்ன் திரையரங்கின் புரொஜெக்டர்கள், அன்றைய 'பிலிம்' கேமராக்கள், வானொலி பெட்டிகள், டேப் ரிக்கார்டர்கள் என திரும்பும் இடமெல்லாம் பொக்கிஷங்கள்!
மரப்பாச்சி பொம்மைகள், டைப்ரைட்டிங் மிஷின், பித்தளை/ வெண்கல பாத்திரங்கள், ஓலைச்சுவடிகள் குறித்து நான் விசாரித்துக் கொண்டிருக்கையில், 'பஞ்சலோக விபூதி சங்கு' நீட்டப்பட்டது. அம்மாடி... செம கனம்! செட்டிநாடு வீடுகளில் பயன்படுத்தப்பட்ட தாழ்ப்பாள்கள், பழங்கால நாணயங்கள், தொலைநோக்கிகளும் விழிகளை விரிய வைத்தன!
விலையைப் பார்த்து ஆசைக்கு அணை கட்டுபவர்களுக்காக, பழங்கால பொருட்களைப் போன்று தோற்றமளிக்கும் பொருட்களையும் இங்கே விற்பனை செய்கின்றனர். பழம்பெருமை பேசும் பொருட்களால் உன் வாழ்விடத்தை அழகூட்ட விரும்பினால் இவை உனக்கு உதவக்கூடும்.
காதலுடன்... கண்ணம்மா.
பொக்கிஷம், சேலம்.93621 02473

