
எல்லா பெத்தவங்களுக்கும், பிள்ளைகள் மனசுல கனவை விதைக்கத் தெரியும்; ஆனா, பிள்ளைகள் மனசுல இருக்குற கனவை வளர்க்க எத்தனை பேருக்குத் தெரியும்?
என்னோட கிரிக்கெட் கனவுக்காக, விவசாயத்துக்குன்னு வைச்சிருந்த டிராக்டரை விலை பேசிட்டு எங்க அப்பா முருகேசன் சொன்னார்...
'உனக்கு ஒரு அண்ணன் இருந்து சம்பாதிச்சு கொடுத்ததா நினைச்சுக்கிறேன். இதைப்பத்தி யோசிக்காதே; நீ சாதிக்கணும்டா... அதான் முக்கியம்; போ... போய் சாதிச்சுட்டு வா!'
என் அம்மா பேரு சாவித்ரி.
'பொம்பளை புள்ள பேட் ஆடலாமா?'ன்னு, அடிக்கடி என்னை திட்டுவாங்க. ஆனா, என் கனவை புரிஞ்சுக்கிட்ட அன்னைக்கு ரொம்பவே தெளிவா சொன்னாங்க...
'ஒரு விஷயம் நமக்கு வேணும்னா, ஆசைப்பட்டா மட்டும் போதாது; அடம் பிடிக்கத் தெரியணும். நாம பிடிக்கிற அடத்துல தான், அது நமக்கு எவ்வளவு பிடிக்கும்னு மத்தவங்களுக்குத் தெரியும்!'
'இன்றைய, 'ப்ளேயர் ஆப் தி மேட்ச்' விருது பெறுபவர்... கவுசல்யா முருகேசன்!'
மைதானத்துல என் பெயர் உச்சரிக்கப்பட்ட அந்த கணத்துல, எல்லாரும் என்னை கொண்டாடினாங்க. ஆனா நான், முருகேசனையும், சாவித்ரியையும் என் மனசுக்குள்ளே கொண்டாடினேன்.
என்ன காரணம்னு இனியும் நான் விளக்கணுமா?

