
தஞ்சாவூர் மானம்புச்சாவடி; ஓலைச் சுவடி படியெடுப்பாளர் ரம்யாவின் வீட்டு அலமாரி முழுக்க, பட்டிமன்றம், கவிதை போட்டிகளில் குவித்த பரிசு கள்; ஓலைச்சுவடி படியெடுப்புக்கான அங்கீகாரங்கள்! சுவரில் மகன், மகள் வரைந்த ஓவியங்களுக்கு மத்தியில் அழகான குடும்ப புகைப்படம்; ரம்யா வின் கணவர் அன்புவும் தமிழ் பட்டதாரி.
கேட்டு கேட்டு சலித்த கேள்வி என்ன ரம்யா?
'தமிழ் படிச்சா ஆசிரியை பணிக்குதானே போகணும்; நீங்க ஏன் ஓலைச்சுவடியை படியெடுக்குறீங்க?' - இப்படி கேட்ட ஓராயிரம் பேர்கிட்டே, 'நான் இளங்கலை, முதுகலை, எம்.பில்., தமிழ் இலக்கியம் படிச்சது ஆசிரியர் பணிக்காக இல்லை... தேடலுக்காக'ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளே, 'நீங்க டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதலாமே'ன்னு என் 12 ஆண்டு கால உழைப்பை புரிஞ்சுக்காம கேட்பாங்க; சலிப்புதான்... ஆனா, பழகிருச்சு!
அவங்க சொல்றதுலேயும் ஒரு நியாயம் இருக்குதானே...
உண்மைதான்; எனக்கு நிரந்தரப்பணி இல்லை. தினக்கூலி அடிப்படையில 2012ம் ஆண்டுல இருந்து சரஸ்வதி மஹால் நுாலகத்துல ஓலைச்சுவடி படியெடுத்தேன். இப்போ, ஒரு சிறு ஓய்வு. ஓலைச்சுவடிகளை பதப்படுத்துற ரசாயனம், துாசுகளாலே உடல் உபாதைகள் ஏற்படுதுன்னாலும், இந்த ஓய்வுக்கு அப்புறம் படியெடுக்கிற பணியில இன்னும் தீவிரமா ஈடுபடுவேன்! ஏன்னா, என் தமிழை இந்தவிதத்துல அணுகுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
தற்போது தமிழ் - கன்னட அணி இலக்கண நுால்களான தண்டியலங்காரம் - கவிராஜமார்க்கம் இடையிலான கோட்பாடு குறித்து தன் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார் ரம்யா. இதற்காக, 37 வயதில் கன்னடம் பயின்றிருக்கிறார்.
ஓலைச்சுவடி கற்பித்த வாழ்க்கை பாடம்?
'ஓலைச்சுவடியில எழுதுறப்போ சிறிய பிழைன்னாலும் புதிய ஓலைச்சுவடியிலதான் எழுதணும்; இதை தவிர்க்க புலவர்களுக்கு திட்டமிடலும், மனதளவுல ஒத்திகையும் அவசியப்பட்டிருக்கும்'னு உணர்றேன். என் வாழ்க்கையில சில முக்கிய முடிவுகளை எடுக்குறதுக்கு முன்னாடி புலவர்கள் மனநிலையில இயங்குறேன்!
இந்த பணியில் பெருமைப் பட்ட தருணம்?
'வாசிக்க சிரமம் தர்ற ஓலைச்சுவடியை எங்கம்மா சுலபமா வாசிச்சிடுவாங்க'ன்னு என் மகனும், மகளும் அவங்க நண்பர்கள் மத்தியில சொல்றப்போ ரொம்பவே பெருமையா இருக்கு!
கோவில் நிலம் பற்றிய சுவடிகளை படியெடுத்து நீதிமன்ற வழக்குகளுக்கு உதவுவது, மருத்துவ குறிப்பு சுவடிகளை படியெடுத்து மருத்துவர்களுக்கு விளக்குவது எனும் ரம்யாவின் பணி இதுவரை மேடை ஏறியதில்லை. ஆனாலும், இத்துறையில் தன் எதிர்காலத்தை முதலீடு செய்திருக்கிறார்.
ரம்யாவின் புதுப்புது அர்த்தங்கள்* வாழ்க்கை? தேடல்* தமிழ்? கடல்* கனவு? அடையாளம்