/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
அடுக்குமாடி குடியிருப்பு மறு மேம்பாட்டுக்கு செல்லும் போது கவனிக்க வேண்டியவை
/
அடுக்குமாடி குடியிருப்பு மறு மேம்பாட்டுக்கு செல்லும் போது கவனிக்க வேண்டியவை
அடுக்குமாடி குடியிருப்பு மறு மேம்பாட்டுக்கு செல்லும் போது கவனிக்க வேண்டியவை
அடுக்குமாடி குடியிருப்பு மறு மேம்பாட்டுக்கு செல்லும் போது கவனிக்க வேண்டியவை
ADDED : டிச 13, 2025 07:47 AM

கான்கிரீட்டை அடிப்படையாக வைத்து தான் இன்றைய சூழலில் பெரும்பாலான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இவ்வாறு கட்டப்படும் கட்டடங்களை முறையாக பராமரித்தால், அவற்றின் ஆயுள் காலம், 50 ஆண்டுகள் வரை இருக்கும் என்று வரையறுக்கப்படுகிறது.
ஆனால், எதார்த்த சூழலில், பெரும்பாலான கட்டடங்கள் தரமாக கட்டப்பட்டாலும், பயன்பாட்டில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக 20 அல்லது, 30 ஆண்டுகளிலேயே சிதிலமடையும் நிலைக்கு சென்றுவிடுகிறது. இதனால், கட்டடங்களின் ஆயுள் காலம் வெகுவாக குறைகிறது.
தமிழகத்தில் குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் வீடு கட்ட வேண்டிய தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான நிலம் கிடைப்பதில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், பழைய கட்டடங்களை இடித்துவிட்டு அங்கு அதிக வீடுகளுடன் புதிய திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன.
இந்த வகையில் 100 வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம், 30 ஆண்டுகளை தொடும் நிலையில், மறு மேம்பாடு குறித்து யோசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சட்ட விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அடிப்படையில் மறு மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபட வேண்டும். பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை மறு மேம்பாடு செய்ய வேண்டும் என்றால், அதில் வீடு வாங்கியவர்கள் சங்கம் வாயிலாக தீர்மானம் போட்டு ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும். அதன் அடிப்படையில் தகுதியான கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அந்த கட்டுமான நிறுவனத்திடம் தங்களுக்கான எதிர்பார்ப்பு என்ன என்பதை தெளிவாக முன்கூட்டியே எடுத்துரைக்க வேண்டும். பழைய அடுக்குமாடி குடியிருப்பை மறு மேம்பாடு செய்யும் போது, ஒவ்வொரு உரிமையாளருக்கும் கிடைக்கும் மறு பயன் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இதில் எத்தனை பேர், தங்களது பங்கு நிலத்தை கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொண்டு வெளியேற நினைக்கின்றனர் என்று பார்க்க வேண்டும். எத்தனை பேர் மீண்டும் அங்கேயே வீடு பெற்று குடியேற விரும்புகின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும்.
இத்துடன் அத்திட்டத்தில் தற்போதுள்ள வீடுகள் எண்ணிக்கைக்கு அப்பால் கட்டுமான நிறுவனம் புதிதாக எத்தனை வீடுகள் கட்ட போகிறது என்பதை கவனிக்கனும். குறிப்பாக, தற்போதைய வீட்டு உரிமையாளர்கள் வசம் உள்ள யு.டி.எஸ்., அளவு மறு மேம்பாட்டுக்கு பின் என்னவாகும் என்பதை கணக்கிட வேண்டும்.
பெரும்பாலும், தற்போது, வீட்டின் பரப்பளவில், 60 சதவீதமாக உள்ள யு.டி.எஸ்., மறு மேம்பாட்டில் பாதியாக குறைய வாய்ப்புள்ளது என்பதை உரிமையாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். உங்களிடம் உள்ள யு.டி.எஸ்., சில் இருந்து ஒரு பகுதியை எடுத்து தான் கூடுதலாக கட்டப்படும் வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்க முடியும்.
பழைய குடியிருப்பில் விடுபட்ட அடிப்படை வசதிகளை புதிய திட்டத்தில் இருக்கும்படி பார்த்து கொள்ளலாம். அதே நேரம், அல்ட்ரா மாடல் அடிப்படையிலான ஆடம்பர வசதிகளை உரிமையாளர்கள் எதிர்பார்த்தால், அதற்கான கூடுதல் செலவுகளை ஏற்க தயாராக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
மறு மேம்பாட்டு திட்டத்தில், கட்டுமான நிறுவனத்திடம் தங்களுக்கான எதிர்பார்ப்பு என்ன என்பதை உரிமையாளர்கள் முன்கூட்டியே தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

