/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கதவு, நிலவு கட்டையின் கனம் எவ்வளவு இருக்க வேண்டும்? விளக்கம் அளிக்கிறார் கட்டுமான பொறியாளர்
/
கதவு, நிலவு கட்டையின் கனம் எவ்வளவு இருக்க வேண்டும்? விளக்கம் அளிக்கிறார் கட்டுமான பொறியாளர்
கதவு, நிலவு கட்டையின் கனம் எவ்வளவு இருக்க வேண்டும்? விளக்கம் அளிக்கிறார் கட்டுமான பொறியாளர்
கதவு, நிலவு கட்டையின் கனம் எவ்வளவு இருக்க வேண்டும்? விளக்கம் அளிக்கிறார் கட்டுமான பொறியாளர்
ADDED : ஆக 22, 2025 11:09 PM

வ டிகால் வெளியேற சோக்பிட்டில் கருங்கல் பயன்படுத்தியுள்ளோம். இந்த விஷயத்தில் கருங்கல் அல்லது ரிங் பயன்படுத்துவதில் எது சிறந்தது? ஒவ்வொன்றும் எவ்வளவு காலம் நீடிக்கும்?
-விக்னேஷ், சூலுார்.
எவ்வளவு காலம் என்றால் அது பயன்பாட்டை பொறுத்தும், பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையை கொண்டும்தான் கணக்கிட முடியும். மண்ணின் தன்மையை பொறுத்தும் முடிவு செய்யலாம்.
எது சிறந்தது என்றால், களிமண் போன்ற இடங்களில் ரிங் பயன்படுத்தி, நிறைந்தால் எளிதில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வாயிலாக அகற்றிவிடலாம்.
கருங்கல் பயன்படுத்தி அது நிறைந்தால் செலவு அதிகம். அவற்றை முற்றிலுமாக அகற்றி திரும்பவும் பயன்படுத்த நேரம் மற்றும் செலவு இரண்டுமே அதிகம். எனவே, ரிங் பயன்படுத்துவதே சிறந்த முறை.
நாங்கள் புதிதாக தரைத்தளம் மட்டும் உடைய வீடு கட்டியுள்ளோம். கான்கிரீட் மேல் புறமுள்ள காலம் கம்பிகளை அறுத்து எடுத்து விடலாம் என கூறுகிறார்கள்; இது சரியா?
-ராஜாராம், பட்டணம்.
முற்றிலும் தவறு. அந்த கம்பியை கொண்டு தான் எதிர்காலத்தில் முதல் தளத்தில் வீடு கட்ட முடியும். எனவே, கம்பிகளின் நடுவில் செங்கல் கொண்டு பில்லர் கட்டலாம் அல்லது மூன்றடி அளவிற்கு கான்கிரீட் கொண்டு நிரப்பி, பில்லர் கம்பிகளை கவர் செய்யலாம். இதனை முதல் தளம் கட்டும் பொழுது உடைத்துக் கொள்ளலாம்.
வீட்டின் முன்புற கதவு மற்றும் நிலவு கட்டையின் கனம் எவ்வளவு இருக்க வேண்டும்?
-ராம்குமார், கணியூர்.
நிலவு கட்டையின் கனம் குறைந்தபட்சம், 5 இன்ஞ் அகலத்திலும், 4 இன்ஞ் தடிமனாக இருக்க வேண்டும். கதவு பலகையின் கனம் குறைந்தபட்சம், 1.5 இன்ஞ் கனத்தில் இருக்க வேண்டும்.
சமையலறையில் பாத்திரங்கள் கழுவுவதற்கு பயன்படுத்தப்படும், 'சின்க்' வகைகளில் எது சிறந்தது?
-பாபு, சுங்கம்.
தற்போது, சந்தையில் குவார்ட்ஸ் வகையை சேர்ந்த சின்க் வந்துள்ளது. இது உபயோகிப்பதற்கு எளிதாகவும், பராமரிப்பதற்கு சுலபமாகவும் உள்ளது. மேலும், இந்த வகையில் சவுண்ட் புரூப் உள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்கினை பயன்படுத்தும்போது சத்தம் வரும்.
எங்கள் வீட்டின் முதல் மாடியில் உள்ள கழிவறைகளின் சுவர்களில் ஈரப்பதம் உள்ளதை எவ்வாறு சரி செய்வது?
-சுந்தர், ராமானுஜ நகர்.
கழிவறையில் டைல்ஸ் உட்புறமுள்ள பைப்புகளில் உடைப்புகள் ஏற்பட்டால், நீர்க்கசிவினால் ஈரப்பதம் ஏற்படும். இதை சரி செய்ய டைல்ஸ்க்கு இடையே சரியான இணைப்பு வைத்து, எப்பாக்சி பவுடர் கொண்டு நிரப்ப வேண்டும். தரையினை சரியான முறையில் வாட்டர் புரூப்பிங் செய்தால் இந்த பிரச்னை தீரும்.
நான் சில வருடங்களுக்கு முன் கட்டிய வீட்டில் கிரானைட்
பதித்திருந்தேன். இப்பொழுது கிரானைட்டின் மேற்பரப்பு செதில், செதிலாக உதிர்கிறது; அதை எவ்வாறு சரி செய்வது?
-குமாரசாமி, சுந்தராபுரம்.
தரமற்ற கிரானைட்டாக இருந்தால் இவ்வாறு நிகழும். அதை சரி செய்ய இயலாது. அதன் மேல் டைல்ஸ் பேஸ்ட் கொண்டு, தற்போது சந்தையில் எளிதாக கிடைக்க கூடிய கிரானைட் அளவுடைய பெரிய டைல்ஸ் ஒட்டிக் கொள்ளலாம்.
-பிரேம் குமார்பாபு,
செயலாளர், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.