/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டட அடித்தளத்தை களிமண்ளால் நிரப்பலாமா? எதிர்கால பாதிப்புகள் குறித்து பொறியாளர் விளக்கம்
/
கட்டட அடித்தளத்தை களிமண்ளால் நிரப்பலாமா? எதிர்கால பாதிப்புகள் குறித்து பொறியாளர் விளக்கம்
கட்டட அடித்தளத்தை களிமண்ளால் நிரப்பலாமா? எதிர்கால பாதிப்புகள் குறித்து பொறியாளர் விளக்கம்
கட்டட அடித்தளத்தை களிமண்ளால் நிரப்பலாமா? எதிர்கால பாதிப்புகள் குறித்து பொறியாளர் விளக்கம்
ADDED : ஆக 08, 2025 08:41 PM

நாங்கள் கட்டிக்கொண் டிருக்கும் புதிய கட்டடத்தில், அஸ்தி வாரத்திற்காக தோண்டப் பட்ட போது கிடைத்த களிமண்ணை பேஸ் மென்டுக்குள் பாதியளவு நிரப்பிவிட்டு, அதன் மீது கிராவல் மண்ணை நிரப்பி கொள்ளலாம் என்று, எனது கான்ட்ராக்டர் சொல்கிறார்; இது சரியா?
-குமாரசாமி, மதுக்கரை.
எக்காரணத்தைக் கொண்டும் பேஸ்மென்டிற்குள், களிமண்ணை நிரப்பக் கூடாது. களிமண்ணில் நீரை ஊற்றினால் அது விரிவடையும் தன்மை உள்ளதால், வரும் காலத்தில் பேஸ்மென்டில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கட்டடத்தில் இருக்கும் களிமண்ணை முழுவதுமாக அகற்றிவிட்டு தரமான கிராவல் மண்ணை கொண்டு, நிரப்புவதே சிறந்த முறை.
எங்களது வீட்டில் கட்டப்பட்டுள்ள நிலத்தடி நீர் தொட்டியில், சிறிது விரிசல் ஏற்பட்டு குடிநீர் சிறிது சிறிதாக வெளியேறுகிறது; இதை எப்படி தடுக்கலாம்?
-சுந்தரம், இடையர்பளையம்.
தங்களது நீர் தொட்டியின் விரிசலின் தன்மையை, நேரில் பார்த்தால்தான் சரியான வழிமுறையை கூற முடியும். இருப்பினும், தற்போது எந்த அளவுக்கு வெடிப்புகள் இருந்தாலும் அதை தடுத்து சரி செய்ய, புதிய 'வாட்டர் புரூப்பிங்' தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. சிறந்த முறையில் வாட்டர் புரூப்பிங் செய்யும் நிறுவனத்தை அழைத்து, அதை சரிப்படுத்திக் கொள்ளலாம்.
'ஐட்டம் வைஸ் ரேட்', சதுரடி 'ரேட்' ஆகிய இரண்டில் எது சிறந்தது?
-செல்வராஜ், ஆலாந்துறை.
புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு சரியான பொருட்களை தேர்வு செய்து, சரியான இன்ஜினியரிடம் துல்லியமாக மதிப்பீடு பெற்று 'ஐட்டம் வைஸ் ரேட்'டில் செய்வது மிக சிறந்தது. இந்த முறையில் கட்டடம் கட்டும்போது, இடையில் செய்யும் மாற்றங்களுக்கு சரியான மதிப்பீடு செய்ய முடியும். இதனால், நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டுக்குள் கட்டடத்தை கட்டி முடிக்க முடியும். சதுரடி ரேட்டில் செய்யும் பொழுது சரியான மதிப்பீடுகளை கணக்கிட முடியாது.
எங்கள் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையை, இரண்டாக பிரிக்க நினைக்கிறோம். செங்கல் சுவர் எழுப்பி பிரிக்கலாமா?
-மோகன், வடவள்ளி.
தாங்கள் பிரிக்க நினைக்கும் இடத்தில், ரூப் ஸ்லாப்பில் சரியான பீம் கான்கிரீட் இருந்தால் மட்டுமே செங்கல் சுவர் எழுப்பி பிரிக்க முடியும். அப்படி பீம் இல்லாத பட்சத்தில், எடை குறைவான பிளாக்குகள் இப்பொழுது மார்க்கெட்டில் நிறைய உள்ளன. உதாரணமாக, ஏ.ஏ.சி., பிளாக்குகள் பயன்படுத்தி பிரிக்கலாம். அல்லது சீட் போர்டு, பிளைவுட் போன்றவற்றை கொண்டு பிரித்துக்கொள்ளலாம்.
வீடு கட்டும்போது, சுவர் முழுவதும் கட்டி முடிக்காமல் தரையில் பி.சி.சி., போடலாமா?
-சுரேஷ்குமார், சிங்காநல்லுார்.
தரைத்தளத்திற்கு நிரப்பப்பட்ட மண்ணின் ஈரத்தன்மை மற்றும் இறுகத்தன்மை இவற்றை உறுதி செய்து தரைத்தளத்திற்கு கம்பி இல்லாத சிமென்ட் கான்கிரீட் போடலாம். பி.சி.சி., போடும் முன்பு பேஸ்மென்ட் மண்ணின் மீது, எர்த் ரேமர் இயந்திரத்தை பயன்படுத்தி, சரியான முறையில் மண்ணை இறுக செய்து, பி.சி.சி., போட்டுக் கொள்வது நல்ல முறையாகும்.
வீட்டின் கழிவறைகளில் சிறு சிறு பூச்சிகள் அடிக்கடி வருகின்றன; அதை எவ்வாறு தடுப்பது?
-அண்ணாதுரை, சுந்தராபுரம்.
உங்களது வீட்டில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளதா அல்லது சோக்பிட் அமைத்துள்ளீர்களா என தெரியவில்லை. எதுவாயினும் உங்களது கழிவுநீர் குழாயை வீட்டிற்கு வெளியே கொண்டு செல்லும் முன் கழிவுநீர் குழாயில் ஒரு 'டிராப்' அமைக்க வேண்டும். அதில் எப்பொழுதும் தண்ணீர் நிரம்பியே இருக்கும் என்பதால் வெளியில் இருந்து பூச்சிகள் வருவதை குறைக்கலாம்.
-லோகநாதன்,
மக்கள் தொடர்பு அலுவலர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா).