ADDED : பிப் 04, 2026 07:49 AM

1. ரெனோ டஸ்டர் காரின் அறிமுகம், நான்கு ஆண்டுகள் தாமதமானதற்கு என்ன காரணம்?
2019 முதல் 2023 வரை பல தடங்கள் ஏற்பட்டு, ரெனோ நிறுவனம் கடினமான சூழலில் இருந்தது. தலைமை நெருக்கடி, கொரோனா பாதிப்பு, ரஷ்யா - உக்ரைன் போர், செமிகன்டக்டர் பிரச்னை, ஐரோப்பாவில் அதிகரித்த சீன கார்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள்.
எனவே, முதலில் பிரான்ஸ் உட்பட ஐரோப்பா சந்தைக்கு முன்னுரிமை வழங்கி, நிறுவனத்தை நிலையான வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர இடைப்பட்ட காலம் தேவைப்ப ட்டது. தற்போது, பிரான்சில் முதல் இடத்திலும், ஐரோப்பாவில் முதல் மூன்று இடங்களுக்குள் மீண்டு வந்துள்ளோம். கடந்த 2023ல், டஸ்டர் எஸ்.யூ.வி.,யை இங்கு அறிமுகப்படுத்த முடிவு செய்தோம். 2027க்குள், இந்திய சந்தையில் மீண்டு வருவது எங்களின் முக்கிய இலக்காக உள்ளது.
2. டஸ்டரின் சிறப்பம்சங்கள் கே.9.கே., டீசல் இன்ஜின், 4 -வீல் டிரைவ் அமைப்பு வரவில்லையே?
'ஆர்.ஜி.எம்.,' என்ற டஸ்டரின் உற்பத்தி தளத்தில், 4 - வீல் டிரைவ் அமைப்பு இருக்கிறது. முதல் தலைமுறை டஸ்டர் காரின் மொத்த விற்பனையில், 4 - வீல் டிரைவ் அமைப்பு கார்களை வாங்கியவர்கள், வெறும் 5 சதவீதம் மட்டுமே.
அதனால், 95 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பிரண்ட் வீல் டிரைவில் இந்த கார் வந்துள்ளது. சந்தை திறன், மக்களின் விருப்பம் மற்றும் தேவை அதிகரித்தால், 4 - வீல் டிரைவ் வழங்கப்படும்.
'பி.எஸ்., 7' உமிழ்வு விதிமுறை வர உள்ள நிலையில், டீசலின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. அதனால், ஹைபிரிட் தொழில்நுட்பத்தை, டீசலுக்கு மாற்றாக பார்க்கிறோம். எரிபொருள் திறன், டீசலை விட ஹைபிரிட் இன்ஜினில் சிறப்பாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சரியான தொழில்நுட்பம் ஹைபிரிட் தான் என்பதை புரிந்து கொண்டு, அதை இங்கு கொண்டு வந்துள்ளோம்.
3. பழைய காரை ஒப்பிடுகையில், இதில் புதிதாக செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன?
இந்த காரின் சேசிஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் சென்னை, 'எம்.எம்.ஆர்.டி.,' ரேஸ் டிராக்கில் டியூன் செய்யப்பட்டுள்ளது. காரின் 90 சதவீத பாகங்கள், உள்நாட்டு மயமாக்கப்பட்டுள்ளன. ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களை தாண்டி, இந்த காரை 10 லட்சம் கி.மீ., சோதனை செய்துள்ளோம். அதனால் தான், இந்த காருக்கு 7 ஆண்டுகள் வரை உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய டஸ்டர் காரை ஒப்பிடுகையில், இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 50 எம்.எம்., அதிகம். இந்தியா குறைந்த விலை சந்தை அல்ல, அதிக மதிப்புள்ள சந்தை. அதனால், குறைந்த விலையில் நல்ல மதிப்பை வழங்கும் வகையில் பல அம்சங்களை வழங்கி உள்ளோம்.
டாக்டர் விக்ரமன்,
பொறியியல் பிரிவு தலைவர்,
ரெனோ குழுமம் இந்தியா.

