‛ உழைப்பை நம்பி, உருவானது திருப்பூர்...!': 'கொரோனாவும்... திருப்பூரும்' சொல்வதென்ன?
‛ உழைப்பை நம்பி, உருவானது திருப்பூர்...!': 'கொரோனாவும்... திருப்பூரும்' சொல்வதென்ன?
UPDATED : நவ 22, 2020 10:37 AM
ADDED : நவ 22, 2020 12:32 AM

திருப்பூரை சேர்ந்த பின்னலாடை உற்பத்தியாளர் யுவராஜ்சம்பத். இவர் எழுதிய, 'கொரானாவும் திருப்பூரும்' நுால் அறிமுக கூட்டம் சமீபத்தில் மக்கள் மாமன்ற நுாலகத்தில் நடந்தது.
திருப்பூரில் ஊரடங்கு காலத்தில் பின்னலாடை துறை எதிர் கொண்ட சிக்கல்கள், அதிலிருந்து மீண்டு வரும் சூழல், இனி வரும் காலங்களில் பின்னலாடை துறை தன்னை மேம்படுத்த செய்யப்பட வேண்டிய பணிகள் பற்றி இந்நுால் விவரிக்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஒரு தொழில் முனைவோரை சந்தித்து, அவர்கள் கருத்துக்களையும் இணைந்துள்ளார்.
அதிலிருந்து சில துளிகள்..
அர்ஜூன், திருப்பூரில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு பனியன் துணி உற்பத்தி இயந்திரங்கள் இல்லாத காலத்தில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின், மிகவும் சிக்கலான வடிவமைப்பை உருவாக்கக்கூடிய இயந்திரத்தை இறக்குமதி செய்தார்.
அன்றைய காலகட்டத்தில் அதுதான் அதி நவீனமானது.ஆனால், எந்த ஒரு மாற்றத்தையும் புதிதாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் மனோபாவம் கொண்ட திருப்பூர் உள்நாட்டு தயாரிப்பாளர்கள் அதை வெற்றிகரமாக பயன்படுத்த முடியாமல், அவர் ஒரு பெரிய நிறுவனத்திடம் சரணடைந்து, அதனால் பல லட்சம் ரூபாயை இழந்துவிட்டார். அதற்கு பின், ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றவர். ஆனால் இன்று, ஊட்டி காய்கறி வியாபாரம் செய்கிறார்.மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது மாற்றத்திற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள இயலாத தொழில்கள் இன்று காணாமல் போய்விட்டது.
அடுத்து என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை யூகிக்க முடியாத ஒரு தலைமுறை திருப்பூரில் இன்னமும் இருக்கிறது. திருப்பூர் தொழிலதிபர்கள் தங்களுடைய பார்வையை விசாலமாக்கி கொள்ளாதவரை, கொரோனாவுக்கு பின்னரும், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இந்த தொழிலுக்கு ஏற்படுத்தித் தர முடியாது என்பதே நிதர்சனமான உண்மை!
சிவசுப்பிரமணியம் என்பவர், கோவிட் முன்னால் இவர் திருப்பூரில் உள்ள பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் மிக முக்கிய பணியில் இருந்தவர் சொந்த ஊர் நீலகிரி. இங்கே மனைவியோடு சேர்ந்து பிசினஸ் செய்து வந்தார். கொடிய நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டு, வாழ்வை நகர்த்த ஆன்லைன் வர்த்தகம் செய்கிறார். அதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அவர் வாங்கி விற்பது ஆடைகளை அல்ல. ஊட்டி வர்க்கியை.
கோமதி, திண்டுக்கல்லிலிருந்து, பொறியியல் பட்டம் பெற்று திருப்பூர் வந்து, ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரும் இவர் கணவரும் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில், திண்டுக்கல் மதுரை சேலைகளை விற்று கொண்டிருக்கிறார்கள்.. 'குடும்பம் நடக்க வேண்டுமே சார்' என்கின்றனர்.
பனியன் துணிக்கு சாயமிடுகிற நிறுவனத்தில் வேலை செய்பவர் நாகராஜன். தற்பொழுது தன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை வழி சாயம் ஏற்றுதல் மூலமாக கரூரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நுாலில் சாயம் ஏற்றி கொடுக்கிறார். இவருக்கு 'மாற்றம் முன்னேற்றம்'.
இன்னும் சிலர் காய்கறி வியாபாரிகள் ஆகவும், நிரந்தரமில்லாத தெருவோரக் கடையில் பலதரப்பட்ட பொருட்களை விற்றும், இன்னும் சிலர் வீட்டு சமையல் முறையில் சமைத்து பிரியாணி விற்பதையும், பலர் இன்னும் நிரந்தரமில்லாத எந்தெந்த தொழிலிலோ ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரு கருத்தை சொல்கின்றனர்.'இந்த ஊரின் அபரிமிதமான வளர்ச்சியை நிலையானது என்று எல்லோரும் நம்பி விட்டோம். ஆனால் இந்த ஒரு கொடிய நோய் எங்கள் எண்ணத்தை சிதைத்து விட்டது. ஆனாலும் எங்களுக்கு உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை இந்த கொடிய நோய் தந்துள்ளது. அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்' என்பதே...!