கரிகால சோழனின் ஆட்சி, நல்ல வழிகாட்டி: எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் பெருமிதம்
கரிகால சோழனின் ஆட்சி, நல்ல வழிகாட்டி: எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் பெருமிதம்
ADDED : ஜன 28, 2023 11:01 PM

திருப்பூர் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை சார்பில், மக்கள் மன்றத்தில் 'தினமலர்' குழுமம் தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடான 'சோழ சாம்ராஜ்யத்தின் ஆணிவேர் கரிகாலன் சபதம்' என்ற சரித்திர நாவல் வெளியீட்டு விழா தமிழ்தாய் சிலை முன் நடந்தது.
கோவை பூமோ டெக்னோேவஷன் நிர்வாக இயக்குநர் மனோஜ் தலைமை வகித்தார். தமிழ் பட்டறை இலக்கிய பேரவை தலைவர் ஆழ்வை கண்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் காதர் நுாலை வெளியிட முன்னாள் கவுன்சிலர் சுசீலா பெற்று கொண்டார். ஆலோசகர்கள் ராமகிருஷ்ணன் அமல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
நுாலாசிரியர் ஆதலையூர் சூரியகுமார் கூறியதாவது:
கரிகால் சோழன் என்பவன் ஒரு மன்னனாக மட்டுமல்லாமல் மக்கள் தலைவனாக வாழ்ந்தவர். உறையூரை தலைநகரமாக கொண்டு ஒப்பற்ற ஆட்சி நடத்தியவர். கரிகால் சோழனின் ஆட்சி முறை இன்றைய ஆட்சியாளர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், பாடமாகவும் அமைந்திருக்கிறது.
நாட்டின் வருமானத்தை பெருக்குவதற்காக கைத்தொழிலை ஆதரித்தவர். நெசவுத் தொழிலில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்து நெசவு உற்பத்தியை பெருக்கினார். இலங்கை மீது படையெடுத்து சென்று வென்றவர். தமிழகத்தில் இருந்து இமயமலைக்கு செல்லும் வழியில் உள்ள தேசங்களையெல்லாம் வென்று இமயமலையில் புலிக்கொடி நாட்டியவர்.
இதையெல்லாம் தாண்டி, சோழ மன்னனாக திகழ்ந்த கரிகால் சோழனுக்கும், கொங்கு மண்டலத்துக்கும் ஒரு நீண்ட தொடர்பு உள்ளது. சிறப்பு மிக்க கரிகால் சோழனின் வரலாற்றை, 600 பக்க நாவலாக எழுதி இருக்கிறேன். இதனை 'தினமலர்' குழுமமான, தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. இந்த நாவலை படமாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.