'புத்தக வாசிப்புதான் ஒருவரை முழு மனிதனாக மாற்றுகிறது'
'புத்தக வாசிப்புதான் ஒருவரை முழு மனிதனாக மாற்றுகிறது'
UPDATED : செப் 03, 2023 10:19 AM
ADDED : செப் 02, 2023 11:50 PM

''புத்தக வாசிப்புதான் ஒருவரை, முழுமையான மனிதனாக மாற்றும் என்பது என் நம்பிக்கை,'' என்கிறார் எழுத்தாளர் ஆயிரம் நடராஜன்.
தனியார் நிறுவனத்தில் பொதுமேலாளராகவும், நிர்வாக ஆலோசகராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றவர் ஆயிரம் நடராஜன்.
தற்போது கோவை விளாங்குறிச்சி ரோடு, 50 அடி திட்டசாலை பகுதியில் வசித்து வருகிறார். இவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னட்ஸ் ஹெமிங்வே எழுதிய, 'தி ஓல்டு மேன் அண்ட் தி சீ' மற்றும் 'ஏ பேர்வெல் டு ஆர்ம்ஸ்' ஆகிய, இரண்டு நாவல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
தினமலர் நாளிதழுக்காக அவரை சந்தித்தோம்...
உங்களை பற்றி சொல்லுங்களேன்?
எனக்கு சொந்த ஊர் துாத்துக்குடி மாவட்டம் முனங்கிப்பட்டி. அங்குள்ள அரசு பள்ளியில்தான் படித்தேன். கல்லுாரியில் பி.ஏ., படித்த பிறகு, கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் எம்.ஏ., சமூகவியல் படித்தேன்.
பிறகு அங்கேயே, இங்கிலீஷ் டியூட்டராக வேலை செய்தேன். என் சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் படிப்பதில் அதிகம் ஆர்வம் உண்டு. 13 வயதில் பொன்னியின் செல்வன் நாவலை முழுமையாக படித்து விட்டேன்.
ஆங்கில நுால்களையும் விரும்பி படிப்பேன். என் நண்பர் நாகராஜன், ரஷ்ய இலக்கியங்களை படிக்க சொல்லி ஊக்கப்படுத்தினார். பிறகு நானே உலக இலக்கியங்களை தேடி படிக்க தொடங்கினேன். இன்னும் படித்துகொண்டே இருக்கிறேன்.
மொழிபெயர்ப்பில் ஆர்வம் வந்தது எப்படி?
வாசிப்புதான் ஒருவரை முழுமையான மனிதனாக மாற்றுகிறது என்பது என் நம்பிக்கை. பணி ஓய்வு பெற்ற பிறகு, நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் ஆங்கில நுால்களை தமிழில் மொழிபெயர்த்து வருகிறேன்.
அந்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்
மொழிபெயர்ப்பு செய்யும் போது, அந்த படைப்பு நம்மை வேறு ஒரு உலகத்துக்கு கொண்டு செல்கிறது. அதில் மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கிறது. நுால்களை படித்துக்கொண்டே இருந்தால்தான், மொழிபெயர்ப்பை சிறப்பாக செய்ய முடியும். ஆங்கிலத்தில் உள்ள ஒரு சொல்லுக்கு, தமிழில் பல சொற்கள் உள்ளன. அதில் பொருத்தமான சொல்லை பயன்படுத்த வேண்டும்.
மொழி பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி?
ஆங்கிலத்தை நாம் எவ்வளவு நன்றாக படித்து இருந்தாலும், தாய்மொழி போல் சரளமாக வராது. ஆங்கிலத்தில் ஆழமான புரிதல் இருந்தால்தான், சரியான மொழிபெயர்ப்பை கொடுக்க முடியும்.
சில மொழிபெயர்ப்பாளர்கள், ஒரு வாக்கியம் புரியவில்லை என்றால் அதை விட்டுவிட்டு அடுத்த வாக்கியத்துக்கு போய் விடுவார்கள். அப்படி செய்யக்கூடாது. அகராதிகளை தேடிப்படித்து, சரியான வாக்கியத்தை அமைக்க வேண்டும்.
ஹெமிங்வேயின் படைப்புகளை தேர்வு செய்ய காரணம் என்ன ?
ஹெமிங்வே படைப்புகளை மொழிபெயர்ப்பது கடினமான விஷயமாகும். அவர் எழுத்து 'ஐஸ் பெர்க்' மாதிரி வெளியில் ஒரு முனை மட்டும் நீட்டிக்கொண்டு இருக்கும். உள்ளே பெரிய பனிப்பாறை மூழ்கி இருக்கும்.
ஒரு சிறிய வார்த்தையாக இருந்தாலும், அதன் அர்த்தம் பெரிய அளவில் இருக்கும். ஒரு நாவலை பலமுறை திருத்தி எழுதக்கூடியவர். கதை எழுதும் முன், அந்த கதைக்களத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, தகவல் சேகரித்து எழுதுவார்.
'கடலும் கிழவனும்' நாவல் எழுதும் முன், கடலில் மீன் பிடிப்பது பற்றி கடலுக்குள் சென்று தெரிந்து கொண்டு எழுதினார். ஹெமிங்வேயின் படைப்புகளை முழுமையாக படித்த பிறகுதான் அவரது நோபல் பரிசு பெற்ற, The old man and the sea என்ற நாவலை, 'கடலும் கிழவனும்' என்ற பெயரில் மொழிபெயர்த்தேன்.
மொழிபெயர்ப்பின் அவசியம் பற்றி ?
ஒரு மொழி வளர்ச்சியடைய, மொழிபெயர்ப்புகள் அவசியம். ஆரம்ப காலத்தில் ரஷ்ய இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. அதன் பாதிப்பில் பல புதிய படைப்புகள் வந்தன. டால்ஸ்டாய், தஸ்தாவ்வெஸ்கி போன்ற அரிய படைப்புகள் தமிழுக்கு வந்தன.
இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்கம், மலையாளம் என, எல்லா மொழிகளில் இருந்தும் மொழிபெயர்ப்புகள் வரவேண்டும். தமிழில் இருந்து படைப்புகளை பிறமொழிக்கு கொண்டு செல்ல வேண்டும்.