நீங்கள் புத்தகம் வாசித்தால்... முயற்சி செய்து பாருங்கள்! குழந்தைகளும் வாசிப்பார்கள்!
நீங்கள் புத்தகம் வாசித்தால்... முயற்சி செய்து பாருங்கள்! குழந்தைகளும் வாசிப்பார்கள்!
ADDED : ஆக 06, 2023 01:53 PM

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கான விருதுகள் சாகித்ய அகாடமி சார்பில், வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது, எழுத்தாளர் உதய சங்கர் எழுதிய, 'ஆதனின் பொம்மை' என்ற நுாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கு கோவையில் இன்று, முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. உதயசங்கரிடம் பேசினோம்...
உங்களை பற்றி சொல்லுங்களேன் ?
எனக்கு துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தான் சொந்த ஊர். ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறேன். பணி நேரம் போக மற்ற நேரங்களில் படிப்பதும், எழுதுவதும் தான் என் வேலை. இதுவரை மொழிபெயர்ப்புகள் உட்பட, 152 நுால்களை எழுதி இருக்கிறேன். இதில் 119 நுால்கள் குழந்தைகளுக்கான இலக்கிய நுால்கள். மலையாளத்தில் இருந்து மட்டும், 70 நுால்களை மொழி பெயர்த்து இருக்கிறேன்.
ஆதனின் பொம்மை நுாலுக்கும், கீழடி அகழாய்வுக்கும் என்ன சம்பந்தம்?
இந்த நுால் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட, ஒரு பொம்மையில் இருந்து கதை துவங்கும். மேஜிக்கல் ரியலிச பாணியில், நம் கடந்த கால வரலாற்றை குழந்தைக்கு கதை வழியாக சொல்லி இருக்கிறேன். பொதுவாக பழங்கால வரலாறு எல்லாம், வடக்கில் இருந்து துவங்குவதாக ஒரு கருத்தியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிந்து சமவெளி அகழாய்வுக்கு பிறகும் இதே நிலை உள்ளது. தமிழகத்தில் பல தொல்லியல் சான்றுகள் இருந்தும், அது ஏற்றுக்கொள்ளப்படுதில்லை. ஆனால் கிழடி அகழாய்வுக்கு பிறகு, இந்நிலை மாறி உள்ளது. அதை இந்த நுாலில் உள்ள கதைகள் வழியாக, குழந்தைகளுக்கு சொல்லி இருக்கிறேன்.
மலையாள நுால்களை, அதிகம் மொழிபெயர்க்க காரணமென்ன ?
மலையாளத்தில் குழந்தைகளுக்கான இலக்கியம் சிறப்பாக உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளை கதைகள் படிக்க ஊக்கப்படுத்துகின்றனர். கேரள அரசும் குழந்தைகள் இலக்கிய வளர்ச்சிக்கு என, தனியாக 'பால சாகித்ய இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனத்தை உருவாக்கி உள்ளது. அங்குள்ள பள்ளி நுாலகங்களில், நிறைய நுால்கள் உள்ளன. தமிழில் அப்படி இல்லை. அழ.வள்ளியப்பாவுக்கு பிறகு யாரும், பெரிய அளவில் குழந்தை இலக்கியம் படைக்கவில்லை. 2010ம் ஆண்டுக்கு பிறகு, தமிழில் குழந்தைகளுக்கான நுால்கள் வர துவங்கி உள்ளன. தமிழக அரசும் நுால்களை வெளியிட்டு வருகிறது. ஆனாலும் இது போதாது.
வாசிப்பு பழக்கம் அதிகரிக்க, என்ன செய்ய வேண்டும்?
புத்தக வாசிப்பு ஒரு பண்பாடாக மாற வேண்டும். பெற்றோர்களும் வாசிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் வாசிப்பார்கள். கேரளத்தில் அதுதான் நடக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களை பிற நுால்களை படிக்க துாண்டுகின்றனர். இங்குள்ளவர்கள் பாடப்புத்தகங்களை மட்டும் தான் படிக்க வேண்டும் என்கின்றனர். பள்ளிப்பாடம், மதிப்பெண்கள் தவிர, வேறு விஷயங்கள் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதில்லை. பிள்ளைகளுடன் பொது உரையாடல் அவசியம்.
இன்றைய தமிழ் இலக்கிய சூழல் பற்றி உங்கள் கருத்து?
இன்றைக்கு தமிழ் இலக்கிய படைப்புச் சூழல் சிறப்பாக உள்ளது. நல்ல சிறுகதைகள், நாவல்கள் வெளி வந்துள்ளன. பல படைப்புகள் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படுகின்றன. வாசகர்கள் மத்தியில் வரலாற்று நுால்களை படிப்பதில், அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதை ஒரு நல்ல மாற்றமாக பார்க்கிறேன்.