ADDED : ஆக 11, 2024 12:32 AM

''ஸ்கூல்ல படிக்கிறப்போ, 'நீ நல்லா கவிதை எழுதுற; நிறைய புத்தகம் படி'ன்னு என் தமிழ் ஆசிரியை சொன்னாங்க. நிறைய புத்தகங்களை வாசிச்சுக்கிட்டே இருப்பேன். தமிழ்ன்னா எனக்கு கொள்ளை பிரியம்...'' என, எழுத்துலகில் பிரகாசிக்கும் ஆவலில் தன் அனுபவத்தை பகிர்ந்தார், திருப்பூரைச் சேர்ந்த அம்பிகா.
'பச்சைய மலை' என்ற கவிதை புத்தகத்தை எழுதி, வெளியிட்டிருக்கிறார். யதார்த்த வாழ்க்கைச்சூழல் சார்ந்த விஷயங்கள், சமூகத்தின் மீதான கரிசனை, பாராட்டு, கோபம் என அவ்வளவையும் வார்த்தைகளால் வடித்திருக்கிறார். வாசிப்பும், எழுத்தும், இவரது விருப்பமாக இருந்தாலும் ஜோதிடக்கலை தான் இவரது தொழிலாக இருக்கிறது.
''இன்னும் ரெண்டு புத்தகம் எழுதிட்டு இருக்கேன்; சீக்கிரம் வெளிவந்துடும். நான் படிச்சது பார்மஸி; மருந்துக்கடையில வேலை செஞ்சிட்டு இருந்தேன். எனக்கு எண் கணித ஜோதிடம் படிக்கணும்ங்கற ஆசையும் இருந்துச்சு.
கொஞ்சம் கொஞ்சமா படிச்சு, கூட வேலை செய்றவங்களோட ராசியை வைச்சு, அவங்களுக்கு நடந்தது, நடக்கப்போறதை சொல்ல ஆரம்பிச்சேன்; 'நீ நல்லா ஜோதிடம் பார்க்குற; அதுல நிறைய படி'ன்னு சொன்னாங்க. ஜோதிட கலையில் முதுகலை படிப்பு வரை படிச்சிருக்கேன்'' என்றார், தான் ஜோதிடரான நிஜத்தை.
'ஆன்மிகம், இலக்கியம்... எப்படி பொருத்திக் கொள்ள முடிகிறது?' என்ற கேள்விக்கு,
''வேலையே கிடைக்க மாட்டேங்குது என்ற விரக்தியில் ஜோதிடம் பார்க்க நிறைய பேர் வருவர். அவர்களின் ஜாதக அமைப்பை சொல்லி, எனக்கு தெரிந்த யாரிடமாவது கூறி, வேலைவாய்ப்பை பெற்றுத்தர முயற்சி செய்வேன்.
எதிர்மறை எண்ணங்கள் வராமல், நேர் மறையுடன் வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பது தான் என் எண்ணம். நேர்மறை வாழ்க்கைதானே சிறந்தது? இப்படித்தான், என் தொழிலை அமைத்துக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார் 'பளிச்'சென்று.
'எண்ணங்களே ஏணிப்படி' என்பது புரிந்தது.