/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
திருப்பூர் வருகையை முதல்வர் தவிர்த்தாரா?
/
திருப்பூர் வருகையை முதல்வர் தவிர்த்தாரா?
ADDED : ஆக 11, 2025 11:45 PM

''சி .எம்., பங்ஷனுக்குப் போகலையா'' கேட்டுக்கொண்டே மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
''ஏனுங்க்கா... கிண்டல் பண்றீங்களா... சிட்டில நடந்தாலே நான் போகமாட்டேன். உடுமலை பங்ஷனுக்குப் போகலையான்னு கேக்குறீங்க...''
''மித்து... போன மாசம் சி.எம்., திருப்பூர் விசிட் 'கேன்சல்' ஆயிருச்சுல்ல... இந்த முறை திருப்பூர் வருவாரா, வரமாட்டாரான்னு கட்சிக்காரங்ககிட்ட எதிர்பார்ப்பு இருந்துச்சு...''
''அக்கா... சி.எம்., இந்த முறையும் திருப்பூர் வரல... 'ரோடு ேஷா' நடத்துறதா இருந்தது... சி.எம்., வராததால, தொண்டர்களுக்கு வருத்தம்தான்... சொத்து வரி உயர்வு, குப்பைன்னு ஏராளமான பிரச்னை... மாவட்ட தி.மு.க.,வுல கோஷ்டிப்பூசல் தலைவிரிச்சாடுது.. அதுக்காக திருப்பூர் விசிட்டை சி.எம்., தவிர்த்திருக்கலாம்ன்னு சொல்றாங்க...''
''இதுவெல்லாம் யூகம்தான் மித்து... இதுல பாதி, கட்சிக்காரங்களே தட்டிவிடறதுதான்... அப்படியெல்லாம் பார்த்தா சி.எம்., எங்கயுமே போக முடியாது...''
''ஆமாங்க்கா...''
தலையாட்டினாள் மித்ரா.
போலீசில் விரைவில்அதிரடி மாற்றம் ''உடுமலை பக்கத்துல எஸ்.ஐ.,யையே கொலை பண்ணுன சம்பவம், பப்ளிக்குக்கு மட்டுமல்ல... போலீசுக்கும் பெரிய 'ஷாக்'கா அமைஞ்சிடுச்சுக்கா...''
''ஆமா மித்து... அதுதான் டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதம்ன்னு பெரும் போலீஸ் படையே இங்க வந்துச்சு... அடுத்த நாள் கொலைல ஈடுபட்டவரை என்கவுன்டர் பண்ணீட்டாங்க...''
''சித்ராக்கா... கொலைல ஈடுபட்ட தந்தை, மகன்கள் மேல பல வழக்குகள் இருக்காம். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேந்திரனோட தோட்டத்துல இவங்க வேலைக்கு இருந்திருக்காங்கன்னு சொல்றாங்களே''
''ஆமா மித்து... பின்னணி விஷயம்கூட தெரியாம, இவங்களை எப்படி வேலைக்கு எடுத்தாங்கன்னு தெரியல.
''கொலையிலும் சரி... என்கவுன்டர்லயும் சரி... அதிகாரிங்க நேரடியா பத்திரிகையாளர்களைச் சந்திச்சு முழு விபரங்களையும் பகிரலையாம்.
''இந்த விவகாரத்துல ஏதோ ஒன்னு இடிக்குது. அந்த மர்மம்தான் இன்னும் விலகல...
''மாவட்ட போலீஸ் அதிகாரி அப்செட்ல இருக்காரு... சி.எம்., பங்ஷன் முடிஞ்சவுடனே, போலீஸ்ல அதிரடியா டிரான்ஸ்பர்ஸ் இருக்கலாம்ன்னு சொல்றாங்க''
தகவலைச் சொன்னாள் சித்ரா.
''சித்ராக்கா... குப்பை பிரச்னையைக் கண்டிச்சு விஜய் கட்சிக்காரங்க, கார்ப்பரேஷன் ஆபீஸ் முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்துனாங்கள்ல... நல்ல கூட்டம் சேர்த்துட்டாங்க போலயே...''
''அது தானா சேர்ந்த கூட்டம்ன்னு கட்சிக்காரங்க சொல்றாங்களாம்... கூட்டத்தைப் பார்த்து தி.மு.க., - அ.தி.மு.க., காரங்களும் மலைச்சுப்போயிட்டதா சொல்றாங்க''
''ஆமாக்கா... இப்பவெல்லாம் காசு கொடுத்தா தான கூட்டம் சேருது''
யதார்த்தத்தை சொன்னாள் மித்ரா.
பங்கு பிரச்னையால்எழுந்த பஞ்சாயத்து ''மித்து... தாராபுரம் நகராட்சில தலைவருக்கு எதிரா ஆளும்கட்சியை சேர்ந்த 19 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரணும்ன்னு பிடிவாதமா இருக்காங்களாம்.
''சி.எம்., விசிட் முடிஞ்சதும் பார்த்துக்கலாம்ன்னு மினிஸ்டர் சாமிநாதன்தான் இதுக்கு 'வேகத்தடை' போட்ருக்காராம்.
''கல்லா கட்டுற விவகாரம்தான் பிரச்னையோட அஸ்திவாரம்ன்னு சொல்றாங்க... பிரச்னை எதுல போய் முடியுதுன்னு பார்ப்போம்''
''மித்து... பங்கு சரியா பிரிக்கலைன்னா பஞ்சாயத்துதான்''
கலகலவெனச் சிரித்தனர் இருவரும்.
''சித்ராக்கா... தாராபுரத்துல நடந்த ஐகோர்ட் வக்கீல் கொலை தொடர்பா, பள்ளித்தாளாளர் உட்பட 12 பேரை போலீஸ் கைது செஞ்சிருக்காங்க...
''வழக்கை மூனு மாசத்துக்குள்ள விசாரிச்சு அறிக்கை சமர்ப்பிக்கனும்ன்னு கோர்ட் உத்தரவிட்டிருக்கு.
''வழக்கு தொடர்பா விசாரிக்க சம்மன் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க...
''கைதான பள்ளித்தாளாளருக்கு நெருக்கமா இருந்த நகராட்சி அதிகாரிட்ட விசாரிச்சப்ப, அவரு 'தலைவரு'க்கும்தான் தாளாளருடன் பழக்கம்ன்னு சொல்லியிருக்காரு.
''தலைவருக்கு சம்மன் கொடுக்க போனப்ப வாங்க முடியாதுன்னு அடம் பிடிச்சாராம்.
''உயரதிகாரி போன் செஞ்சு, இது சாதாரண விசாரணைதான்னு புரிய வச்சிருக்காரு... அடுத்தடுத்து பிரச்னையால டென்சனா இருக்காராம் தலைவரு''
மித்ரா விவரித்தாள்.
குப்பைகளுடன் சேர்ந்துமருத்துவக்கழிவுகள் ''மித்து... மாநகராட்சி குப்பை பிரச்னை தொடர்பா எம்.பி., சுப்பராயன் காட்டமாக பேட்டி கொடுத்தார்ல... அப்ப துணை மேயரும் பக்கத்துலதான் இருந்திருக்காரு.
''கிராமங்கள்ல இருக்கிற பாறைக்குழில குப்பை கொட்றதால ஏற்படற பாதிப்பு தொடர்பா, மக்கள் விழிப்புணர்வு அடைஞ்சதாலதான். இப்ப குப்பை கொட்ட இடமில்லாம, மாநகராட்சி நிர்வாகம் திணறுதுன்னு சொன்னாராம்''
''அப்படின்னா... மக்களோட அறியாமையைப் பயன்படுத்தித்தான், இத்தனை வருஷமா பாறைக்குழில குப்பை கொட்டிட்டு இருந்தாங்களான்னு கேள்வி எழுது... இதை அவங்களே ஒத்துக்கிட்ட மாதிரில்ல இருக்கு.
''இதுல 'ஷாக்'கான விஷயம், குவியும் குப்பைகள்ல மருத்துவக்கழிவும் சேர்ந்து வருதுன்னு, எம்.பி., சொன்னதுதான். மருத்துவக்கழிவெல்லாம் பொது இடத்துல கொட்ட ஆரம்பிச்சா மக்களுக்கு வியாதி வராம என்ன செய்யும்?''
''அக்கா... குப்பை பிரச்னைல இறைச்சிக்கழிவுகளைக் கொட்டுறது, மாநகராட்சி நிர்வாகத்துக்கு தலைவலியை ஏற்படுத்துதாம். உரிமம் பெற்ற கடைகள் ரொம்பவே கம்மி. இறைச்சிக்கடைகளை கண்காணிக்க தனிக்குழு ஏற்படுத்தி, ஒழுங்குபடுத்தணும்ன்னு மக்கள் கேக்குறாங்க... நடக்குதான்னு பார்ப்போம்''
மித்ரா ஆதங்கப்பட்டாள்.
''அக்கா... லேடி லேபர் ஆபீசர், 'வாவிகரடி' கிராமத்துக்கு வந்து ரசீது போடாம பணம் கலெக் ஷன் பண்ணுனாரு... சந்தேகம் அடைஞ்ச பொதுமக்கள், ஆபீசரோட வாக்குவாதம் செஞ்சாங்க. பதறிய ஆபீசர், பணத்தத் திருப்பி குடுத்துட்டு கார்ல பறந்துட்டாங்க. இதெல்லாம் செய்தி மூலமா நமக்கு தெரிஞ்சது... ஆனா, அதுக்கு முன்னாடியே இன்னொரு மளிகைக்கடைல ரெண்டு மூட்டை அரிசியை கார்ல ஏத்திட்டாங்களாம்... இது இப்பத் தெரிய வந்தது''
''மித்து... இதை 'சாந்தி' அக்கா தானே உனக்குச் சொன்னாங்க... சரியாத்தான் இருக்கும்.
''பாளையம்கணபதி கவர்மென்ட் ஸ்கூல்ல ஆசிரியர் ஒருத்தரு, ஸ்கூல் முன்னாடியே டியூஷன் சென்டர் வச்சிருக்காராம். மாசம் ஆயிரம் ரூபா பீஸாம். மாணவர்கள் கண்டிப்பா டியூஷன் வரணுமாம். இல்லாட்டி மார்க்ல கைவச்சிருவாராம்''
''இதையை 'செல்லதுரை' சார் கிட்ட கன்பர்ம் பண்ணிச் சொல்லட்டுமாக்கா''
சித்ரா தலையசைத்தாள்.
வீடு கட்ட முடியாமல்பயனாளிகள் தவிப்பு ''சித்ராக்கா... மாவட்டத்துல 265 ஊராட்சிகள்ல, கலைஞர் கனவு இல்லம் திட்டத்துல வங்கிக்கடன் வாங்கி நிறைய பேரு வீடு கட்றாங்க...
''அசெம்பிளி எலக்ஷனுக்கு முன்னாடி வீட்டு வேலைகளை முடிக்கணும்ன்னு சொல்லியிருக்காங்களாம்...
''ஆனா மானியம் வாங்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிருதாம். மானிய சிமென்ட் கிடைக்கறதில்லையாம். கட்டுமானப்பொருள் தடையில்லாம கிடைச்சாதானே வீடு கட்ட முடியும்ன்னு பயனாளிங்க ஆதங்கப்படறாங்களாம்...''
''மித்து... பிராக்டிக்கலா என்ன நடக்குதுன்னு அதிகாரிகளும், அரசும் மொதல்ல தெரிஞ்சுக்கணும்''
கல்லா கட்டுவதில்'பலமான' கூட்டணி ''சித்ராக்கா... மனமகிழ் மன்றம்ங்கற பேர்ல, மது விற்பனை, சிட்டில கொடிகட்டிப் பறக்குது... ஆளும் கட்சி வி.ஐ.பி.,யோட நெருங்கிய உறவினர் மற்றொரு முக்கியப் புள்ளியான 'கொக்கரக்கோ'வோட இணைஞ்சு பல இடங்கள்ல மன்றங்களை திறந்து மது விற்பனைல கல்லா கட்டறாங்க... இவங்களுக்கு முக்கிய வழிகாட்டியா அ.தி.மு.க.,வோட முக்கிய புள்ளியா இருந்த 'நீதி' பெயரைக் கொண்டவர் இருந்துட்டு வர்றாராம். கடந்த ஆட்சியில் மதுக்கடை விவகாரங்களில் இவரோட கைதான் ஓங்கி இருந்துச்சு... அந்த அனுபவம் இப்போது இவர்களோட 'கூட்டணி' அமைக்க கைகொடுத்திருக்குன்னு உடன்பிறப்புகள் சிலாகிக்கிறாங்களாம்...''
''மித்து... கார்ப்பரேஷன் வடக்குப் பகுதிகள்ல 18 வார்டுகள்ல இருக்கிற வீடுகள்ல இருந்து வெளியேறுற கழிவுநீர், 16வது வார்டுல இருக்கிற கால்வாய் வழியா நல்லாத்துல போய் கலக்குதாம். 15வது வார்டுல, கழிவுநீர் போற வாய்க்காலை அடைச்சு வச்சுட்டாங்களாம். ரெண்டு கவுன்சிலர்களுமே அ.தி.மு.க.,தான்; பேசித் தீர்வு காணலாம்ல''
''அக்கா... தீர்வு காணலாம்ங்க்கா... அதுக்குள்ள சூடா இஞ்சி டீ போட்டுட்டு வர்றேன்''
சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.