/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
சர்வே நடத்திய ஆளுங்கட்சி அதிர்ச்சி
/
சர்வே நடத்திய ஆளுங்கட்சி அதிர்ச்சி
ADDED : ஆக 11, 2025 11:20 PM

ப ணி நிமித்தமாக, சிறுவாணி அடிவாரத்துக்கு சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் கோவையை நோக்கி, ஸ்கூட்டரில் திரும்பினர்.
காளம்பாளையம் அருகே குழாய் உடைந்து, ரோட்டில் குடிநீர் வீணாவதை பார்த்து, 'உச்' கொட்டிய மித்ரா, ''ஹைவேஸ்காரங்களுக்கு இதே பொழப்பா போச்சு. ரோட்டை விஸ்தரிக்கிறோம்ங்கற பேருல, மரத்தை வேரோட பெயர்த்தெடுக்குறாங்க. குழாயை அடிக்கடி ஒடைச்சிடுறாங்க; இது, மூணாவது இடம். குடிநீர் வீணாப் போகுது.
சரி செய்றதுக்கு குடிநீர் வடிகால் வாரியகாரங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. பப்ளிக்கிற்கு பதில் சொல்ல முடியறதில்லை. ஹைவேஸ்காரங்க செய்ற தப்புக்கு, குடிநீர் வடிகால் வாரியத்துக்காரங்களும், கார்ப்பரேஷன்காரங்களும் பப்ளிக் கிட்ட திட்டு வாங்குறாங்க,'' என்றாள்.
''கவர்மென்ட் வேலைன்னு வந்துட்டா, அதெல்லாம் சகஜம் தானே...'' என்ற சித்ரா, ''முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு, கட்சிக்காரங்க கூட்டம் குறைவா இருந்துச்சாமே...'' என்றாள்.
''ஆமா, நானும் கேள்விப்பட்டேன். 500க்கு, 100 பெண்கள் வந்திருந்ததா உளவுத்துறையில இருந்து மேலிடத்துக்கு 'ரிப்போர்ட்' போயிருக்கு. கார்ப்பரேஷன் லிமிட்டுல, 100 வார்டு இருக்கு. வார்டுக்கு, 10 பேர் வந்திருந்தாலே, 1,000 பேர் வந்திருக்கலாம்.
ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மட்டும், 76 பேர் இருக்காங்க. அவுங்க மட்டும் ஆளுக்கு, 10 பேரை திரட்டி வந்திருந்தாலே, இன்னும் கூட்டம் அதிகமா இருந்திருக்கும். கவுன்சிலர்களே பலபேரு வரலைன்னு சொன்னாங்க,''
''ஆளுங்கட்சி 'மாவட்டம்' தொகுதி மாறப்போறதா சொல்றாங்களே... உண்மையா...''
''ஆமாப்பா...தகவல் வந்துச்சு. அதனால, ரெண்டு தொகுதியை தயார் செஞ்சுட்டு இருக்காராம். 2026 அசெம்ப்ளி எலக்சனுக்கு, நம்ம டிஸ்ட்ரிக்ட்டுல கண்டிப்பா தொகுதி ஒதுக்கணும்னு கம்யூ., கட்சிக்காரங்க கேட்டிருக்காங்களாம். அநேகமா சிங்காநல்லுாரை குறிவைப்பாங்கன்னு பேசிக்கிறாங்க. தொகுதி பங்கீட்டுல விட்டுக் கொடுக்க வேண்டிய நெலமை வந்தா, ஆளுங்கட்சி 'மாவட்டம்', வேற தொகுதிக்கு மாற வேண்டிய சூழல் வரும்னு சொல்றாங்க,''
ஜெயிக்கிற தொகுதி எது ''மாநில பொறுப்புல இருக்கற ரெண்டெழுத்து லேடிக்கு, தொகுதி உறுதியாகிடுச்சுன்னு சொல்றாங்களே...''
''ரெண்டெழுத்து இனிசியல் அமைச்சருக்கான, 'அலாட்மென்ட்'டுல ஒரு தொகுதி ஒதுக்குறது வழக்கம். கண்டிப்பா ஜெயிக்கிற தொகுதியை விரும்புறாங்க; தெற்கு, வடக்குல எந்த தொகுதியை தேர்வு செய்றதுன்னு மேலிடத்துல இருந்து, 'ஸ்டடி' பண்ணிட்டு இருக்காங்க.
ரெண்டு தொகுதியிலயும், ஆளுங்கட்சி கூட்டணி செல்வாக்கு, அ.தி.மு.க., கூட்டணி செல்வாக்கு, லோக்சபா எலக்சன்ல அ.தி.மு.க., - பா.ஜ., வாங்குன ஓட்டுகளை கூட்டிப் பார்த்து, வெற்றி வாய்ப்பை அலசிட்டு இருக்காங்களாம்...''
படபடப்பில் உடன்பிறப்புகள் ''ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்துல, 50 சதவீத உறுப்பினர்களை சேர்க்கணும்னு, 'டார்கெட்' நிர்ணயிச்சிருக்காங்களாமே...''
''அதுவா... தொகுதி வாரியா எத்தனை பேரை உறுப்பினரா சேர்த்திருக்காங்கன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி, 'ரெவ்யூ' பண்ணியிருக்காங்க. சில தொகுதிகள்ல, 40 சதவீதத்தை தாண்டிட்டாங்க. இருந்தாலும், 50 சதவீதத்தை எட்டணும்னு சொல்லியிருக்காங்க.
உறுப்பினர் சேர்க்கை இன்னும் ரெண்டு நாள்ல முடியுது. சில தொகுதிகள்ல ஒன்றரை லட்சம் வாக்காளர்களை உறுப்பினரா சேர்த்திருக்கோம்னு, சொல்றதை நிர்வாகிகள் நம்ப மறுக்குறாங்க. நாளைக்கு மா.செ.,க்கள் கூட்டம் சென்னையில நடக்கப் போகுது.
அதுல, என்ன சொல்வாங்களோன்னு, படபடப்புல ஆளுங்கட்சி நிர்வாகிகள் இருக்காங்க. தில்லாலங்கடி வேலை செஞ்சவங்களுக்கு 'வார்னிங்' இருக்கும்; கட்சி பதவியை பறிக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்குன்னு, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,''
ரெண்டுக்கு தாமரை ஆசை ''அ.தி.மு.க., கூட்டணியில என்ன நடக்குதுன்னு சொல்லவே இல்லையே...''
''லோக்சபா தேர்தல்ல, அண்ணாமலை ரெண்டாமிடம் பிடிச்சதுனால, ரெண்டு தொகுதி கேக்குறாங்களாம். அவரு, அசெம்ப்ளி எலக்சன்ல போட்டி போடுவாரான்னு விவாதம் ஓடிட்டு இருக்கு.
பா.ஜ.,வுக்கு கூடுதலா ஒரு தொகுதி ஒதுக்குனா, அ.தி.மு.க., சிட்டிங் எம்.எல்.ஏ., ஒருத்தருக்கு வாய்ப்பு கெடைக்காதுன்னு சொல்றாங்க. யார், யாருக்கு மறுபடியும் சான்ஸ் கொடுக்கலாம்னு, 'மாஜி' ஆலோசனை பண்ணிட்டு இருக்காராம். செப்.,க்கு அப்புறமே முடிவாகும்னு சொல்றாங்க...''
''அதென்ன, செப்., மாதம்...''
''மித்து... செப்., மாசந்தான் விஜய் ஊர் ஊரா பிரசாரத்துக்கு வரப்போறாரு. அவரும் நம்மூர்ல இருந்து துவக்குவாருன்னு த.வெ.க.,காரங்க சொல்றாங்க. பூத் முகவர்கள் மாநாட்டையே நம்மூர்ல ஆரம்பிச்சு, ஸ்டேட்டையே திரும்பிப் பார்க்க வச்சாங்க.
அதே மாதிரி, திறந்த வேன்ல விஜய் நகர் வலம் வர ஆரம்பிச்சாருன்னா, சிட்டியே கதிகலங்கிடும்னு உளவுத்துறைக்காரங்க நெனைக்கிறாங்க. விஜய்க்காக மூனு பிரசார வாகனம் ஸ்பெஷலா தயாராகி, சென்னைக்கு போயிருக்கு. அவருக்கு கெடைக்குற செல்வாக்கை பார்த்தே, எலக்சன் ரிசல்ட்டை கணிக்க முடியும்னு, உளவுத்துறையில இருந்து சொல்றாங்க...''
ரகசிய தேர்தல் கணிப்பு ''ஆளுங்கட்சி தரப்புல நம்ம டிஸ்ட்ரிக்ட்டுல இருக்கற, 10 தொகுதியிலும் மூனு விதமா ரகசிய தேர்தல் கணிப்பு நடத்துனாங்களாமே...''
''ஆமாப்பா... 'பப்ளிக் பல்ஸ்' தெரிஞ்சிக்கிறதுக்காக, ஆளுங்கட்சி வி.ஐ.பி., அவருக்கு நம்பகமானவங்க மூலமா ஆய்வு நடத்தி இருக்காரு. கிராமத்திலும் கூட விஜய் கட்சியை பத்தி சொல்லியிருக்காங்க. லேட்டஸ்ட்டா எடுத்த 'ரிப்போர்ட்'லயும், விஜய் கட்சி 'கிராப்' எகிறி இருந்திருக்கு.
செப்.,க்கு பின்னாடி இன்னும் செல்வாக்கு ஜாஸ்தியாகும். ஆளுங்கட்சி மேல இருக்கற பெரும்பாலான அதிருப்தி ஓட்டு, விஜய்க்கு போக வாய்ப்பு இருக்கு. இருந்தாலும் ஜெயிக்கிற அளவுக்கு ஓட்டு வாங்க முடியாதுன்னு சொல்றதுனால, உடன்பிறப்புகள் குஷியா இருக்காங்க.
இதுக்கு, லோக்சபாவுல கெடைச்ச கூட்டணி ஓட்டு, கொஞ்சமும் குறையக் கூடாதுன்னு நெனைக்கிறாங்க. இதே கூட்டல் கழித்தல் கணக்கை, இலைக்கட்சிக்காரங்களும் போட்டு வச்சிருக்காங்க. அதனால, விஜய் கட்சிக்காரங்களை 'வளைச்சுப்' போடுற வேலையை ஆரம்பிச்சிட்டாங்களாம்,''
பூத்துக்கு முன்னுாறு ''ஆளுங்கட்சிக்காரங்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் நடத்துற மாதிரி, விஜய் கட்சிக்காரங்களும் ஆரம்பிச்சிட்டாங்களாமே...''
''அதுவா... சராசரியா ஒரு பூத்துக்கு, 300 பேரை கட்சி உறுப்பினராக்கணும்னு சொல்லியிருக்காங்க. அதுக்கான வேலையில நிர்வாகிங்க எறங்கி இருக்காங்க. மாற்றத்தை விரும்புற ஜனங்க ஆதரிப்பாங்கன்னு, வீடு வீடா போக ஆரம்பிச்சிட்டாங்க. அவுங்களை லேடீஸ் ஆதரிக்கிறாங்களாம்,''
''ஆளுங்கட்சி புள்ளி வந்துட்டுப் போனதும், 'டேபிள் சப்ஜெக்ட்'டா தீர்மானம் நிறைவேத்திட்டாங்களாமே...''
''ஆமாப்பா... உண்மைதான்! காரமடை நகராட்சி கூட்டம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்துச்சு. கூட்டம் துவங்குறதுக்கு முன்னாடி, ஆளுங்கட்சியை சேர்ந்த மூன்றெழுத்து மாநில நிர்வாகி ஒருத்தரு ஆபீசுக்கு வந்தாரு.
'டவுன் பிளானிங்' செக்சனுக்கு போனாரு; கவுன்சிலர்களும் போயிருக்காங்க. கொஞ்ச நேரம் ஆலோசனை நடந்திருக்கு. அதுக்கப்புறம் லே-அவுட்டுக்கு அப்ரூவல் வழங்குறது சம்பந்தமான தீர்மானம், கூட்டத்துல 'ஓகே' ஆகியிருக்கு,''
மன உளைச்சலில் போலீசார் ''அரசியல் சப்ஜெக்ட் போதும். ஆயுதப்படை போலீஸ்காரங்க மன உளைச்சலில் இருக்கறதா காக்கிகள் வட்டாரத்துல பேசிக்கிறாங்களே... அதைப்பத்தி சொல்லுங்க...'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.
''என்னோட காதுக்கும் தகவல் வந்துச்சுப்பா. ஆயுதப்படையில டியூட்டி பார்க்குற லேடி போலீஸ்காரங்க நெலைமை, ரொம்பவே மோசமா இருக்குதாம். நேரடி எஸ்.ஐ.,களுக்கு மட்டுமே மரியாதை கொடுக்குறாங்க; மத்தவங்களை துச்சமா நெனைக்கிறாங்க.
அவுங்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்காம, நெருக்கடி கொடுக்குறாங்க. குழந்தைகளை கவனிக்கிறதுக்காக, லேடி போலீசார் பலரும் ஆயுதப்படையை விரும்புறாங்க. அதே மாதிரி, கணவனை இழந்த லேடி போலீசாரும், குழந்தைகளுக்காக இங்கே வேலை பார்க்குறாங்க. இவுங்களை ஸ்டேஷன் டியூட்டிக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்களாம்,''
''கோர்ட் டியூட்டி சம்பந்தமா முன்கூட்டியே சொல்லாம, கடைசி நேரத்துல சொல்றதுனால, டிரெய்ன்ல டிக்கெட் கெடைக்காம, பஸ்ல போக வேண்டிய சூழல் ஏற்படுது.
கஷ்டப்பட்டு சென்னைக்கு போயிட்டு வந்தா, மறுநாள் 'ரெஸ்ட்' கொடுக்காம, டியூட்டிக்கு வரச் சொல்லி நிர்ப்பந்திக்கிறாங்க. அதனால, பலரும் மனஉளைச்சல்ல இருக்காங்க,''
போலீசின் முணுமுணுப்பு ''அதெல்லாம் ஓகே... மாமூல் பேசி, டீல் முடிச்சிட்டாங்களாமே...''
''அதுவா... ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட செயலி யூஸ் பண்றவங்களை ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, துரத்தி துரத்தி பிடிச்சாங்க. லட்சக்கணக்குல 'பெட்' கட்டி, விளையாண்டவங்க சிக்குனாங்க. இப்போ, 'சைலன்ட்'டாகிட்டாங்க. என்னான்னு விசாரிச்சா, அதுவும் ஒரு 'காரணத்துக்கு'ன்னு புரிஞ்சது.
ஏற்கனவே போலீஸ்கிட்ட சிக்குனவங்க, இப்போ, 'தில்'லா 'பெட்' கட்டி, விளையாடிட்டு இருக்காங்க. இதுக்கு மாசம் தலா அஞ்சாயிரம் ரூபா 'விலை' நிர்ணயம் பண்ணிருக்காங்க. இந்த வகையில மட்டும், ஒன்றரை 'ல'கரத்துல இருந்து ரெண்டு 'ல'கரம் வரைக்கும் மாமூல் போகுது,''
லஞ்சத்தில் திளைக்கும் ஆபீசர் ''அன்னுார்ல ஒரு ஆபீசர், லஞ்சம் கொடுக்கலைன்னா எந்த வேலையும் செய்றதில்லையாமே...''
''நீ சொல்ற ஆபீசரு யாருன்னு புரியுது... அந்த நான்கெழுத்து இ.பி., ஆபீசர் மின் கம்பத்தை மாத்தி நடுறது; டிரான்ஸ்பார்மர் வைக்கிறது; புதுசா மின் கம்பம் நடுறது; உயரழுத்த மின் இணைப்பு கொடுக்கறதுன்னு, எதுக்காக யார் வந்தாலும் கேக்குற லஞ்சத்தை எடுத்து வைக்கணுமாம்.
லஞ்சத்தொகை கை மாறலைன்னா, பர்மிஷன் தர மாட்டாராம். அதுக்கப்புறம் மின் வாரிய பதிவேட்டிலும் எழுதி, கவர்மென்ட் அலாட் பண்ற பணத்தையும் சுருட்டிடுறாராம்.
மின்வாரிய உயரதிகாரிகள் காதுக்கும் விஷயம் போயிருக்கு; இதுவரைக்கும் எந்த ஆக்சனும் எடுக்கலையாம். அவுங்களுக்கும் பங்கு போகுமோன்னு, பப்ளிக் பேசிக்கிறாங்க,'' என்றபடி, ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயில் முன், ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.
இருவரும் கோயிலுக்குள் நுழைந்தனர்.