/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
கன்டெய்னரில் வந்திறங்கியதாம் 'பரிசு': கண்டுக்காததால் நிரம்பியதாம் 'பர்சு'
/
கன்டெய்னரில் வந்திறங்கியதாம் 'பரிசு': கண்டுக்காததால் நிரம்பியதாம் 'பர்சு'
கன்டெய்னரில் வந்திறங்கியதாம் 'பரிசு': கண்டுக்காததால் நிரம்பியதாம் 'பர்சு'
கன்டெய்னரில் வந்திறங்கியதாம் 'பரிசு': கண்டுக்காததால் நிரம்பியதாம் 'பர்சு'
UPDATED : ஜன 06, 2026 10:09 PM
ADDED : ஜன 06, 2026 05:03 AM

வராண்டாவில் அமர்ந்து நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா, 'மாஜி' அமைச்சர் வேலுமணி, திருச்சிக்கு போயி, அமித்ஷாவை சந்திச்சிட்டு வந்திருக்காரே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.
''அவர் பாஜ மேலிட தலைவர்கள்ட்ட எப்பவுமே நெருக்கமா இருக்காரு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்மூர்ல நடந்த, 'தமிழகம் தலைநிமிர, தமிழனின் நடைபயணம்' நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு, பிரதமரை வானுயரத்துக்கு புகழ்ந்து பேசுனாரு. பாஜ கட்சிக்காரங்க கூட அந்தளவுக்கு பேசலை. மத்திய அரசு என்னென்ன திட்டங்கள கொண்டு வந்திருக்குன்னு பட்டியல் போட்டாரு,''
''அடேங்கப்பா...'' என்ற சித்ரா, ''அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு வருதாமே...'' என, கேட்டாள்.
''இந்த வார கடைசியில நேர்காணல் நடக்குது. தேர்தல் அறிக்கை குழு பொங்கலுக்கு அப்புறம் வருது. மக்களை கவரக் கூடிய திட்டங்களை அறிவிக்கணும்னு கட்சிக்காரங்க சொல்றாங்க''
''தேர்தல் அறிவிப்புக்கு முன்னாடியே நம்மூருக்கு மத்திய அமைச்சர்கள் படை வருதுன்னு சொல்றாங்களே...'' என்றாள் மித்ரா.
'''ப்ரொபஷனல்ஸ் கனெக்ட்'ங்கிற நிகழ்ச்சியில பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் கலந்துக்கிறாரு. அடுத்த மாதம் இளந்தாமரை மாநாடு 2.0 நிகழ்ச்சி ஏற்பாடு செய்றாங்க. அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன்ராம் மேக்வால், முரளிதர் மொஹோல் கலந்துக்குவாங்களாம். இது வெறும் தொடக்கம் தானாம்'' என்றாள் சித்ரா.
காபியை உறிஞ்சியபடி, ''பல்லடம் மாநாட்டுக்கு மகளிரை திமுககாரங்க திரட்டினாங்களே... அதுல சில நிர்வாகிகள் பலமா சுருட்டிட்டதா சொல்றாங்களே...'' என்று இழுத்தாள்.
''கட்சிக்கொடி கலர்ல சுடிதார், சேலை கொடுத்தாங்க. தையல் கூலியும் கொடுத்தாங்க. பஸ் ஏற்பாடு செய்தாங்க. பிரியாணி பார்சல், ஒரு பை ஸ்நாக்ஸ் கொடுத்தாங்க. ஒவ்வொரு செலவும் ஒவ்வொரு தொழில் செய்ற புள்ளிகள் ஸ்பான்சர் செஞ்சாங்களாம்..” என்றபோது, சித்ரா குறுக்கிட்டாள்.
”காசு, பணம், துட்டு.. அத பத்தி சொல்லு..”
“சொல்றேன்க்கா... பெண்கள் ஒவ்வொருத்தருக்கும் 500 கொடுக்கச் சொல்லி, மேலிட உத்தரவாம். ஆனா 300, 200 தான் கொடுத்தாங்க. மீதியை நிர்வாகிகளே அள்ளிக்கிட்டாங்களாம்...''
''இதெல்லாம் சகஜமப்பா... கன்டெய்னர் நிறைய பரிசுகள் வந்து இறங்கிருக்காமே...''
''பொங்கலுக்கு வார்டு வாரியா விழா நடத்தி, வீடு வீடா மக்களுக்கு பரிசு கொடுக்க போறாங்களாம். சிங்காநல்லுார் தொகுதிக்கு கன்டெய்னர் வந்தாச்சு. மற்ற தொகுதிகளுக்கு ஆந்தி-வே யாம். அரிசி கொட்டி வைக்கறதுக்கு பெரிய்ய சில்வர் டிரம் கொடுப்பாங்களாம்..''
''வேளாண் பல்கலை அடக்கி வாசிக்குதாமே... ஏனாம்...''
''இன்னமும் துணைவேந்தர் நியமிக்கலை. பதிவாளரா இருந்த தமிழ்வேந்தனை, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்துக்கு மாத்துனாங்க. அங்க இயக்குனரா இருந்த சுப்ரமணியனை, இங்கே பதிவாளரா நியமிச்சிருக்காங்க. பொறுப்பேத்து ரெண்டு வாரம் ஆச்சு; அறிக்கை கூட வெளியிடாம பல்கலை நிர்வாகம் அமைதியா இருக்கு. என்னமோ நடக்குது..ன்னு பேராசிரியர்கள் பேசிக்கிறாங்க''
''உளவுத்துறையினரை முன்னாள் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அழைச்சு கவுரவிச்சாராமே...''
''ஆமாக்கா, அவரை மேற்கு மண்டல ஐ.ஜி.யா நியமிச்சிருக்காங்க. புத்தாண்டு அன்னைக்கு உளவு பிரிவை சேர்ந்தவங்களை தன் அலுவலகத்துக்கு அழைச்சு, தனித்தனியா பொன்னாடை போர்த்தி, டைரி கொடுத்து நன்றி சொல்லிருக்காரு. எந்த கமிஷனரும் இப்படி கவுரவிச்சது இல்லையாம்..'' என்ற மித்ரா, ''லஞ்ச ஒழிப்பு போலீஸ் செயல்பாடு சந்தேகப்பட வைக்குதுன்னு சொல்றாங்களே,'' என, கொக்கி போட்டாள்.
''ஆமா, மித்து! எந்த ஆபீசிலும் லஞ்சம் கொடுக்காம எந்த வேலையும் நடக்கறதில்லை. ஆனா, வருஷத்துக்கு 20 வழக்குதான் பதிவு செய்றாங்க. பத்திர பதிவு அலுவலகத்துல அவங்களே பணத்தை வச்சு, சோதனை செஞ்சு கைப்பத்துனதா சொல்லிருக்காங்க. புரோக்கர் ஒருத்தரு, தன்கிட்ட குடுத்து தான் ஆபீஸ்க்கு உள்ளே பணத்தை வைக்க சொன்னதா பெருமையா பேசிட்டு இருக்காராம்.. அதை கேள்விப்பட்டு இவங்க கொஞ்சம் கலக்கத்துல இருக்காங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.
பின் இருக்கையில் அமர்ந்த சித்ரா, ''மித்து, ஐகோர்ட் கண்காணிப்புல இருந்தும் ரிசார்ட்ஸ்கள்ல புத்தாண்டு கொண்டாட்டம் தடபுடலா இருந்துச்சாமே...'' என கேட்டாள்.
''ஆமாக்கா, தடாகம் பள்ளத்தாக்கு ரிசார்ட்ஸ்ல புத்தாண்டு கொண்டாட்டம் நடந்திருக்கு. வனத்துறை தரப்புல இரண்டு செக்போஸ்ட், காவல்துறை தரப்புல இரண்டு செக்போஸ்ட் இருக்கு. யாராச்சும் மதுபானங்கள் எடுத்துட்டு போனா, ரிசார்ட்ஸ்ல இருந்து போன் வருது. சரக்கு தாண்டி போகும்வரை, இவங்க திரும்பி நின்னுக்குவாங்களாம். அதுக்காக நல்ல கவனிப்பாம் ; ஆளாளுக்கு பர்ஸ்ச பெரிசாக்கிட்டு வீட்டுக்கு போனாங்களாம்...''
''உலகம் பூரா செக் போஸ்ட் இப்டிதான் இருக்கும் போல. கொண்டாட்டம், விடுமுறை எல்லாம் வரும்போது இத்தனை செக் போஸ்ட் அமைப்போம்னு அறிவிக்கிறதே கோர்ட் கேட்டா பதில் சொல்றதுக்காகத்தான்னு தோணுது.
ரிசார்ட்ஸ்ல வழக்கம்போல குத்தாட்டம் போட்டிருக்காங்க. வன விலங்குகளை பாதிக்கற அளவுக்கு இருந்த ஒலி, ஒளி அளவுகளை வன ஆர்வலர்கள் வீடியோவுல பதிவு செஞ்சிருக்காங்க. அதை எல்லாம் கோர்ட்ல தாக்கல் செஞ்சா என்ன நடக்குதுனு பாக்கணும்..'' என்றபடி, மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.

